Saturday, November 3, 2012

மெழுகாய்க் கனிந்த ஆஸ்பத்திரியில் புன்னகையைத் தவறவிட்ட பெண்























மெழுகாய் உருகிக் கொண்டிருந்த ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன்
இருபத்தி நான்காம் அறை
நாற்பத்தி ஏழாம் இலக்கக் கட்டில்
புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண் 
அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு.

மருத்துவத் தாதி என்பது 
சிகிச்சைக்கும் ஆதரவுக்கும் இடையில் கனிந்த மலர் என்பதுவா 
உதிர்ந்த மலர் என்பதுவா 
என்றறிய விரும்பிய மனதில் 
கத்திகளும் காயங்களும் மாறி மாறி விழுகின்றன.

அருகே,
முகத்தை மறைக்க விரும்பிய கிழவனொருவன்
அகத்தை மறைக்க முடியாமற் திணறிப் புலம்பினான்.
அவனிடம் உருக்குலைந்த விதியைக் கண்டேன்.
மலத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாட்களைத் தள்ள முடியாமல்
விதியின் ஓரத்தில் அவனிருக்கையில்
அவனைப் புதுப்பிக்க முயல்கிறது மருந்தின் வாசனை. 

என்னையும்தான்.

வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் 
புன்னகைக்குத் தாவும்படி என்னைச் செய்யும் மந்திரத்தை 
அந்த மருத்துவர் இன்னும் உச்சரித்துக் கொண்டேயிருக்கிறார். 

இனிப்பும் மகிழ்வுமாக இருந்த 
என்னுடல் பாரமாகிக் கனக்கிறது
வலியும் வேதனையுமாகிக் கனக்கும் 
இந்தவுடல் காற்றாகிடத் துடிக்கிறது.

அப்படியே தன்னுடலும் என்கிறான் வலி பெருத்த மற்றவனும்
இன்னொருவனும் இன்னொருவரும்...

அந்த மருத்துவமனை வலியால் நிரம்பியதா
வலியைப்போக்கும் மந்திரத்தினால் நிரம்பியதா 
அறியேன்
ஆனால்,
இரண்டுக்குமிடையி்ல் அது போராடிக் கொண்டேயிருக்கிறது முடிவற்று.

அங்கிருந்து நான் வெளியேறினாலும்
அது அப்படித்தானிருக்கும்
வலிக்கும் வலி நீக்கத்திற்குமிடையில்.

ஒரு மருத்துவமனையின் விதியென்பது 
வலிக்கும் வலியை நீக்குவதற்கு மிடையில் 
ஓயாது ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலா?

இன்னும் நான் அதே கட்டிலில்தான்.

வழுகிச் செல்லும் புன்னகையை
விலத்திச் செல்ல முடியாமல்
திரும்பி வரும் தாதியிடம் எதையோ சொல்லத் தேடினேன்,
அவளிடமிருந்த கவனமற்ற நிலையிலும் மிச்சமாக இருந்த ஈரத்தை.

மெழுகாய்க்கனிந்து கொண்டிருந்த ஆஸ்பத்திரியில்
எனக்குப் பதிலாக இன்னொருவர்
மேலும் இன்னொருவர் என 
வந்து கொண்டிருப்போருக்கிடையில்
புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண்
அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு.

மருந்தின் வாசனை 
மகிழ்ச்சிக்கும் வேதனைக்கும் இடையில் 
சுகமின்மைக்கும் சுகத்திற்குமிடையில் 
சித்து விளையாடிக் கொண்டிருக்கிறது கணந்தோறும்.



00

No comments: