கவிதை ஒரு அழியாப்பொருள். மனித மனம் உள்ள வரை, மன இயக்கம் நிகழும் வரை கவிதை வாழ்ந்துகொண்டிருக்கும். மனதின் வெளிப்பாடாகவும் மனதின் உள்வாங்கலாகவும் கவிதையின் தொழிற்பாடு நிகழும். இயற்கை இருக்கும் வரையில், இயற்கை அழிப்பு நிகழும் வரையில், பிரச்சினைகள் தோன்றிக்கொண்டிருக்கும் வரையில் அவை தீர்க்கப்படும் வரையில் என எல்லாவற்றோடும் எப்போதும் கவிதை இருந்து கொண்டிருக்கும். இறுதிக்கவிதை என எந்தவொரு கவிதையும் இருக்கப்போவதில்லை. ஏனெனில், கவிதை காலத்தோடு இணைந்தது. காலத்தை தன்னுடன் இணைப்பது. காலத்தை தன்னுள் ஏந்தி வைத்திருப்பது. எனவே, காலமுள்ள வரையில் கவிதையும் இருக்கும்.
கவிதை, மனதின் ஆன்மாவாக, இனத்தின் உணர்வாக, சமூகத்தின் உணர்வாக, காலத்தின் தடமாக, மொழியின் உயிர்ப்பாக என விரிந்த தளத்தில் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. மொழியும் அனுபவமும் சிந்தனையும் இணைந்த ஒரு பேரியக்கமாக கவிதையின் தொழிற்பாடு நிகழ்கிறது. கவிதை எண்ணற்ற வடிவங்களுடையது. எல்லையற்ற பொருள்களை உடையது. பரிணாமத்தையும் பரிமாணங்களையும் தன்னுள் கொண்டியங்குகின்றது. அது பெரிதும் உணர்வு சார்ந்தது. அனுபவத்தை தூ}hண்டும் உணர்வாகவும் அனுபவத்தைக் கோரும் உணர்வாகவும் அது இருக்கின்றது. உணர்வைக் கோருகின்றது மனம். அது உணர்வை வெளிப்படுத்துகின்றது. இந்த இருநிலைச் செயற்பாட்டில் கவிதையும் நிகழ்கின்றது. இங்கே அமரதாஸின் கவிதைகளும் இந்த தன்மைகளுடனேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அமரதாஸ் 23 வயது இளைஞர். ஈழக்கவிஞர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்து எழுதத்தொடங்கியவர். இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர். ஒளிப்படக்கலைஞர். வாழ்வின் சகல விடயங்களைப் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர். புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப்பின் புலங்களை உணரமுடியும். இவற்றுக்கு அப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் கூட இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும். அவற்றில் ஓரம்சமாக இருப்பது இவர் கவிதைகள் பெருமளவுக்கும் காட்சிரூபமான உணர்வைக் கிளர்த்துபவை. படிக்கும் மனதில் காட்சியை வரித்து, கோலங்களைக் காண்பிக்கும் ஒரு வழிமுறையை தனது கவிதைகளில் பெரிதும் கொண்டியங்குகின்றார். அமரதாஸ் ஒரு நல்ல ஒளிப்படக்கலைஞர் என்பதால் இந்தத் தன்மை இவருக்கு அதிகமும் வாய்த்திருப்பதாகப் படுகின்றது.
அமரதாஸ் அனுபவ முதிர்ச்சியையும் அழகியல் உணர்வின் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் கவிதைகளை இந்த தொகுதியில் தருகின்றார். இதை முகம் பற்றி கவிதையில் இவர், தன் முகத்தை தான் தேடுதலிலும் தான் காணும் முகங்களில் தனக்கான முகங்களைத் தேடுதலிலும் அடையாளங்களைக் காண்பதிலும் அதிகமும் உணரமுடிகின்றது. இது போல சுயத்தை உருவாக்குவதிலும் சுயமாக இருப்பதிலும், சுயசுதந்திரத்தை சுயமாக அனுபவிப்பதிலும் சுதந்திரத்தைச் சுயஉழைப்பினாலேயே பெறுவதிலும் சுயத்தை நிர்மாணிப்பதிலும் இருக்கும் நிறைவை, நியாயத்தை, அழகை, உண்மையை வெளிப்படுத்துகின்றார். சிலையின் உயிர் கவிதை உணர்த்தும் இந்தச் சுயம் பொதுவானது. அதேவேளை தனியானதும்கூட. தேச விடுதலையாக, பண்பாட்டின் தேடலாக, அதன் புதிதாக்கலாக, எமது வாழ்வைக் கண்டெடுத்தலாக எம்மை நாமே ஒழுங்குபடுத்தலாக என்று இன்னும் பல பரிமாணங்களில் தன்னை விரிக்கும் இந்தக் கவிதை நேர்த்தியும் ஆழமும் கூடியது.
இயற்கை மீதாக நேசிப்பையும் இயற்கைக்கும் மனிதனுக்குமானஉறவையும் முரணையும் இவரது கவிதைகள் பேசுகின்றன. விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தறிப்பு, குளம் பற்றி, வனம் பற்றி என்பன இந்த வகையில் கூடுதல் அழுத்தமுடையவை.
வாழ்வு நிகழும் காலத்தையும் சூழலையும்தளமாகவும் பொருளாகவும் உள்ளடக்கி, அகவெளிப்பாடாகியுள்ள இந்தக் கவிதைகளில் எமது வாழ்வின் பிரதிபலிப்புக்களைக் காணலாம்.
அமரதாஸின் கவிதைகள் அமைதியும் தீவிரமும் உடையவை. நிததானமானவை. மொழிச்செம்மையை உடையவை. ஒருமுகப்பட்ட தன்மையை நிராகரித்து கவிதைக்குரிய பன்முகப்பண்புடனும் பரிமாண இயல்போடும் பொருள் உணர்த்துபவை. காட்சி ரூபமாக விரிபவை. எதனிலும் கட்டுண்டு போகாமலும் எதனையும் சாராமலும் தனித்திருப்பவை. சுயாதீனத்தைக் கோருபவை. காலத்தை முடிச்சிட்டும் அவிழ்த்தும் பார்க்கும் இயல்புடையவை. இத்தகைய பண்புகளைக் கொண்ட கவிதை முறைமையை ஈழத்தின் இன்றைய கவிஞன் கடைப்பிடிப்பது அப+ர்வமானது.
ஈழத்தின் நவீன கவிதைப்பண்பு அநேகமாக சமூக இயக்கத்தின் புறவெளிப்பாடுகளையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. இதையே படைப்பாளிகளும் விமர்சகர்களும் கடைப்பிடித்தும் வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார்கள். ஒரு மெலிதான நெகிழ்ச்சியிள் மூலம் அதிலிருந்து சற்றுவிலகி மகாகவி, நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், மு.பபொ., சு.வி உட்பட வெகு சிலர், அக உணர்வுத்தரிசனத்தையும் கவிதையாக்கியுள்ளனர். இந்தப் பண்பு நிலையிலேயே அமரதாஸ{ம் தனித்துவத்துடன் இயங்குகின்றார்.
ஈழத்துக் கவிதை இரண்டு போக்குகளைக் கொண்டே இயங்கி வந்திருக்கின்றது. ஆர்ப்பாட்டமும் வேகமும் உள்ள கவிதைகள் ஒன்று. அமைதியும் நிதானமும் தீவிரமும் இணைந்த போக்கு மற்றையது. அமரதாஸ் இந்த இரண்டாவது போக்கிலேயே இயங்குகின்றது. தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் வேகமும் உள்ள கவிதைளுடனேயே அதிகமும் பரிச்சயம் கொண்;டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் எதிர்பார்க்கையும் இவ்வாறான கவிதைகளையே கோருகின்றது. இதனால் நெகிழ்ச்சியும் நிதானமும் தீவிரமும் கொண்;ட கவிiதைகள் மிகப்பிந்தியே வாசகர்களிடம் அறிமுகமாகின்றன. இதுவே மகாகவி, நீலாவணன் போன்றோருக்கும் நிகழ்ந்தது. இந்நிலையே இன்றும் தொடர்கின்றது. காலம் பிந்திய கவனிப்பாகவும் கவனிக்கத்தவறிய கணிப்பாகவும் இந்நிலை பராமரிக்கப்படுகின்றது. இத்துயர நிலையை தகர்ப்பது வாசகனிடத்துள்ள முக்கிய பொறுப்பாகும்.
ஏற்கனவே பரிச்சயம் கொண்ட வாசிப்பு முறையினூடாக ஒரு புதிய கவிதையை அணுக முடியுமென எதிர்பார்ப்பது முற்றிலும் பொருத்தமானதல்ல. இங்கே அமரதாஸ் தன் கவிதைகளுடனான உறவை வாசகன் கொள்வதற்கு புதிய விரிந்த அனுபவத்தை வாசகனிடத்தே கோருகின்றார். சுருங்கிய வட்டத்துள் உறவைக் கொண்டிருக்கும் ஒரு வாசகன் அமரதாஸின் இந்தக் கவிதைகளை உணரமுடியாமல் தவறிவிடுவான். இந்த தொகுதியில் புத்தகம் பற்றி என்ற கவிதை மிக முக்கியமான சவால்களை வாசகனிடத்தில் எழுப்புகின்றது. வாசகன் தன் அனுபவங்களுடனும் சிந்தனைகளுடனும் இக்கவிதையை எதிர்கொள்ள வேண்டியதாகின்றது. இத்தொகுதியில் உள்ள சில கவிதைகள் நெடுங்கவிதைகளுக்கான அடையாளக்கூறுகளைக் காடடுகின்றன. அதேவேளையில் இவற்றின் பல பகுதிகள் தனித்தனிக் கவிதைகளாகவும் சேர்த்துப் பார்க்கையில் முழுக்கவிதையின் வடிவத்தோடும் இணைந்திருக்கின்றன. இவற்றில் புத்தகம் பற்றி என்ற கவிதை கொண்டுள்ள தீவிரம் நம்மிடம் எழுப்பும் உணர்வும் சிந்தனையும் சாரம் நிறைந்தது: ஆழமானது: வலுவானது: நுட்பமானது.
அமரதாஸ் தனக்கும் கவிதைக்குமான உறவையும் இடைவெளிகளையும் தன் கவிதைகள் மூலமாகக் காட்டியுள்ளார். தன்னில் தான் வாழ்தல் என்பதே அவர் கவிதைகளில் தொனிக்கும் சாராம்சமாகும். இந்த தொனிப்பே மெய்யாகவும் மனிதனின் உண்மை முகமாகவும் இருக்கின்றது.
இன்றைய கவிஞன் (கவிஞன் மட்டுமல்ல சகலரும் தான்) மொழியை அது உணர்த்தி வந்த பொருளில் கையாளமுடியாத அவலத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறான். “உண்மை என்ற சொல்லை அது உணர்த்தும் பொருளில் மெய்ப்பிக்க – நிறுவிக்கொள்ள – எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கின்றது. நன்றி என்ற வார்த்தை வெறுமனே சம்பிரதாயமாக பயன்படுத்தப்படுகின்றது. அன்பு என்ற வார்த்தை பாசாங்குத்தளமாக உச்சரிக்கப்படுகின்றது. அது போலவே ஜனநாயகம் என்பதும் நீதி என்பதும் சமாதானம் என்பதும் இன்னும் பலவும். இந்நிலையில் கவிஞன் இருக்கும் சொற்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியம். அவன் புதிய சொற்களைக் கண்டறிய வேண்டியிருக்கின்றது. புதிய உணர்த்து முறைமையை கையாள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அமரதாஸ் தனது கவிதைகளில் புதிய உணர்த்து முறைமையினையும் புதிய சொற்களினையும் கையாண்டிருக்கிறார். இவ்வாறு புதிய திசையில் எல்லாவற்றையும் பயணிக்க வைக்க முயல்கின்றார்.
திரும்பத்திரும்ப வாசிக்கக்கோரும் இக்கவிதைகள், ஒவ்வொரு வாசிப்பிலும் சுவாரஸ்யத்தைக் கிளப்பியபடியே புதுப்புது அனுபவங்களையும் சிந்தனையையும் விரிக்கும் இயல்புடனிருக்கின்றன. மறுபடியும் மறுபடியும் வாசிக்கத ;தூண்டும் ஆவல், கவிதைகள் வாசக மனதில் ஏற்படுத்தும் பதிவை வலுவாக்குகின்றன. இத்தன்மைகள் மூலம் அமரதாஸ் கவிதைகளைக் காலத்தில் பரப்பிவிடுகின்றார். மிக இயல்பாகவும் நுட்பமாகவும் ஒலிரும் ஓசையும் இயல்பின் மொழியுமாய்க் கூடி விளைந்திருக்கும் இக்கவிதைகள் குறித்துக் காலம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும். இது மகிழ்ச்சியை அளிக்கின்றது.
“இயல்பினை அவாவுதல்“ என்ற அமரதாஸின் கவிதைத் தொகுதிக்கான முன்னுரை.

No comments:
Post a Comment