Saturday, December 1, 2012

குருஷேத்திரம்















‘வாயடைத்துப் போச்சு நண்பா, வராதாம் ஒரு சொல்லும்...’ என்று கவிஞர் முருகையன் எழுதினார். அதேநிலைமைதான் நமக்கும் இப்போது. எதைச் சொல்லவும் அச்சமாக இருக்கிறது. எதைப்பற்றிச் சொன்னாலும் எவருக்கோ பிடிக்காமற் போகிறது. பிடிக்காதவர்கள் கோவிக்கிறார்கள். அல்லது வசை பாடுகிறார்கள். அல்லது சொல்வதைத் தடுக்கப்பார்க்கிறார்கள்.
வன்முறைகள் முடியவில்லை. அவை ஏதோ ரூபங்களில் எங்கிருந்தெல்லாமோ வருகின்றன.

போர்க்காலத்தில்தான் அச்சம் இருந்ததென்றில்லை. போர் முடிந்த பிறகும் அச்சம் நீடிக்கிறது. அது ஒரு தீராத நோயைப்போல இலங்கையைப் பீடித்திருக்கிறது. இலங்கையிலும் தமிழர்களிடம்தான் அது ஒட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் எங்கே இருந்தாலும் அங்கேயெல்லாம் எதையும் சொல்ல முடியா அச்சம் தொடருகிறது.

‘இந்தத் தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலென்ன, இலங்கையில் இருந்தாலென்ன, புலம்பெயர்ந்து தூரதேசங்களில் இருந்தாலென்ன? எல்லோரின் மனதிலும் வன்முறைகள் கூடுகட்டியிருக்கின்றன’ என்று வன்னியில் போருக்குத் தப்பி, இந்தியாவுக்குப் போய், அங்கே சமாளிக்க முடியாதென்று மீண்டும் இலங்கைக்கு வந்து வெளியே போகத்துடித்துக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் சொன்னார்.

வாயடைத்துப் போகும்படியாகவே இலங்கைத்தீவின் நிலைமைகள் கடந்த முப்பதாண்டுகளாக இருக்கின்றன. குண்டாந்தடிகள், துப்பாக்கிகள், பேனாக்கள், வதந்திகள் என்று இந்த வன்முறை ஆயுதங்கள் மிகக் கூர்மையாகவே இருக்கின்றன.

‘எதிரியிடமும் வாய் திறக்க முடியாது நண்பரிடமும் வாய் திறக்க முடியாது. பாருங்கள் எங்களின் நிலைமையை’ என்று ஒரு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மாத்தளன் பாடசாலையில் அமைந்திருந்த போர்க்கால ஆஸ்பத்திரியில் கண்களில் நீர் தழும்ப, குரல் தழதழக்கச் சொன்னார்.

அவரைப் பொறுத்தவரை வளர்த்த கடாவும் மார்பிலே பாய்ந்தது. வந்த கடாவும் மார்பிலே பாய்ந்தது.

வயிற்றிலே பட்டகாயத்தோடு அவருடைய மனைவி இருந்தார். கையிலே பட்ட காயத்தோடு மகன் இருந்தான். காலிலும் கையிலும் பட்ட காயத்தோடு போராளியாக்கப்பட்ட மகன் இருந்தான். இரண்டு மகன்மாருக்கும் இரண்டு பிள்ளைகள்.

ஒரு தரப்பாள் கூடாரத்துக்குள், புடவைகளை சாக்குப் பைகளைப்போல ஆக்கி மண் மூடைகள் அமைக்கப்பட்ட அந்தச் சிறிய பதுங்கு குழிக்குள் இனியும் இருந்து இந்த நிலையில் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவர் மாத்தளன் ஆஸ்பத்திரியில் வந்து நின்றார்.

அங்கேயிருந்துதான் கப்பலில்  திருகோணமலைக்குப் போகலாம். ஐ.ஸி.ஆர்.ஸி யின் கப்பல் அது. உணவையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு வந்து இறக்கி விட்டு காயப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு போகும் கப்பல் அது.

காயப்படுகிறவர்களுக்காகவே கப்பல் ஓடியது ராமா அப்போது. அப்படியும் ஒரு கொடுமை நடந்தது இந்தப் பூமியிலே. அப்படியும் ஒரு காலம் இருந்தது எங்கள் வாழ்வினிலே.

அவர் வன்னியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வேலைபார்த்தவர். கல்வித்தொண்டு. ஏதோ உத்தியோகம் என்ற அளவில் அவர் எங்கும் யாருக்கும் படிப்பித்ததில்லை. அதற்கப்பால், தன்னுடைய வீடு, குடும்பம், மேலதிக வருவாய் என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் படிப்பித்தார்.
எஸ்.பொ சொல்வாரே ‘ஊழியம்’ என்று, அப்படி ஊழியஞ்செய்தார். சைக்கிளோடிப் படிப்பித்தார். காட்டுப்பாதைகளால் நீண்டதூரம் பயணஞ்செய்து பாடங்கள் நடத்தினார்.

பிறகு அவர் கல்வி அதிகாரியானபோதும் எங்கும் திரிந்தார். வன்னியின் அத்தனை மாவட்டங்களிலும் அவர் கால்கள் பட்டன. நல்லூழியன் ஒருவன் இருந்தற்கால், அவன் பாதம் இப்பூமி எங்கும் படாதோ! தனக்குக் கீழே பணியாற்றிய அத்தனை ஆசிரியர்களையும் அவர் ஆற்றுப்படுத்தி வளமாக்கினார். ஆசிரியர்களை வளமாக்கினால்தான் பிள்ளைகளும் பள்ளியும் வளமாகும் என்று நம்பியவர் அவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் அவரிடம் படித்தார்கள். அவரிடம் படித்தவர்களில் பலர் இந்த உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பல்வேறு நிலைகளில். பல தொழில்களில். பல பதவிகளில். அவர்களில் சிலர் வன்னியிலும் இருந்தார்கள். சிலர் போரில் ஈடுபட்டுக் கொண்டுமிருந்தார்கள். சிலருடைய பிள்ளைகள் போராளிகளாக இருந்தனர்.

போக, அவரைத் தெரிந்தவர்கள், அவரிடம் படித்தவர்களின் பிள்ளைகள் என்று எங்கேயும் ஏராளமானவர்கள் இருந்தனர்.

ஆனாலுமென்ன? அவர் இப்போது கண்கலங்க, தன்னுடைய முதிய வயதில், நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டு, காயப்பட்ட பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றுவதற்கு வழிதெரியாமல், அந்தப் போர்க்கால மருத்துவமனையில் வந்து நிற்கிறார்.

அவரைப்போல ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே கூட்டமாக நிற்கிறார்கள். காயப்பட்ட மனிதர்கள் மரங்களுக்குக் கீழும் பாடசாலைக் கட்டிடத்திலும் வளர்த்தப்பட்டிருக்கிறார்கள். இரத்தவெடில் மூக்கிலடித்து உடலைப்பதைக்கச் செய்கிறது. மரணக் கூச்சல். வேதனையின் முனகல் காதுகளைப் பிய்த்து இதயத்தை நடுக்கமுறச் செய்கிறது. இது ஒரு வழமைதான் என்றபோதும் அதை அறியாமலே இதயம் பதைக்கிறது.

அவர் அதிகாரியாக இருந்தபோது எத்தனை தடவைகள் அந்தப் பள்ளிக்கு வந்திருப்பார். முதலில் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்த காட்சியும் கடைசியாக அவர் ஓய்வு பெறுவதற்கு முன் வந்த காட்சியும் நினைவுக்கு வந்தன. ஆனால், இப்படியொரு நிலையில் அவர் அங்கே வருவார் என்றோ, இந்தப் பாடசாலை இப்படி சாவேந்திய நிலைக்குப் போகும் என்றோ அவர் எதிர்பார்த்திருக்கவேயில்லை. எல்லாவற்றையும் ஒரு கணம் நினைத்தார். கண்கள் உடைந்தொழுகின.

வடக்குப் பக்கமாக நிற்கும் மரத்தின் கீழே 30 க்கு மேற்பட்ட சடலங்கள் போடப்பட்டிருக்கின்றன. இரத்தமும் சிதிலமுமான அந்தச் சடலங்களில் மொய்த்திருக்கும் இலையான்களைக் கலைப்பதற்கு அங்கே யாருமே இல்லை. சில சடலங்களின் உறவினர்கள் புலம்பி அழுதுகொண்டிருக்கின்றனர். மற்றதெல்லாம் அநாதைச் சடலங்களாகிவிட்டன.

எல்லாவற்றுக்கும் மாத்தளன் மணல் வெளியில் ஒரே புதைகுழி. சடங்கு சம்பிரதாயமெல்லாம் கிடையாது.

இந்த நரகத்திலிருந்து, இந்த மரணக் குழியிலிருந்து  மீளவேண்டும் என்ற தவிப்போடு கப்பலேறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருக்கிறது பெருங்கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒருவராக, கப்பலேறுவதற்கு அனுமதி கோரிக்கொண்டு நிற்போரில் ஒருவராக, அவருடைய கோரிக்கை பொருட்படுத்தப்படாத போது கெஞ்சிக் கொண்டு நிற்போரில் ஒருவராக அவர் நின்றார்.

இப்படி அவர் நான்னகு நாட்களாக வந்து காலையில் இருந்து மாலைவரை – கப்பல் வந்து திரும்பும்வரை காவல் நின்று திரும்புகிறார். அவரைத் தெரிந்த மருத்துவர்கள் பார்க்கலாம் நில்லுங்கோ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால், யாரும் மீண்டும் வந்து அவரைப் பார்த்ததில்லை. அதையிட்டு அவர் கவலைப்பட்டதும் கிடையாது. நிலைமை அப்படி. அவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவர். அதனால் அவர்களை, அவர்களின் நிலையைப் புரிந்து கொண்டார்.

மெலிந்து தளர்ந்த உடலால் தொடர்ந்தும் அங்கே நிற்க முடியவில்லை. அவருக்கத் தலை சுற்றிக் கொண்டு வந்தது. கப்பலுக்காகச் சனங்கள், காயக்காரர்கள் அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கண்கள் மங்கி, காட்சிகள் சரியாகப் புலனாகாத போதும் அவருக்கு எதுவோ புலப்பட்டது. என்ன? யார் அது? யார்... யார்..? அவர் தலையை ஒரு முறை சிலுப்பிக் கொண்டு உற்றுப்பார்த்தார்.

அவருக்குத் தெரிந்தவர்கள், காயமே படாதவர்கள், கப்பலில் போகக் கூடிய சூழ்நிலை இல்லாதவர்கள் கப்பலுக்காகப் போகிறார்கள். எப்படி இது சாத்தியம்? இந்த அனுமதி இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? அதை விட இப்படி இவர்கள் போவதென்றால், அடுத்ததாக இங்கே – வன்னியில் என்னதான் நடக்கப்போகிறது? அப்படியென்றால் யார் மிஞ்சி நிற்பது?

அப்படியென்றால் காயப்பட்டிருக்கும் எங்களுக்கு ஏன் அனுமதி கிடைக்கவில்லை? தான் ஒரு நீரிவு வியாதிக்காரன் என்றபோதும், உடல் நிலை மோசமாகியுள்ளது என்று தெரிந்தபோதும் ஏன் அனுமதிக்கு இழுத்தடிக்கிறார்கள்? அதைவிட இப்படி அவருக்குத் தெரிந்தவர்கள் - வன்னிக்கு வெளியே போகமுடியாதவர்கள் போகிறார்கள். இது எப்படி, இது எதற்காக? அதுவும் பிள்ளைகளுடன்?

அவருக்குத் திக்கென்றது. அவருடைய கடைசி மகன் போராளி. ஆனால், காயப்பட்டபிறகு வீட்டில் நிற்கிறான். வீடா? ஏங்கே இருக்கிறது அது? தரப்பாள் கொட்டகை. அதுவும் ஒரு தூர்ந்து போன துரவுக்குப் பக்கத்தில், மரத்துக்குக் கீழே. அந்தத் தரப்பாள் கூடாரத்தைப் போடுவதற்காக இடம் கிடைக்காமல் அவர்கள் பட்டபாடு.

அதுவும் இரண்டு நாள் தவணையில். பிள்ளையையும் மனைவியையும் ஒரு இடத்தில் பாதுகாப்பாக விட்டுப் போக வந்தவன். அது முடிய அவன் போகவேணும்.

அவன் அங்கே இனிப் போகத்தான் வேணுமா? அவர் அங்கே தொடர்ந்து நிற்கவில்லை. கப்பலுக்காகக் காத்திருப்பதில் எந்தப் பயனும் இருக்கப்போவதுமில்லை. அந்த மரணவெளியில் இருந்து தப்புவற்கு அவருக்கு வழியும் தெரியவில்லை.

கண்கள் கலங்க, எதுவுமே செய்யத் தோன்றாமல் சிலகணம் அப்படியே நின்றார். அம்புலன்ஸ் வண்டிகள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தன. உழவு இயந்திரங்களிலும் காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். அந்த வாகனங்களில் ஒன்றில் யாரையும் கேட்காமல் ஓடிப்போய்ப் பாய்ந்து ஏறுவோமா என்று ஒரு கணம் யோசித்தார்.
தான் என்ன தனி ஒரு ஆளா அப்படிப் போவதற்கு?

அவர் அப்படியே நிலத்தில் குந்தியிருந்து விம்மி விம்மி அழுதார். அவர் அப்படி அழுவதைப் பார்த்த யாரோ அவருடைய மாணவர்களோ அல்லது அவருடன் வேலை செய்தவர்களோ ஓடிவந்து அவரை ஆறுதற் படுத்த முயன்றார்கள்.
நாங்களே வளர்த்தம். நாங்களே இப்ப எல்லாத்துக்குமாத் துக்கப்படுகிறம். இப்ப வெளியில சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கிறம் என்று சொல்லி விம்மினார்.

நல்லது நடக்கட்டும் என்றே எல்லாவற்றுக்கும் ஆதரவளித்தோம். ஆனால்...
அவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. பேசாமல் கூடாரத்துக்குப் போய் விட்டார். நடப்பது நடக்கட்டும் என்பது அவருடைய முடிவு. இவ்வளவு சனங்களுக்கும் நடப்பது தன்னுடைய குடும்பத்துக்கும் நடக்கட்டும் என்பதே அவருடைய எண்ணம்.

அழுகி மணக்கும் காயங்களோடு அந்தக் குடும்பம் அந்தத் தரப்பாளின் உள்ளே சிலநாட்கள் இருந்தன. எறிகணைகள் வந்து வீழ்ந்தாலும் அவர் ஒரு போதுமே பதுங்குகுழிக்குள் போனது கிடையாது. எதையோ யோசித்துக் கொண்டு பேசாமல் இருப்பார். பதுங்கு குழிக்குள் வரும்படி அவரைக் கூப்பிடுவார்கள். ஆனால், அவர் அசையவே மாட்டார்.

பிறகு, மாத்தளன் பகுதியால் அவர் படையினரிடம் போன சனங்களோடு போனார். அன்று மாத்தளனுக்கு வந்த கப்பல் அங்கே பொருட்களை இறக்க முடியாமல், காயக்காரர்களை ஏற்ற முடியாமல், நிலைமை மாறிவிட்டது என்று நீண்ட நேரம் கடலிலேயே நின்றது. புதிய இடத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

கப்பலுக்காகக் காத்து நின்ற சனங்கள், கெஞ்சிய சனங்கள் எல்லாம் களப்புக்குள்ளால் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.  அங்கே அவரை விசாரித்த ஒரு படை அதிகாரி கேட்டான்,

‘ ஏன் நீங்கள் ஏற்கனவே வரவில்லை?’

அவர் சொன்னார்,

‘என்னிடம் படித்தவர்கள், எனக்கு அடிப்பதை நான் விரும்பவில்லை. நான் படிப்பித்தவர்களிடம் போய்க் கெஞ்சி வழிகேட்க நான் விரும்பவில்லை. இப்ப வந்திருக்க வழியும் வந்திருக்கிற இடமும் நான் விரும்பியதும் இல்லை’.

அவர் திரும்பிப்பார்த்தார், அந்த மாத்தளன் பாடசாலையில் படையினர் குவிந்து கொண்டிருந்தார்கள். அது படைத்தளமாக மாறிக்கொண்டிருந்தது.

00

No comments: