Saturday, December 1, 2012

பவுண்











பவுணுக்கு வேட்டையையும் வெள்ளாமையையும் தவிர, வேறு எதுவுமே தெரியாது. இந்த நாற்பத்தியாறு வயசில் அவன் வேறு எதையும் பழகவேயில்லை. அதுக்கு அவசியமும் இருக்கேல்லை.

வெள்ளாமை செய்யிறதுக்கு அப்புவின் காணிகள் இருந்தன. தண்ணீருற்றில் மூன்று போகமும் விளையும் வயல். கற்பூரப்புல் வெளியில் ஒரு இரண்டு ஏக்கர் நிலம். குழமுனையில் அம்மாவழி உரித்தான வெட்டைக்காட்டு வயல். அதில் ஆண்டுக்கு ஒரு போகம்தான் விளைவிக்கலாம். என்றாலும் ஏக்கருக்கு இருபது மூடை அடிக்கும். அங்கே அவனுக்கான நிலமும் ஒரு ஏக்கருக்குக் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருந்தது.

போதாதென்று பிறகு அவனும் ஒட்டுசுட்டானுக்கு அருகே கருவேலங்கண்டல் பக்கமாக அவன் கூட்டாளிகளுடன் ஒரு நாலு ஏக்கர் அளவில் காடு வெட்டிப் புலவாக்கியிருந்தான்.

பவுண் பெரிய கமக்காரன் இல்லைத்தான். ஆனால், ஒரு ஏழு எட்டு ஏக்கர் விதைப்பான். சில காலம் நிலைமையை, வசதியைப் பொறுத்து, ஆற்றையும் காணிகள் வசதியாக அமைஞ்சால் இன்னுமொரு இரண்டோ மூன்று கூடுதலாக விதைப்பான். அதுக்கு மேல அவன் ஆசைப்படுவது கிடையாது.
வயல் விதைப்பைத் தவிர பவுணுக்குப் பிடித்தமான தொழில் அல்லது பொழுது போக்கு வேட்டை. ஆறு ஏழு வயதிலேயே பழகிய தொழில் அது. அதில் அவன் பக்காக் கெட்டிக்காரனாகவும் இருந்தான்.

பவுணின் வீட்டில் காட்டிறைச்சி இருக்காத நாட்களே இல்லை. வெள்ளி, செவ்வாய் எல்லாம் அவனுக்குக் கிடையாது. ஆனால், பொங்கல், திருவிழாக்காலங்களில் அவன் துவக்கே தூக்கமாட்டான். அவனிடம் பெல்ஜியம் 304 – 10 ஆம் நம்பர் சொட்கண் இருந்தது. அது அவனுடைய விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றியது. ஊருக்குள் அவனுக்கென்றொரு பேரையும் பெற்றுக் கொடுத்திருந்தது.

இவ்வளவும் போதும் அவனுக்கு.  உலகத்தின் பெருங்கோடீஸ்வரர்களில் ஒருவராக தான் வரவேணுமென்று ஒரு போதும் எண்ணியதுமில்லை. விரும்பியதுமில்லை.

வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கலுக்கு, காட்டா விநாயகர் கோவில், ஒட்டுசுட்டான் சிவன் கோவில், தண்ணீரூற்றுப் பிள்ளையார் கோவில், முள்ளியவளைக் கல்யாண வேலவர் கோவில் திருவிழாக்களுக்கு செலவழிக்கக் காசிருக்க வேணும். குமுழமுனையிலோ முள்ளியவளையிலோ வற்றாப்பளையிலோ ஆண்டு தோறும் ஆடுகின்ற கூத்துகளுக்கு என்று கொடுக்கவும் செலவழிக்கவும்  கூடிய மாதிரியும் இருக்கோணும். ஊருக்குள்ளும் சொந்த பந்தங்களுக்குள்ளும் வருகிற நன்மை தீமைகளுக்குப் போகக்  கூடியமாதிரியும் கொடுத்து மாறக்கூடிய மாதிரியும் கையில ஏதாவது இருக்க வேணும்.

இதைத்தவிர, பிள்ளைகளுக்கும் மனுசிக்கும் உடுபிடவைகள். கழுத்திலையோ கையிலையோ போடக்கூடிய அளவுக்கு நகை. அவர்களின் விருப்பம் எப்படியோ ஆண்டுக்கு ஆண்டு வேறுபட்டுக் கொண்டே இருக்கும். அதுவும் பொங்கல், திருவிழாக்காலங்களில்தான் இந்த விருப்பமும் தெரிவுகளும் இன்னும் கூடும்.

சாப்பாட்டுக்குக் குறைவில்லை. வீட்டில் நெல் தாராளமாக இருக்கும். பாலுக்கும் தயிருக்குமாக மாடுகள் நின்றன. வயல் வேலைக்கு முதலில் மாடுகளையும் வண்டிலையும் வைத்திருந்தான். பிறகு அவனுக்கு அவை தோதாக இல்லை என்று கொஞ்சக் காலம் அதையெல்லாம் விற்றுப் போட்டு, பெத்தப்பாவின் மெசினை (உழவு இயந்திரத்தைப்) பிடிச்சு வயல் வேலைகளைச் செய்தான்.

ஆனால், வன்னியில் போர் பெருத்து, எண்ணை, தண்ணி எல்லாத்தையும் அரசாங்கம் தடுக்கத் தொடங்கியபோது மீண்டும் பட்டிமாடுகளையே பழக்கினான். அவனுக்கு எப்போது நிலாக்காலம் என்று தெரியும். எப்ப அமாவாசை, அட்டமி, நவமி எல்லாம் வரும் என்றும் அவனுக்குத் தெரியும். பனிக்காலம் தெரியும். மழையையும் வெயிலையும் அவனுடைய உடம்பு நல்லாகவே அறியும்.

காட்டுப் பூக்களின் வாசம் அவனுக்கு அத்துபடி. இன்ன போகத்துக்கு இன்ன வாசனை.  இந்தப் போகத்தில் இந்த மரங்கள் பழுக்கும். இந்தக் காலத்தில் இன்ன பறவைகள்தான் சிறகடிக்கும். காட்டிலும் வயலிலும் இருக்கும் மண்ணின் இதமும் தகிப்பும் தண்மையும் எல்லாம் அவனறிந்தவை.
போர் வந்தபோதும் அவன் சுதந்திரமாகவே இருந்தான். இந்தியன் ஆமிக்காலத்தில் கொஞ்சம் கூடுதலாகக் கஸ்ரப்பட்டதைத்தவிர பிறகெல்லாம் அந்தளவுக்கு கஸ்ரங்களிருக்கவில்லை. ஆனால், போர்க்காலத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. எல்லாமே விலை. பொருட்கள் உள்ளுக்குள் வருவது தடைப்பட்டால் விலைஏறுமல்லவா. அதனால், அதற்காக கடுமையாக உழைக்கவேணும். அப்படி உழைத்தால்தான் சமாளிக்கலாம்.

பவுண் இரவு பகல் என்று பாராமல் உழைத்தான். ஊரோடு ஒத்து, இயக்கத்துக்கும் உதவினான். பிறகு அவனுடைய மூத்த பிள்ளையும் இயக்கத்துக்கே போனான். அது பவுணுக்கு முதலில் கொஞ்சம் கவலையாகவே இருந்தது. மூத்தபிள்ளை. அவனுக்கு உதவியாக இருக்கும் என்று அதிகம் நம்பியிருந்தவன். இப்பிடித் திடீரென்று போராடப் போய்விட்டால் அவன் எப்படி அதைத் தாங்கிக் கொள்ள முடியும்.

ஏற்கனவே பவுணின் தம்பி ஒருத்தன் இயக்கத்துக்குப் போய், இந்தியன் ஆமிக்காலத்தில காலில காயப்பட்டு செத்தவன். அதை விட மனிசியின்ர தங்கைச்சி ஒருத்தி இயக்கத்திலையே இருக்கும் போது தன்னுடைய மகனும் போயிருக்கிறான் என்று அவனுக்குக் கவலையாகவே இருந்தது.

சில குடும்பத்தில ஆருமே இயக்கத்தில இல்லாமல் எப்பிடியோ சுழிச்சுக் கொண்டு தங்கட காரியத்தைப் பாத்துக் கொண்டு போறாங்கள்.

இயக்கத்தோடiயும் அவங்கள் பரவாயில்லாமல்தான் இருக்கிறாங்கள்;. வேளியில வவுனியாவுக்கோ கொழும்புக்கோ கூட அவங்களாலைதான் சுகமாகப் போய் வரக்கூடியதாக இருக்கு. ஆனால், பவுண் வவுனியாவுக்குப் போகவே பல சந்தர்ப்பங்களில தயங்கினான்.

ஏன் சும்மா தேவையில்லாத வம்பென்று அவன் ஆரையும் தனக்குத் தோதான ஆக்களைப் பாத்து வவுனியாவுக்கு அனுப்பினான். இல்லை என்றால், அங்க போய் வாற ஆக்களிட்ட சாமானுக்குச் சொல்லி விட்டான்.

வயல்க்காணி சில காலங்களில் கொஞ்சம் சறுக்கினாலும் அவனை ஒரேயடியாய்க் கைவிட்டதில்லை. எப்படியோ சமாளித்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு ஒண்டில்லை எண்டால் இன்னொண்டு எண்டமாதிரி மாடுகள், வேட்டை, வயல் என்று இருந்தன.

ஆனால், பவுண் தன்ரை இந்த வயதுக் காலத்தில் ஆடிப்போனது 2007, 2008 க் காலப்பகுதியில்தான். சண்டை முற்றி அது தொண்டையை இறுக்கியது. அவனால் எதுவுமே செய்ய  முடியவில்லை. அவன் மட்டுமா அப்படித் தவித்தான்? அங்கேயிருந்த எல்லாருந்தான் தவித்தார்கள்.

பவுணுக்கு எல்லாமாக ஆறு பிள்ளைகள். இயக்கத்துக்குப் போனவனைத் தவிர இன்னும் ஐந்து பிள்ளைகள் அவனோடிருந்தன. அதை விட மனிசி, அவனுடைய அம்மா, மனைவியின் தாயார் என்று மொத்தமாக ஒன்பது பேர். போர்க்காலத்தில் அளவுக்கதிகமான எல்லாமே சுமைதான். இந்தச் சுமையைக் குறைப்பதாகவோ அல்லது இன்னும் அவனுக்குச் சுமையைக் கூட்டுவதாகவோ இரண்டாவது பிள்ளையையும் (பெண்) போருக்கு என்று சேர்த்துக் கொண்டார்கள்.

போர் முற்றி, விரிந்து கொண்டிருந்தது. சனங்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள். அவனுடைய குமுழமுனை வயல் பறிபோனது. பிறகு கருவேலங்கண்டல் புலவு. அவர்கள் முள்ளியவளையில் இருந்து வெளியேறினார்கள். அதுவொரு வெள்ளிக் கிழமை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இனி முடியாது என்ற நிலையில் அன்று காலை வீட்டை விட்டுக் கிளம்பினார்கள்.

வெள்ளிக் கிழமையில் வீட்டைவிட்டு, ஊரை விட்டுப் போகக் கூடாது என்று பவுணின் அம்மா சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டே வெளியேறினா. அவனுக்கு அப்படிக் கிளம்புவது என்ன விருப்பமா? அல்லது அந்த ஊர்ச்சனங்களுக்குத்தான் அது விருப்பமா?  அங்கே இருக்க முடியாதென்றால் வேறு என்னதான் செய்ய முடியும்?

வற்றாப்பளை அம்மனைக் கும்பிட்டுக் கொண்டு, காட்டா விநாயகரை, தண்ணீரூற்றுப் பிள்ளையாரை எல்லாம் நினைத்துக் கொண்டு அவர்கள் வெளியேறினார்கள். கேப்பாப்பிலவுப் பக்கமாகப் போய் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தார்கள்.

வீட்டில் ஏராளம் பொருட்கள் விடப்பட்டிருந்தன. சாப்பாட்டுக்குத் தேவை என்று நெல், இன்னும் முக்கியமான பொருட்கள், உடுபிடவைகள் என்று அத்தியாவசியமானவற்றை மட்டும்தான் பவுண் எடுத்துக் கொண்டான். எல்லாப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு போய் ஆற்றையும் வீட்டை வைக்கேலாது. அதையெல்லாம் அங்கையும் வைக்கேலாமல், வீட்டிலையும் வைக்காமல் போற வாற இடமெல்லாம் தொலைக்க முடியாதென்று விட்டான்.

ஆனால், வேறு கனபேர், வாகனங்களில் லோர்ட் லோர்ட்டாகச் சாமான்களை ஏற்றிப் பறித்தார்கள். அப்படிப் பொருட்களைக் கொண்டு போனவர்கள் அதையெல்லாம் கொண்டு போன இடங்களில் வைக்க முடியாமல் தவித்ததைப் பவுண் கண்டான். சிலர் இந்தச் சாமான்களை ஏற்றவும் பாதுகாக்கவும் என்று போயே ஷெல் விழுந்து செத்திருக்கிறார்கள்.
பவுண் புதுக்குடியிருப்பிலிருந்தபோது ஏதோ அவனையே தேடிக் கொண்டு வருவைதப்போல ஒட்டுசுட்டான், கேப்பாப்பிலவுப் பக்கங்களால் படையினர் வந்தார்கள். அவன் அங்கிருந்து சனங்களோடு சனமாக குடும்பத்தோடு உடையார் கட்டுக்குப் போனார்.

அங்கே போய் ஒரு கிழமை இருந்திருப்பார்கள். அங்கே முதலில் ஷெல் வந்தது. ஒண்டல்ல, இரண்டல்ல. ஓராயிரம் இரண்டாயிரமல்ல. மழைத்துளியை எண்ண முடியுமா? இரத்த வெள்ளமும் ஓலக்குரலும் பவுண் குடும்பத்தை மட்டுமா அலைக்கழித்தது. தேடித்தேடி மரணப்பொறிக்குள்ளேயா வந்திருக்கிறோம் என்று அவன் யோசித்தான். அப்படி அப்போது அங்கே நின்று ஆறுதலாக யோசிக்கத்தான் முடியுமா என்பதைப்போல சனங்கள் தாறுமாறக ஓடினார்கள்.

ஒருவருக்கும் எங்கே போவதென்று வழிகள் தெரியவில்லை. எல்லா வழிழகளிலும் மரணமே சிரித்துக் கொண்டிருப்பதாகப் பவுணுக்குப் பட்டது. ஆனால், அதற்காக இப்படி, இந்த மழைக்குள் நிற்க முடியுமா?
அவன் குடும்பத்தோடு ஓடத்தொடங்கினான். அது மரண ஓட்டம். நிற்கவே முடியாத ஓட்டம். தன்னோடிருக்கும் பிள்ளைகளைப் பற்றிய கவலை.

போர்க்களத்தில் நிற்கும் பிள்ளைகளைப் பற்றிய கவலை. வுயதான காலத்தில் போகிற இடங்களில் சமாளிக்க முடியாமல் திணறுகிற தாயைப் பற்றிய கவலை. கையிலிருக்கும் காசு கரைந்து, இன்னும் இப்படி எத்தனை நாளைக்குச் சாமாளிக்க முடியும் என்ற கவலை. இனி எங்கே போவதென்று தெரியாத கவலை.

முதலில் தெரிந்தவர்களின் வீடுகளுக்குப் போனார்கள். பிறகு, பிறகு யாரும் யாரையும் தேடிப்போக முடியாது. அப்படிப் போயும் எந்தப் பிரயோசனமும் இல்லை. எங்கும் சனம் நிறைந்து விட்டது. எங்கே இருந்தாலும் எல்லாமும் ஒன்றுதான். ஒரு பிளாஸ்ரிக் தறப்பாளுக்னுகு மாறிய வாழ்க்கையில், வள்ளிபுனம், தேவிபுரம், இரணைப்பாலை (திரும்பவும் புதுக்குடியிருப்புக்கு அண்மையில் என்ற விசித்திர நிலை), மாத்தளன், பொக்கணை, வலைப்பாடு, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் என்று எல்லாத்தையும் கண்டு, களைத்து விட்டான் பவுண்.

இடையில் அவனுடைய இரண்டாவது பிள்ளை போர்க்களத்தில் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். கடைசியாக அவர்களின் முன்னிலையில் முள்ளியவளையில், அவர்கள் வீட்டில் அந்தப் பிள்ளை அழுது குழறியபடி போனகாட்சி பவுணை அலைக்கழித்தது. அவனுடைய மனிசி பைத்தியக்காரி போலாகி விட்டாள்.

மூத்தமகனை அவர்கள் காணவேயில்லை. அங்கே நிற்கிறான், இங்கே நிற்கிறான் என்ற மாதிரிச்சொன்னார்கள். கடைசியாக அவனைப் பவுண், தேவிபுரத்தில் கண்டிருந்தான். அதற்குப் பிறகு தகவலே இல்லை. ஆனால், அவன் பவுணுக்குத் தெரிந்த ஆரோ ஒருவரிடம் தன்னைப் பார்க்காமல் எங்காவது தப்பிப் போகச் சொல்லி அனுப்பியிருந்தான்.

அவன் சொன்னதைப் போல அங்கிருந்து எங்காவது தப்பிப் போகத்தான் வேணும். ஆனால், பெத்த பிள்ளையை விட்டுவிட்டு அப்படித் தப்பிப் போகமுடியுமா? அங்கிருந்து தப்பவில்லை என்றால் மிச்சம் மிகுதியாக இருக்கிற ஆக்களையும் இழக்கவேண்டி வரலாம். இதற்குள் பவுணுடைய மாமியார் வயிற்றுப் போக்கால் துவண்டு விட்டா. கடைசியில் அந்த மனுசி, வலைப்பாட்டுக் கடற்கரையில் புதைக்கப்பட்டது.

இரண்டு வேளைச் சாப்பாடு ஒரு வேளை ஆகியது. உடுப்புகள் மண்மூடைகளுக்காக மாற்றப்பட்டன. பவுண் பைத்தியக்காரர்களில் ஒருவனாகினான். போக்கிடமும் வழியுமில்லாத லட்சக்கணக்கான சனங்களில் அவன் எம்மாத்திரம்?

அவனுடைய மைத்துனி இறந்து போனதாகச் சொன்னார்கள். சாவுச் செய்திகள் எந்தப் பாதிப்பையும் எவருக்கும் பெரிதாக ஏற்படுத்த முடியாத நிலை. ஆனாலும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? இழப்பின் வலியை மனதால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாதல்லவா.

பவுண் முள்ளிவாய்க்காலினால் வெளியேறியபோது.... அவனுடைய இன்னொரு பிள்ளைக்கு இரண்டு கைகளையும் ஷெல் தின்றது. காயப்பட்ட பிள்ளையோடு வவுனியா, அனுராதபுரம், பொலநறுவை என்று அலைந்தான்.
முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறியபோது அவனுக்கு ஒரு சுமை குறைந்திருந்தது. ஆனால், இன்னும் பல சுமைகள் கூடின.

இப்போது அவன் அகதிமுகாம்களில் இருந்து வவுனியாவிலிருந்த சொந்தக்காரர் வீடுகளுக்கு மாறி, பிறகு அங்கேயிருந்து கனகராயன் குளத்துக்கு வந்திருக்கிறான்;. கனகராயன்குளத்தில் அவனுடைய அண்ணாவின் காணி இருக்கு. அங்கே பதிந்து வந்திருக்கிறான்.

வவுனியாவிலிருந்து கொண்டு அவனால் எதுவும் செய்ய முடியாது. வேறு தொழில்களும் அவனுக்குத் தெரியாது. வேறு தொழில்களைச் செய்யக் கூடிய நிலையில் வசதிகளும் இல்லை.

கனகராயன் குளத்தில் வயல் விதைக்கலாம். வேட்டைக்குப் போக முடியாது. துவக்கில்லை. மட்டுமல்ல படையினர் அனுமதிக்கவும் மாட்டார்கள். அது விண்வம்பாகியும் விடும். பன்றி வந்து முன்னால் நின்று விளையாடுது. அவனைப் பொறுத்தவரை இப்போது இரண்டு ஏக்கர் வயல் விதைத்தாலே போதும்.

அதனால், கனகராயன்குளத்துக்கு வந்திருக்கிறான். அவனுடைய சொந்த வீட்டுக்குப் போவதற்கு இப்போதைக்குப் படையினர் அனுமதிப்பார்கள் போல் தெரியவில்லை. கனகராயன்குளத்தில் 12 கூரைத்தகடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குத் தோதாக வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

போதாதென்றால் இரண்டு தறப்பாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றை நிலத்துக்கு விரித்துக் கொள்ளலாம். இன்னொன்றை கூரையாக்கிக் கொள்ளலாம். முள்ளிவாய்;க்காலில் விட்டு விர மனமேயில்லாமல் இருந்த மகன் இப்போது ஓமந்தைத் தடுப்பு முகாமில் இருக்கிறான். பவுணின் குடும்பம் மாதத்துக்கு இரண்டு தடவை அவனைப் போய்ப்பார்க்கிறது.

கேதியா விட்டிடுவாங்கள் போலக் கிடக்கு என்று ஒவ்வொரு முறையும் அவன் பவுணுக்கும் தாய்க்கும் சொல்லுவான். ஆனால், ஓமந்தையிலிருந்த சிலரை இப்பொழுது பூஸாவுக்கும் கொண்டு போயிருக்கிறார்கள். இந்தச் செய்தி பவுணுக்கு நெஞ்சிலடித்தது. தன்னுடைய மகனையும் பூஸாவுக்குத்தான் கொண்டு போவார்களோ! என்று.

இதற்கிடையில் போனகிழமை அவனுக்குத் தெரிந்த ஒருவர், வவுனியாவில் அவனையும் அவனுடைய இரண்டு கைகளும் இல்லாத பிள்ளையையும் கண்டபோது சொன்னார், ‘இந்த மாதிரிப் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தன்னுடைய நண்பர் ஒருவர் உதவிசெய்கிறார். ஆனால், நீங்கள் இந்தப் பிள்ளையின்ர பெயரில ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க வேணும்’ என.

அதுக்காக அந்தப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு பவுண் வங்கிக்குப் போயிருக்கிறான். 18 வயதான பிள்ளையின் பெயரில் கணக்கைத் திறக்கும் போது அந்தப் பிள்ளையின் கையொப்பம் வேண்டும். அப்போதுதான் வந்தது பிரச்சினை. கையெழுதிடுவதற்கு அந்தப் பிள்ளையிடம் கைகளில்லை. விரல் அடையாளத்தை வைப்பதற்கு விரல்களுமில்லை. வங்கி மனேஜருக்கு எதுவுமே விளங்கவில்லை. அதைக் கண்டு ஊழியர்கள் திகைத்துப் போய் ஒரு கணம் நின்றனர்.

அந்தப் பிள்ளை என்ன நினைத்தாளோ தெரியாது எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

பவுண் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

00

குருஷேத்திரம்















‘வாயடைத்துப் போச்சு நண்பா, வராதாம் ஒரு சொல்லும்...’ என்று கவிஞர் முருகையன் எழுதினார். அதேநிலைமைதான் நமக்கும் இப்போது. எதைச் சொல்லவும் அச்சமாக இருக்கிறது. எதைப்பற்றிச் சொன்னாலும் எவருக்கோ பிடிக்காமற் போகிறது. பிடிக்காதவர்கள் கோவிக்கிறார்கள். அல்லது வசை பாடுகிறார்கள். அல்லது சொல்வதைத் தடுக்கப்பார்க்கிறார்கள்.
வன்முறைகள் முடியவில்லை. அவை ஏதோ ரூபங்களில் எங்கிருந்தெல்லாமோ வருகின்றன.

போர்க்காலத்தில்தான் அச்சம் இருந்ததென்றில்லை. போர் முடிந்த பிறகும் அச்சம் நீடிக்கிறது. அது ஒரு தீராத நோயைப்போல இலங்கையைப் பீடித்திருக்கிறது. இலங்கையிலும் தமிழர்களிடம்தான் அது ஒட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் எங்கே இருந்தாலும் அங்கேயெல்லாம் எதையும் சொல்ல முடியா அச்சம் தொடருகிறது.

‘இந்தத் தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலென்ன, இலங்கையில் இருந்தாலென்ன, புலம்பெயர்ந்து தூரதேசங்களில் இருந்தாலென்ன? எல்லோரின் மனதிலும் வன்முறைகள் கூடுகட்டியிருக்கின்றன’ என்று வன்னியில் போருக்குத் தப்பி, இந்தியாவுக்குப் போய், அங்கே சமாளிக்க முடியாதென்று மீண்டும் இலங்கைக்கு வந்து வெளியே போகத்துடித்துக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் சொன்னார்.

வாயடைத்துப் போகும்படியாகவே இலங்கைத்தீவின் நிலைமைகள் கடந்த முப்பதாண்டுகளாக இருக்கின்றன. குண்டாந்தடிகள், துப்பாக்கிகள், பேனாக்கள், வதந்திகள் என்று இந்த வன்முறை ஆயுதங்கள் மிகக் கூர்மையாகவே இருக்கின்றன.

‘எதிரியிடமும் வாய் திறக்க முடியாது நண்பரிடமும் வாய் திறக்க முடியாது. பாருங்கள் எங்களின் நிலைமையை’ என்று ஒரு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மாத்தளன் பாடசாலையில் அமைந்திருந்த போர்க்கால ஆஸ்பத்திரியில் கண்களில் நீர் தழும்ப, குரல் தழதழக்கச் சொன்னார்.

அவரைப் பொறுத்தவரை வளர்த்த கடாவும் மார்பிலே பாய்ந்தது. வந்த கடாவும் மார்பிலே பாய்ந்தது.

வயிற்றிலே பட்டகாயத்தோடு அவருடைய மனைவி இருந்தார். கையிலே பட்ட காயத்தோடு மகன் இருந்தான். காலிலும் கையிலும் பட்ட காயத்தோடு போராளியாக்கப்பட்ட மகன் இருந்தான். இரண்டு மகன்மாருக்கும் இரண்டு பிள்ளைகள்.

ஒரு தரப்பாள் கூடாரத்துக்குள், புடவைகளை சாக்குப் பைகளைப்போல ஆக்கி மண் மூடைகள் அமைக்கப்பட்ட அந்தச் சிறிய பதுங்கு குழிக்குள் இனியும் இருந்து இந்த நிலையில் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவர் மாத்தளன் ஆஸ்பத்திரியில் வந்து நின்றார்.

அங்கேயிருந்துதான் கப்பலில்  திருகோணமலைக்குப் போகலாம். ஐ.ஸி.ஆர்.ஸி யின் கப்பல் அது. உணவையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு வந்து இறக்கி விட்டு காயப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு போகும் கப்பல் அது.

காயப்படுகிறவர்களுக்காகவே கப்பல் ஓடியது ராமா அப்போது. அப்படியும் ஒரு கொடுமை நடந்தது இந்தப் பூமியிலே. அப்படியும் ஒரு காலம் இருந்தது எங்கள் வாழ்வினிலே.

அவர் வன்னியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வேலைபார்த்தவர். கல்வித்தொண்டு. ஏதோ உத்தியோகம் என்ற அளவில் அவர் எங்கும் யாருக்கும் படிப்பித்ததில்லை. அதற்கப்பால், தன்னுடைய வீடு, குடும்பம், மேலதிக வருவாய் என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் படிப்பித்தார்.
எஸ்.பொ சொல்வாரே ‘ஊழியம்’ என்று, அப்படி ஊழியஞ்செய்தார். சைக்கிளோடிப் படிப்பித்தார். காட்டுப்பாதைகளால் நீண்டதூரம் பயணஞ்செய்து பாடங்கள் நடத்தினார்.

பிறகு அவர் கல்வி அதிகாரியானபோதும் எங்கும் திரிந்தார். வன்னியின் அத்தனை மாவட்டங்களிலும் அவர் கால்கள் பட்டன. நல்லூழியன் ஒருவன் இருந்தற்கால், அவன் பாதம் இப்பூமி எங்கும் படாதோ! தனக்குக் கீழே பணியாற்றிய அத்தனை ஆசிரியர்களையும் அவர் ஆற்றுப்படுத்தி வளமாக்கினார். ஆசிரியர்களை வளமாக்கினால்தான் பிள்ளைகளும் பள்ளியும் வளமாகும் என்று நம்பியவர் அவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் அவரிடம் படித்தார்கள். அவரிடம் படித்தவர்களில் பலர் இந்த உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பல்வேறு நிலைகளில். பல தொழில்களில். பல பதவிகளில். அவர்களில் சிலர் வன்னியிலும் இருந்தார்கள். சிலர் போரில் ஈடுபட்டுக் கொண்டுமிருந்தார்கள். சிலருடைய பிள்ளைகள் போராளிகளாக இருந்தனர்.

போக, அவரைத் தெரிந்தவர்கள், அவரிடம் படித்தவர்களின் பிள்ளைகள் என்று எங்கேயும் ஏராளமானவர்கள் இருந்தனர்.

ஆனாலுமென்ன? அவர் இப்போது கண்கலங்க, தன்னுடைய முதிய வயதில், நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டு, காயப்பட்ட பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றுவதற்கு வழிதெரியாமல், அந்தப் போர்க்கால மருத்துவமனையில் வந்து நிற்கிறார்.

அவரைப்போல ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே கூட்டமாக நிற்கிறார்கள். காயப்பட்ட மனிதர்கள் மரங்களுக்குக் கீழும் பாடசாலைக் கட்டிடத்திலும் வளர்த்தப்பட்டிருக்கிறார்கள். இரத்தவெடில் மூக்கிலடித்து உடலைப்பதைக்கச் செய்கிறது. மரணக் கூச்சல். வேதனையின் முனகல் காதுகளைப் பிய்த்து இதயத்தை நடுக்கமுறச் செய்கிறது. இது ஒரு வழமைதான் என்றபோதும் அதை அறியாமலே இதயம் பதைக்கிறது.

அவர் அதிகாரியாக இருந்தபோது எத்தனை தடவைகள் அந்தப் பள்ளிக்கு வந்திருப்பார். முதலில் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்த காட்சியும் கடைசியாக அவர் ஓய்வு பெறுவதற்கு முன் வந்த காட்சியும் நினைவுக்கு வந்தன. ஆனால், இப்படியொரு நிலையில் அவர் அங்கே வருவார் என்றோ, இந்தப் பாடசாலை இப்படி சாவேந்திய நிலைக்குப் போகும் என்றோ அவர் எதிர்பார்த்திருக்கவேயில்லை. எல்லாவற்றையும் ஒரு கணம் நினைத்தார். கண்கள் உடைந்தொழுகின.

வடக்குப் பக்கமாக நிற்கும் மரத்தின் கீழே 30 க்கு மேற்பட்ட சடலங்கள் போடப்பட்டிருக்கின்றன. இரத்தமும் சிதிலமுமான அந்தச் சடலங்களில் மொய்த்திருக்கும் இலையான்களைக் கலைப்பதற்கு அங்கே யாருமே இல்லை. சில சடலங்களின் உறவினர்கள் புலம்பி அழுதுகொண்டிருக்கின்றனர். மற்றதெல்லாம் அநாதைச் சடலங்களாகிவிட்டன.

எல்லாவற்றுக்கும் மாத்தளன் மணல் வெளியில் ஒரே புதைகுழி. சடங்கு சம்பிரதாயமெல்லாம் கிடையாது.

இந்த நரகத்திலிருந்து, இந்த மரணக் குழியிலிருந்து  மீளவேண்டும் என்ற தவிப்போடு கப்பலேறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருக்கிறது பெருங்கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒருவராக, கப்பலேறுவதற்கு அனுமதி கோரிக்கொண்டு நிற்போரில் ஒருவராக, அவருடைய கோரிக்கை பொருட்படுத்தப்படாத போது கெஞ்சிக் கொண்டு நிற்போரில் ஒருவராக அவர் நின்றார்.

இப்படி அவர் நான்னகு நாட்களாக வந்து காலையில் இருந்து மாலைவரை – கப்பல் வந்து திரும்பும்வரை காவல் நின்று திரும்புகிறார். அவரைத் தெரிந்த மருத்துவர்கள் பார்க்கலாம் நில்லுங்கோ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால், யாரும் மீண்டும் வந்து அவரைப் பார்த்ததில்லை. அதையிட்டு அவர் கவலைப்பட்டதும் கிடையாது. நிலைமை அப்படி. அவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவர். அதனால் அவர்களை, அவர்களின் நிலையைப் புரிந்து கொண்டார்.

மெலிந்து தளர்ந்த உடலால் தொடர்ந்தும் அங்கே நிற்க முடியவில்லை. அவருக்கத் தலை சுற்றிக் கொண்டு வந்தது. கப்பலுக்காகச் சனங்கள், காயக்காரர்கள் அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கண்கள் மங்கி, காட்சிகள் சரியாகப் புலனாகாத போதும் அவருக்கு எதுவோ புலப்பட்டது. என்ன? யார் அது? யார்... யார்..? அவர் தலையை ஒரு முறை சிலுப்பிக் கொண்டு உற்றுப்பார்த்தார்.

அவருக்குத் தெரிந்தவர்கள், காயமே படாதவர்கள், கப்பலில் போகக் கூடிய சூழ்நிலை இல்லாதவர்கள் கப்பலுக்காகப் போகிறார்கள். எப்படி இது சாத்தியம்? இந்த அனுமதி இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? அதை விட இப்படி இவர்கள் போவதென்றால், அடுத்ததாக இங்கே – வன்னியில் என்னதான் நடக்கப்போகிறது? அப்படியென்றால் யார் மிஞ்சி நிற்பது?

அப்படியென்றால் காயப்பட்டிருக்கும் எங்களுக்கு ஏன் அனுமதி கிடைக்கவில்லை? தான் ஒரு நீரிவு வியாதிக்காரன் என்றபோதும், உடல் நிலை மோசமாகியுள்ளது என்று தெரிந்தபோதும் ஏன் அனுமதிக்கு இழுத்தடிக்கிறார்கள்? அதைவிட இப்படி அவருக்குத் தெரிந்தவர்கள் - வன்னிக்கு வெளியே போகமுடியாதவர்கள் போகிறார்கள். இது எப்படி, இது எதற்காக? அதுவும் பிள்ளைகளுடன்?

அவருக்குத் திக்கென்றது. அவருடைய கடைசி மகன் போராளி. ஆனால், காயப்பட்டபிறகு வீட்டில் நிற்கிறான். வீடா? ஏங்கே இருக்கிறது அது? தரப்பாள் கொட்டகை. அதுவும் ஒரு தூர்ந்து போன துரவுக்குப் பக்கத்தில், மரத்துக்குக் கீழே. அந்தத் தரப்பாள் கூடாரத்தைப் போடுவதற்காக இடம் கிடைக்காமல் அவர்கள் பட்டபாடு.

அதுவும் இரண்டு நாள் தவணையில். பிள்ளையையும் மனைவியையும் ஒரு இடத்தில் பாதுகாப்பாக விட்டுப் போக வந்தவன். அது முடிய அவன் போகவேணும்.

அவன் அங்கே இனிப் போகத்தான் வேணுமா? அவர் அங்கே தொடர்ந்து நிற்கவில்லை. கப்பலுக்காகக் காத்திருப்பதில் எந்தப் பயனும் இருக்கப்போவதுமில்லை. அந்த மரணவெளியில் இருந்து தப்புவற்கு அவருக்கு வழியும் தெரியவில்லை.

கண்கள் கலங்க, எதுவுமே செய்யத் தோன்றாமல் சிலகணம் அப்படியே நின்றார். அம்புலன்ஸ் வண்டிகள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தன. உழவு இயந்திரங்களிலும் காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். அந்த வாகனங்களில் ஒன்றில் யாரையும் கேட்காமல் ஓடிப்போய்ப் பாய்ந்து ஏறுவோமா என்று ஒரு கணம் யோசித்தார்.
தான் என்ன தனி ஒரு ஆளா அப்படிப் போவதற்கு?

அவர் அப்படியே நிலத்தில் குந்தியிருந்து விம்மி விம்மி அழுதார். அவர் அப்படி அழுவதைப் பார்த்த யாரோ அவருடைய மாணவர்களோ அல்லது அவருடன் வேலை செய்தவர்களோ ஓடிவந்து அவரை ஆறுதற் படுத்த முயன்றார்கள்.
நாங்களே வளர்த்தம். நாங்களே இப்ப எல்லாத்துக்குமாத் துக்கப்படுகிறம். இப்ப வெளியில சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கிறம் என்று சொல்லி விம்மினார்.

நல்லது நடக்கட்டும் என்றே எல்லாவற்றுக்கும் ஆதரவளித்தோம். ஆனால்...
அவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. பேசாமல் கூடாரத்துக்குப் போய் விட்டார். நடப்பது நடக்கட்டும் என்பது அவருடைய முடிவு. இவ்வளவு சனங்களுக்கும் நடப்பது தன்னுடைய குடும்பத்துக்கும் நடக்கட்டும் என்பதே அவருடைய எண்ணம்.

அழுகி மணக்கும் காயங்களோடு அந்தக் குடும்பம் அந்தத் தரப்பாளின் உள்ளே சிலநாட்கள் இருந்தன. எறிகணைகள் வந்து வீழ்ந்தாலும் அவர் ஒரு போதுமே பதுங்குகுழிக்குள் போனது கிடையாது. எதையோ யோசித்துக் கொண்டு பேசாமல் இருப்பார். பதுங்கு குழிக்குள் வரும்படி அவரைக் கூப்பிடுவார்கள். ஆனால், அவர் அசையவே மாட்டார்.

பிறகு, மாத்தளன் பகுதியால் அவர் படையினரிடம் போன சனங்களோடு போனார். அன்று மாத்தளனுக்கு வந்த கப்பல் அங்கே பொருட்களை இறக்க முடியாமல், காயக்காரர்களை ஏற்ற முடியாமல், நிலைமை மாறிவிட்டது என்று நீண்ட நேரம் கடலிலேயே நின்றது. புதிய இடத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

கப்பலுக்காகக் காத்து நின்ற சனங்கள், கெஞ்சிய சனங்கள் எல்லாம் களப்புக்குள்ளால் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.  அங்கே அவரை விசாரித்த ஒரு படை அதிகாரி கேட்டான்,

‘ ஏன் நீங்கள் ஏற்கனவே வரவில்லை?’

அவர் சொன்னார்,

‘என்னிடம் படித்தவர்கள், எனக்கு அடிப்பதை நான் விரும்பவில்லை. நான் படிப்பித்தவர்களிடம் போய்க் கெஞ்சி வழிகேட்க நான் விரும்பவில்லை. இப்ப வந்திருக்க வழியும் வந்திருக்கிற இடமும் நான் விரும்பியதும் இல்லை’.

அவர் திரும்பிப்பார்த்தார், அந்த மாத்தளன் பாடசாலையில் படையினர் குவிந்து கொண்டிருந்தார்கள். அது படைத்தளமாக மாறிக்கொண்டிருந்தது.

00

Friday, November 9, 2012

'இல்லை, மற்றொரு வானத்தின் கீழும் அல்ல’


















‘நமது இரண்டு கைகளும் அத்தனை பெரியவை அல்ல. உண்மைகளை அவற்றால் மறைத்து விட இயலாது. ஆனால், அந்த இரு கரங்களையும் வைத்து நாம் ஒன்றைச் செய்ய முடியும். அந்த உண்மைகள் நம் கண்களில் படாமல் மூடிக்கொள்ள முடியும்’ 

                                                                                                                                – அ.மாக்ஸ்.

இத்தகைய நிலை உள்ள ஒரு சூழலில் தங்களின் கைகளால் உண்மைகளையும் உலகத்தையும் மூடிவிடத்துடித்துக் கொண்டிருப்போருக்கு எதைப் பற்றிய எத்தகைய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும்? அப்படி விளக்க முயற்சிப்பது பயனற்றதும் கூட. எனவே இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் வசைகளையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் திட்டமிட்ட உள்நோக்கங்களையும்  பொருட்படுத்தாமல் விடுவதே மேலானது. அதுவே நன்மையும் கூட. நிலாந்தன் சொல்வதைப் போல இவற்றை மௌனத்தாற் கடப்பதே சிறந்த வழி.

இதேவேளை இந்த மாதிரியான வசைகளும் புறக்கணிப்புகளும் குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியானவை. ஆனால், அடிப்படைகளற்றவை; பயனற்றவை என்ற புரிதல் எனக்கு அனுபவ ரீதியாகவும் உண்டு. ஈழச்சூழலிலும் சூடு மிகுந்த, அனற் பறந்த விவாதங்கள் பல நடந்துள்ளன. எதிரும் புதிருமான அணிகள், தனிநபர்கள் எல்லாம் மோதலில் உத்வேகத்துடன் ஈடுபட்டுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அரசியலில் தொடக்கம், கலை மற்றும் இலக்கியச் செயற்பாடுகளில் வரை இந்த மோதல்கள் தீவிரமாகவும் உக்கிரமாகவும் நடந்துள்ளன. ஆனால், காலம் எல்லாவற்றுக்கும் நல்ல பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுத் தந்திருக்கிறது. இறுதியில் அது ஒவ்வொருவரையும் எங்கெங்கோ கொண்டு சென்று விட்டு விடுகிறது. இறுதியில் எல்லாமே பரிகாசத்துக்குரியதாகி, ஒரு சிறிய புன்சிரிப்புடன் அடங்கி விடுகின்றன. அப்பொழுது இதையெல்லாம் நாமா செய்தோம் என்று நம்மையே கேட்டுக்கொள்கிறோம் . எனவே இந்த மாதிரியான விசயங்களுக்குப் பதிலளிக்கத்  தேவையில்லை என்பது என்னுடைய வலுவான நிலைப்பாடு. அவ்வாறு பதிலளிப்பதும் அதற்காக வினைக்கெடுவதும் வீண் என்பதே அனுபவமும். 

அதற்கிடையில் நாம் மோதிக்கொள்வதும் காலக்கனிவுக்கு முதல் சிலவற்றை விளக்க முற்படுவதும் மனக்காயங்களையே ஏற்படுத்தும்; பொதுத் தளத்தில் நிலவும் உறவில் பாதிப்புகளையும் தரும். எனவேதான் இந்தத் தெளிவோடு இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களிலும் பதிலளிப்பதைத் தவிர்த்து வந்துள்ளேன். - ஈரோஸ் இயக்கத்திற் செயற்பட்ட காலத்திலும், பின்னர் புலிகளின் செயற்பாட்டுத்தளத்தில் இருந்த வேளையிலும்கூட. 1996 க்குப் பிந்திய காலகட்டத்தில் ஏறக்குறைய இன்று ஏற்பட்டுள்ளதைப்போல ஒரு தீவிர நெருக்கடி நிலையை, வசைப் பிராந்தியத்தியத்தை புலம்பெயர் சூழலில் இயங்குவோர் உருவாக்கியுள்ளதைப் போன்று அன்று வன்னியிலிருந்த சிலரினால் ஈழத்தில் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், அது சிறிய அளவில். அத்தகைய நிலை இப்பொழுது தொடர்கிறது, வேறு இடங்களில், வேறு நபர்களால், வேறு வடிவத்தில். அவ்வளவுதான். ஆகவே இதையும் கடந்த காலத்தைப் போன்று நமக்குரிய வழியில் எதிர்கொள்ள வேண்டியதுதான். பொறுப்புச் சொல்லவேண்டியவற்றையும் நாம் காரணமானவற்றையும் தவிர்த்து, ஏனையவற்றைப் பொருட்படுத்தாமல் நமது வேலைகளைச் செய்து கொண்டிருப்பது. - ‘தெருநாய்கள் குரைக்கின்றன. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், ஒட்டகங்கள் தங்களின் வழியில் பயணிக்கின்றன’ என்றவாறு. இல்லையெனில் நம் உழைப்பின் பெரும்பகுதியை, நமது கவனத்தின் பெரும் பகுதியை நாம் இவற்றுக்கே செலவிட வேண்டும். யமுனா ராஜேந்திரன்  சொல்லியிருப்பதைப் போல ‘நேர விரயம் அன்றி வேறில்லை’. 

எனினும், ‘‘பொங்கு தமிழ்’ இணையத்தளத்தில் அண்மையில் யமுனா ராஜேந்திரன் யோ. கர்ணனின் கதைகளை முன்னிறுத்திக் கட்டமைக்க முயன்ற புனைவுருவாக்கம் சார்ந்த கட்டுரைகளுக்கான பதிலை எழுதவில்லையா?’ எனச் சில நண்பர்களும் வாசகர்களிற் சிலரும் கேட்டனர். ‘ஒரு கட்டத்திலாவது நீங்கள் பதிலளிப்பது நல்லது. அது உங்கள் செயற்பாட்டை தடைகளில்லாமல் மேலும் விரிவாக்கிக் கொள்ள உதவும். உங்களைப் பற்றி எழுப்பப்படும்  கேள்விகளுக்கான, குற்றச்சாட்டுகளுக்கான பதில்களைச் சொல்வதாகவும் அமையுமே!’ என்று சில நண்பர்கள் கூறினர்.  

 ‘நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். அது பொறுப்புக்குரியது. ஆனால், அபத்தங்களுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் வேறு விசயங்களைப் பற்றி எழுதலாம். குறிப்பாக போரினாலும் பிற நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக் குறித்து எழுதினால், அவர்களுக்கு அவற்றினால் பயன் கிட்டும். கூடவே, அறிவொழுக்கத்துடன் அணுகப்படும் எதனையிட்டும் நாம் சிந்திக்கலாம்’ என்றேன். அப்படியே எழுதியும் வருகிறேன். அவற்றினால் பலருக்கும் பல நன்மைகள் கிட்டி உள்ளன. மேலும் கிட்டி வருகின்றன. இந்த ‘நலன்செய் பரப்பு’ மேலும் விரிவடைந்துள்ளது. பலர் மேலும் மேலும் சனங்களுக்கு உதவ இணைந்து முன்வருகிறார்கள். புதிய விசயங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். அவர்கள் தேவையற்றுக் கதைப்பதில்லை. பொய்யாக நடிப்பதில்லை. வீர ஆவேசத்துடன் கூக்குரலிடுவதோ, நடந்து கொள்வதோ இல்லை. புரட்சி வேசம் போடுவதில்லை. பயனற்ற எதையும் கரைத்துக் குடித்துத் தங்களுடைய தலையையும் மனதையும் பாழாக்கி வைத்திருக்கவும் இல்லை. மற்றவர்களைக் குழப்பவும் இல்லை. 

கடந்த இருபத்தைந்து ஆண்டுகால ஊடகத்துறைச் செயற்பாட்டிலும் இலக்கிய முயற்சிகளிலும் சனங்களின் நன்மையைக் குறித்த கவனமே என்னிடம் இருந்திருக்கிறது. அதன் தொடர்ச்சி அறவேயில்லை. பதிலாக அது இன்னும் செழிப்படைந்துள்ளது. என்றபடியாற்தான் நெருக்கடிகள், அதிகார மாற்றங்கள்,  அபாய நிலைகள் எல்லாவற்றினூடும் சமநிலை தளம்பாமல் செயற்பட முடிகிறது. கண்மூடித்தனமாக எல்லாவற்றுக்கும் ஒத்தோடுவதும் எல்லாவற்றையும் மறுப்பதுமாக இல்லாமல், வரலாற்றறிவோடும்; விமர்சனத்தோடும் எதையும் அணுகும்போது குழப்பங்கள் அதிகமில்லை. அதனால், சனங்களின் பாடுகளோடும் வாழ்வோடும் இணைந்திருக்க முடிந்திருக்கிறது. போராடுவோரில் ஒருவராக, தேடப்படுவோரில் ஒருவராக, கைது செய்யப்படுவோரில் ஒருவராக, தாக்குதலுக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டோரில் ஒருவராக, சிறையிருப்போரில் ஒருவராக, ஆண்டுக்கணக்கில் அலைந்து திரிந்த அகதிகளில் ஒருவராக, போரில் சிக்கியோராக, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோரில் ஒருவராக, மீள்குடியேறியாக, கடனாளியாக என எப்போதும் இருந்திருக்க முடிகிறது; இன்னும் கூட. 

எனவேதான் இன்னும் அபாயக்கொடிகள் அசையும் வாழ்வின் முன்னே தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கிறேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணங்களிலும்கூட. எனினும் நண்பர்களுடைய நல்நோக்கத்தை ஏற்றுக் கொண்டதன் நிமித்தமாக இந்தச் சுருக்கமான பதிலை எழுதுகிறேன்.

பொங்கு தமிழில் யோ. கர்ணனின் கதைகளை ஒரு கருவியாக எடுத்துக்கொண்டு, அந்தக் கதைகளைப் பற்றிய விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் தெரிவித்தோரைப் பற்றிய ஒரு தொடர் குற்றம்சாட்டும் பட்டியலை இணைத்து யமுனா ராஜேந்திரன் எழுதியிருந்தார். அதில் என்னையும் உட்படுத்தியிருந்தார். 1. கர்ணனின் கதைகளை நான் புரிந்து கொண்ட விதம், அறியப்படுத்தம் விதம் பற்றியது. 2. என்னுடைய அரசியற் பாதையை நோக்கிக் கர்ணன் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றியது. கர்ணனின் கதைகளிலுள்ள சாராம்சத்தை விளங்கிக் கொண்ட போதும் கர்ணனைக் கொண்டாடியோரின் அல்லது அவருடைய படைப்புகளைப் பற்றிப் பேசியோரின் மீதான எதிர்ப்புணர்வின் காரணமாக, அதை மறுதலிக்கும் விதமாக அந்தக் கதைகளைப் பற்றி அபிப்பிராயம் தெரிவித்தோரை அவர் சாடியிருக்கிறார். இது எதற்காக? யமுனா ராஜேந்திரனின் பெரும்பாலான எழுத்துகள் அப்படி இருந்ததில்லை. அவருடைய எழுத்துகளை நான் ஏறக்குறைய தொண்ணூறுகளில் இருந்து படித்து வருகிறேன். அவருடைய பெரும்பாலான புத்தகங்களை நான் சேகரித்தும் வைத்திருந்தேன். புலம்பெயர் சூழலில் இப்பொழுது உருவாகியுள்ள அலைகள் ராஜேந்திரனையும் அடித்துச் செல்கின்றனவா என்ற கேள்விகள் அவருடைய அண்மைக்கால எழுத்துகளை அவதானிக்கும்போது எழுகின்றன. 

எனவே, யமுனாவுக்கான – யமுனாவைப் போன்று செயற்பட முனைவோருக்கான ஒரு பதிலை – என்னுடைய எதிர்வினையாக சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன். அது நான்கு வரிகளில் அமைந்திருந்தது. ‘போராட்டங்களைப் பற்றி லட்சம் பக்கங்கள் எழுதுவதை விடவும் ஒரு கணமேனும் போராட்டத்தில் பங்கெடுப்பதே மேலானது. அந்த அனுபவத்திலிருந்து பிறக்கும் ஒரு வார்த்தை போதும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒளியூட்ட. மேலும் வரலாற்றை விளங்கிக் கொள்ளவும் விளக்கிக் கொள்ளவும் வாழ்வைப் புரிந்து கொள்ளவும். மேலும் மனிதர்களையும் அவர்களுடைய நிலைமைகளையும் வரலாற்றுச் சூழலையும் விளங்கிக் கொள்ளவும்’ என. 

இந்தப் பதிலை பொங்குதமிழுக்கு அனுப்பியபோது ‘நீங்கள் எழுதியது நான்கு வரிகள் மட்டுமே. அதனை எப்படித் தனித்து வெளியிடுவது? என்று பொங்குதமிழின் ஆசிரிய பீடத்திலிருந்து கேட்டனர். ‘நான்கு வரிகளுக்கு மேல் எழுதவேண்டியதில்லை. அப்படி எழுதினால் அது வீண். இதுகூட வீண்தான். பதிலாக, சனங்களின் துயரத்தைப் பற்றி, வரலாற்றின் கொடுமைகளைப் பற்றி, அதனுடைய அனுபவங்களைப் பற்றி, அதிகார வர்க்கத்தின் கொடூரங்களைப் பற்றி எழுதுவேன். அது பயனுடையது. ஆனால், இங்கே வாசகர்களுக்கான மதிப்பை முன்னிறுத்தி இதை எழுதுதினேன்’ என்றேன்.  என்றபோதும் அதைப் பிரசுரிப்பதற்கு அவர்கள் தயங்கினர். ‘வேண்டுமானால், யமுனா ராஜேந்திரனுக்கு எழுதிய எதிர்வினைக்கு த. அகிலன் எழுதிய எதிர்வினையான கட்டுரையுடன் இணைத்து அதை வெளியிடலாமா?’ என்று கேட்டனர். நான் உடன்படவில்லை.  

‘ஒரு பதில் என்பது எந்த அளவிலும் இருக்கலாம். அது சொற்களின் எண்ணிக்கையிலும் பக்கங்களின் அளவிலும் தங்கியிருப்பதில்லை. ஒரு சொல்லிலும் இருக்கும். ஓராயிரம் சொற்களிலும் அமையும். ஏன், சொல்லாமலே விடுவதிலும்கூடப் பதிலுண்டு. பக்கம் பக்கமாக எழுதித்தான் பதிலளிக்க வேண்டும் என்றில்லை. என்னுடைய பதில் இவ்வளவுதான்’ என்றேன்.

வாரங்கள் கழிந்தன. மீண்டும் மீண்டும் அந்தப் பதிலை வெளியிடுவதில் தயக்கங்களும் தடுமாற்றங்களும் இருப்பதை உணர்ந்த பின்னர் அந்தப் பதிலைச் சற்று விரிவாக்கியுள்ளேன். ஏற்கனவே, யமுனா ராஜேந்திரன் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக யோ.கர்ணனும் த.அகிலனும் தங்கள் நிலைப்பாட்டின் வழியாகப் பதிலளித்துள்ளனர். பல புள்ளிகளில் நாம்  இணைந்திருந்தாலும் அவர்களுடைய அரசியற் பார்வையும் இலக்கிய அனுபவமும் வேறு. என்னுடைய பார்வையும் அனுபவமும் வேறு. இது எனது தரப்பு பதில் -  எதிர்வினை. 
1. 2006 இல் ‘கிறிஸ்தோபரின் வீடு’ என இருந்த யோ. கர்ணனின் சிறுகதைகள் எப்படி ‘சே குவேராவின் வீடு’ எனப் பெயர் மாற்றம் பெற்றன? என்ற கேள்வியும் அதையிட்டு யமுனா ராஜேந்திரன் அடைகின்ற மனப்பதற்றமும் தொடர்பானது. அதனால், அவர் தவறான ஊகங்களுக்குச் செல்கிறார். 

 ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற யோ. கர்ணனின் முதற்தொகுதியின் முன்னுரையில் இதைப்பற்றி நான் தெளிவு படுத்தியிருக்கிறேன். ‘கிறிஸ்தோபரின் வீடு’ என்ற தொகுதியில் இடம்பெறவிருந்த கதைகள் எல்லாம் அழிந்து விட்டன. ‘கர்ணன் தன்னுடைய கால் ஒன்றை இழந்ததைப் போல தனது முதற்தலைமுறைக் கதைகளையும் இழந்து விட்டார்' என்று. ஆகவே அது வேறு கதைகளைக் கொண்ட தனியான தொகுதி. பின்னர் எழுதப்பட்டவை வேறு வகையான கதைகளைக் கொண்ட தொகுதிகள். கர்ணனின் வாழ்க்கை அனுபவங்களும் வரலாற்று அனுபவங்களும் கூட வேறு பட்டவை. முன்னர் நிலவிய யதார்த்தம் வேறு. பின்னாளின் யதார்த்தம் வேறு. வரலாற்றின் ஓட்டமே அவரை அவ்வாறு எழுத வைத்திருக்கின்றது. கதைகளின் அனுபவங்கள் ஈழச்சூழலிலும் அதனுடைய வரலாற்றிலும் நடக்காமல் இருந்திருந்தால், கர்ணனின் கதைகளும் வேறாகவே இருந்திருக்கக்கூடும். சிலவேளை கர்ணன் எழுதவராமலே இருந்திருக்கவும் கூடும். கர்ணன் அனுபவங்களின் வழியில், மெய் நிகழ்ச்சிகளை நெருங்கியதாகத் தன்னுடைய எழுத்துகளை, கதைகளை பெரும்பாலும் முன்வைப்பதால் அவர் அந்தந்தக் கால நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், அனுபவங்களுக்கு இடமளித்து அவற்றை எழுதுகிறார். இதில் அவரை எப்படித் தவறென்று சொல்ல முடியும்? இதுதான் உண்மையில் நடந்ததும். மற்றபடி வியாபாரக் கவர்ச்சிக்காக கர்ணனோ, வடலி பதிப்பகமோ சே குவேராவைப் பயன்படுத்தவில்லை; ஈழ விசயங்களைக் கையாளவில்லை என்பது என்துணிபு. இலங்கை அரசியலில், அதிலும் குறிப்பாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் இந்த மாதிரிப் புரட்சிகரமான பெயர்களும் அடையாளங்களும் குறியீடுகளும் எப்படி உருச்சிதைந்தன? அர்த்தம் இழந்தன என்பதைக் கர்ணன் குறிப்புணர்த்துகிறார். ‘சே குவேரா இருந்த வீடு’, ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ ஆகிய இரண்டு தலைப்புகளும் புனிதங்கள் என்று கட்டமைக்கப்பட்டவற்றின் சிதைவை, கற்பிதங்களின் உருவழிவைக் காட்டுவன. இதுவே கர்ணனுடைய படைப்புகளின் அடிப்படைப் பண்புகளில் முக்கியமானது. ஆகவே சே குவேரா என்ற பெயரை வேறு நோக்கங்களுடன் பயன்படுத்தியிருப்பதாகக் கருதவேண்டியதில்லை. அவ்வாறு கருதினால், அது அதிக கற்பிதற்களுக்குரியதே. 

இதேவேளை யமுனா ராஜேந்திரன் குறிப்பிடுவதைப்போல, ‘சே குவேரா இன்று ஒரு விளம்பரப்பொருளாகவும் விற்பனைப் பொருளாகவும் ஒரு மோஸ்தராகவும் ஆக முடியும் என்பதற்கான சான்று போலத்தான்’ அவரே, சே குவேராவையும் ஈழப்போராட்டத்தையும் பயன்படுத்தி வருகிறாரோ  என்பது என்னுடைய அண்மைய சந்தேகம். எனவே, தன்னைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீட்டையும் உண்மையையும் யமுனா ராஜேந்திரன் சொல்லியிருக்கிறாரா? அல்லது அதை ஒத்துக் கொண்டிருக்கிறாரா? என்று கேட்கத்தோன்றுகிறது. சே குவேராவையும் பிற போராட்டங்களையும் பயன்படுத்தித் தன்னை ஒரு புரட்சிவாதியாகக் காண்பிப்பதையும் ஈழப்போராட்டத்தைப் பயன்படுத்தி அதன் ஆதரவாளராக, பங்கேற்பாளராகக் காட்டித் தன்னை மேம்படுத்திக் கொள்வதையும் இங்கே நாம் இவ்வாறே விளங்கிக் கொள்ள முடிகிறது. (ஈழம் பற்றிய கட்டுரைகளைக் கொண்ட புத்தகம் ஒன்று 600 பக்கங்களில் விரைவில் வெளிவரவுள்ளது என்பதும் இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கே கவனிக்க வேண்டியது. இதேவேளை தமிழகத்தில் பா.ராகவன் உலக அரசியலைப்பற்றியும் பல்வேறு போராட்டங்களைப் பற்றியும் பெரும் புத்தகங்களையெல்லாம் எழுதி வருகிறார். ஆனால், அவர் இதுவரையில் எந்த வரலாற்றிலும் தன்னுடைய பங்கையும் பற்கேற்பையும் வலியுறுத்தியதாகத் தெரியவில்லை என்பவை இங்கே மேலதிக கவனத்திற்குரியவை). 

மேலும் ராஜேந்திரன் இன்னொரு இடத்தில் உண்மையைத் திசை திருப்பும் நோக்குடன் சொல்கிறார்.  ‘இன்று புலி எதிர்ப்பு என்பது ஒரு மிகப்பெரும் இதழியல், இலக்கியத்தொழிற்சாலையாக இருக்கிறது. தமிழக - இந்திய, சர்வதேச ஊடகப் பரப்பில் புலியெதிர்ப்பு என்பது மிகப்பெரும் வியாபாரமாக இருக்கிறது’ என. இதை யார்தான் நம்புவார்கள்? இதை எப்படித்தான் ஏற்றுக்கொள்வது? (இதைக்குறித்து த. அகிலனும் யோ. கர்ணனும் தங்களுடைய பதிலில் விரிவாக எழுதியுள்ளனர்) புலி எதிர்ப்பை மையப்படுத்தி தமிழிலும் பிற மொழிகளிலும் எத்தனை ஊடகங்கள் இயங்குகின்றன? அவற்றின் முன்னணி ஆட்கள் யார்? அவர்கள் எத்தனை பேர்? அல்லது அவர்களுடைய தொகை எப்படியுள்ளது? பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்லி, இந்தப் ‘புலி எதிர்ப்பு ஆட்களே கர்ணனையும் கருணாகரனையும் தத்தெடுக்கிறார்கள், வாழ வைக்கிறார்கள்’ என்று புனையும் தந்திரம் என்ன? அது எதற்கானது? அதன் அடிப்படைகள் என்ன?

உண்மையில் புலிகள் இல்லாத சூழலிலும் புலிகளை மையப்படுத்தி அல்லது ஊறுகாய் தொட்டுக்கொள்வதைப்போல புலிகளைத் தொட்டுப் பேசும் ஊடகங்களே தமிழில் அதிக எண்ணிக்கையைக் கொண்டவை. இவற்றிற் பெரும்பாலானவை ஒரு போதும் போராட்டத்தில் பங்கேற்ற மக்களைக் குறித்து உயர்ந்த மதிப்பை விசுவாசமாகக் கொண்டியங்கவில்லை. போரிலே பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய சரியான அக்கறையைக் கொண்டு செயற்பட்டவையும் இல்லை. அப்படியெல்லாம் நடந்திருந்தால், யுத்தம் முடிந்த பின்னான இந்த மூன்றாண்டு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை மாற்றமடைந்திருக்கும். ஈழ அரசியலும் மாற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் உள்ளாகியிருக்கும். ஆகவே, ஈழத்திலும் புலம்பெயர் சூழலிலும் தமிழகத்திலும் பெரும்பாலான செயற்பாட்டாளர்களும் எழுதுவோரும்; இப்படித்தான் தங்களின் முதன்மைப்பாட்டை இலக்கு வைத்து, புலி ஆதரவுத் தோற்றத்தோடு இயங்கி வருகின்றனர். செயற்பாட்டுத் தளத்தில் அல்ல. இந்த வகையிலேயே ராஜேந்திரனும் காலூன்றியுள்ளாரா என எண்ணத்தோன்றுகிறது. முன்னர் புலிகளை விமர்சித்தவர்களும் மறுத்தவர்களும் கூடப் ‘புலி ஆதரவு’ அணியில் இன்று இணைந்து ‘நலன்பெறு’ உறுப்பினர்களாகி விட்டனர். (கவனிக்கவும் நலன் செய் உறுப்பினர்களல்ல). தங்களின் மனதுக்கு எது சரி, எது பிழை என்று தெரிந்தவர்கள்கூட அதையெல்லாம் மறைத்துக் கொண்டு ‘சீசனு’க்குத் தோதாகப் ‘புலி ஆதரவு’, ‘தமிழ்த்தேசிய ஆதரவு’ என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அப்படித் தங்களை மாற்றிக் கொண்டு தாராளமாகத் தந்திரமாக உழைக்கிறார்கள். அவர்களுடைய வங்கிக்கணக்குகளில் சேமிப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது. புகழும் ஆதரவும் பெருகிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை வசதிகள் பெருகுகின்றன. (முன்னர் இப்படி இவர்கள் எல்லைமீறிச் செயற்படுவதற்கு புலிகள் இடமளிப்பதில்லை. அவர்களிடம் ஒரு கண்காணிப்பும் வரையறையும் இருந்தது. ஆனால், இன்று எந்த எல்லையும் வரையறையும் இல்லை. எனவே இந்த மாதிரி ஆட்களுக்கும் போக்குக்கும் இந்தப் பாதை சுலபமாகவும் லாபமாகவும் உள்ளது). இந்த நிலையில் புலி எதிர்ப்பைச் சொல்லி யார் எப்படி உழைக்க முடியும்? 

அண்மையில் யமுனா ராஜேந்திரனின் பதிப்பாளர்களில் ஒருவரான அடையாளம் சாதிக், இலங்கைக்கு வந்திருந்தார். அவருடன் இறுதி ஈழப்போர் நடந்த இடங்களான வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், அம்பலவன் பொக்கணை, புதுமாத்தளன் பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். அங்கே குடியேறிவரும்  மக்களுடன் சாதிக் உரையாடினார். அந்த மக்கள், தங்களின் மனதிலே பட்டவற்றையெல்லாம் கொட்டினார்கள். அவர்கள் சொன்ன கதைகளைச் சாதிக் கேட்டார்.

எல்லாவற்றையும் கேட்ட சாதிக் சொன்னார், ‘கருணாகரன், இதையெல்லாம், இவர்கள் சொல்வதையெல்லாம் நான் வெளியே போய்ச்சொல்ல முடியாது. கண்டிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ள வெகுஜன ஊடகங்களில் இதையெல்லாம் பேசவோ, எழுதவோ முடியாது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால், உண்மை இப்படித்தான் இருக்கு. இதை நான் புரிஞ்சுக்கிறன். இதை நீங்க எழுதுங்க. நாம புத்தகமாகக் கொண்டு வரலாம்’ என்று. 

இலங்கை அரசைப்பற்றியும் புலிகளைப் பற்றியும் அந்த மக்கள் சாதிக்கிடம் கடுமையாகக் கண்டித்துச் சொன்னார்கள். வலைஞர்மடம் தேவாலயத்தைக்காட்டி அங்கே நடந்தவற்றை ஒரு குடும்பம் நினைவு மீட்டது.  

ஆனால், மறுநாள் இன்னொரு யாழ்ப்பாண நண்பர் ஒருவருடன் சாதிக்  கொழும்புக்குப் பயணமாகும்போது இந்த விவரங்களையெல்லாம் சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நண்பர் என்ன சொன்னார் தெரியுமா? ‘தேவையில்லாமல் உங்களை எதிர்ப்பு அரசியலில் அடையாளப்படுத்தாதீங்க. அது உங்களைப் பாதிக்கும்’ என்று. இதுதான் யதார்த்தம். இதுவே உண்மை நிலை. ‘உண்மைகள் என்பது எதிர்ப்பு அரசியல் வடிவத்திற்குரியவை’ என்று புரிந்து கொள்ளப்படும் நிலை இன்று வளர்ந்து விட்டது. இன்று உண்மைகளை இலங்கை அரசும் விரும்பவில்லை. புலி ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்வோரும் விரும்பவில்லை. போராட்டத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனையும் ஆழமாக நேசிப்போரே உண்மைகளைக்குறித்துச் சிந்திக்கிறார்கள். ஆகவே, இன்றைய நிலையில் புலிஆதரவாளர்களாகத் தோற்றம் காட்டுவோரே அதிகமானோராக இருக்கின்றனர் என்ற நிலையே பரவலாகக்காணப்படுகிறது. புலி எதிர்ப்பாளர்களும் சமநிலையாளர்களும் இதிற் பாதிக்கும் குறைவானோரே.  

எனவே, புலி எதிர்ப்பை விட ‘புலிகள்’, ‘ஈழம்’, ‘தமிழ்த்தேசியம்’ என்ற பதங்களை உள்ளடக்கிய இதழியலும் இலக்கியமும் மிகப் பெரிய வியாபாரமாக இருக்கிறது. எங்களுடைய கண்ணீரும் குருதியும் அவலமும் நல்ல வியாபாரமாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக அறிவோம். ராஜேந்திரன் தனது நோக்குடைய அனுபவத்தைப் பிறரிலும் ஏற்றி வாசிக்க முற்படுகிறார். இவ்வாறுதான் வேறு இடங்களிலும் யமுனா ராஜேந்திரன் உண்மையை விட்டு வெகு தொலைவுக்குச் செல்கிறார். இது மட்டுமல்ல, ஈழ நிலைமையைப் பற்றி ஈழத்தவர்கள் எழுதியதை விட வெளியாட்கள் எழுதி லாபமடையும் காலம் இது என்பதையும் நாமறிவோம். கே. என். டிக்ஸிற், சர்தேஷ் பாண்டே, நாராயணசாமி, கோடன் வைஸ், பழ. நெடுமாறன், ஹர்ஜித் சிங் முதல் பலர் இதில் அடங்குவர். இன்னும் இதைப்போலப் பலரும் எழுதக்கூடும். ஈழ நிலைமைகளின் பேரால் எடுக்கப்படும் சினிமாக்கள் கூட அப்படித்தான். சாப்பாட்டுக்கடைக்கே பிரபாகரனின் பெயரை வைக்கும் நிலை உருவாகியிருக்கிறது என்றால், இதற்கு மேல் நாம் அதிகம் இதைப் பற்றி விளக்கத்தேவையில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட சனங்களுக்கு இந்த வெளிப்பாடுகளால், இவர்களால் எந்தச் சிறு நன்மையும் கிடைத்ததில்லை. கோடன் வைஸ் போன்றவர்கள் இதில் சற்று விலக்கு. அவர்கள் ஒரு சாட்சி நிலையில் தம்மையும் உட்படுத்தி எழுதியிருக்கிறார்கள்; இயங்கியிருக்கின்றனர். தவிர, இந்த அரசியலில் அங்கீகாரத்தையும் இடத்தையும் இவர்கள் கோரவில்லை. பிறரைக் குற்றம் சாட்டித் தங்களை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனவே அவற்றுக்கு ஒரு பெறுமதியுண்டு. மற்றும்படி ஏனையோர் தங்கள் முதன்மைப்பாட்டையும் லாபத்தையும் நலனையும் மேலாதிக்க நிலையையும் குறியாகக் கொண்டே செயற்பட்டுள்ளனர். இன்னும் செயற்பட்டு வருகின்றனர்.  

இதேவேளை வெளியார் எவரும் இவற்றில் ஈடுபடுவதும் எழுதுவதும்  தவறானது என்று ஏக நிலைப்பட்டு இங்கே நான் சொல்ல வரவில்லை. ஆனால், அவற்றுக்கு நியாய அடிப்படைகள் இருக்கவேணும் என்பதையே வலியுறுத்துகிறேன். அவற்றின் விளைபலன் முக்கியம் என்கிறேன். சொந்த அனுபவத்தோடும் உண்மை நிலைவரத்தோடும் வாழ்ந்ததை, வாழ நேர்ந்ததை, பாடுகள் பலதைச் சுமந்ததை எழுதினால் அதை நிராகரிக்கும் அரசியல் ஏன் முன்னிலைப்படுத்தப்படுகிறது? இதையே இங்கே கேள்விக்குள்ளாக்குகிறேன். அப்படி எழுதினால், அதை ஏற்பதற்கு சிலர் தயாரில்லை. அதில் முன்வைக்கப்படும் உண்மைகள் அவர்களை அதிர்ச்சிக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்குகின்றன என்ற அச்சமே இதற்குக் காரணம். இதற்காக எழுதாமலும் இயங்காமலும் இருக்க முடியுமா? கடினமான எதிர்ப்பு அலைகளை உருவாக்கி, எம்மை இயங்க விடாமல் தடுப்பதே இவர்களுடைய நோக்கம். ஆனால், அது சாத்தியமற்றது. மரணத்தின் அத்தனை சவால்களையும் ஏற்றும் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இதற்குச் சொல்லும் ஒரே பதில், “வீழ்வேன் என்று நினைத்தாயோ“ என்பதாகவே இருக்கும். இதேவேளை இவர்களுடைய நோக்கம் ஒரு அதிகார நிலையின் உருவாக்கமே. ஏகத்துவத்தை நோக்கிய சிந்திப்பே. மற்றும்படி நேரடி அனுபவத்தைக் கொண்டவர்கள் மட்டும்தான் இதையெல்லாம் எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை நான் இங்கே கூறவில்லை. பொதுவெளியில் எல்லோருக்கும் இடமுண்டு. இங்கே நான் வலியுறுத்துவது, அவற்றின் நியாய அடிப்படைகளை மட்டுமே. அதேவேளை போரிலும் போராட்டத்திலும் ஈடுபட்ட, சிக்கிய, அந்தப் பரப்பில் வாழ்ந்த அனுபவமும் வாழ்நிலையும் முக்கியமானது. அவை புறக்கணிக்கக் கூடியவையல்ல என்பதையும் நினைவூட்டுகிறேன். 

ஏகப்பெரு வியாபாரிகள் எப்போதும் தங்களுக்கு நெருக்கடியான விசயங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அனுமதிப்பதும் இல்லை. எனவே அவர்கள் அதை மூர்க்கமாக எதிர்ப்பர். தந்திரங்களைக் கையாள்வர்.  அதுவே நடந்து கொண்டுமிருக்கிறது. ஆகையால், ஈழவியாபாரிகள், தேசிய வியாபாரிகள் எல்லாம் உண்மைக்குரல்களை எப்படியாவது அடக்கி விட முயற்சிக்கின்றனர் என்பதே நிதர்சனமானது. இதற்காக அவர்கள் பாவிக்கின்ற உத்திகளில் ஒன்றே ‘அரசு சார்பானவர்’, ‘போராட்டவிரோதி’ ‘துரோகி’ என்ற அடையாளப்படுத்தல்கள்; முத்திரை குத்துதல்கள். ஆனால், என்னதான் நடந்தாலும் இதற்காக ஓய்ந்து விட முடியாது.? அப்படி ஓய்வதற்கு எந்த  அவசியமும் இல்லை. வாழ்வையே அபாயப்பிராந்தியத்தில் வைத்தபின் எத்தகைய நெருக்கடிகளும் ஒன்றுதான். வெள்ளம் தலைக்கு மேலே ஏறியபின் சாண் என்ன, முழம் என்ன?

2. பான்கி மூனின் நிபுணர்குழு அறிக்கை தொடர்பான கேள்விகள் பலவும் போரில் சிக்கிய மக்களுக்கு உண்டு. கேள்விகள் உள்ளபோதும் அந்தக் குழுவின் அறிக்கை முக்கியமானது என்பதில் மறுப்பில்லை. ஏனெனில் அது அவலங்களைச் சந்தித்த மக்களின் சாட்சியங்களை உள்ளடக்கிய அடிப்படையிலும் முடிந்த அளவுக்குச் சரியான தகவல்களை மதிப்பீடு செய்த அடிப்படையிலும் அது ஒரு முக்கிய ஆவணம். அதேவேளை இன்னொரு புறத்தில் அது பரிகாசத்துக்குரியது என்பதே என்னுடைய புரிதல். 

வன்னியில் இறுதிப்போர் நடந்த நாட்களில் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை யாருக்குத் தெரியவில்லை? அதிலும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பிலும் வல்லமையிலும் இருந்த ஐ. நா, அனைத்துத் தொடர்பாடல் மற்றும் தகவல் அறியும் மூலவளங்களைச் சிறப்பாகக்  கொண்டிருந்த ஐ.நா அன்று என்ன செய்தது? பின்னாளில் விடப்போகும் அறிக்கைக்கான புள்ளிவிவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்ததா?

ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப்படும்போது, லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை அழிக்கப்படும்போது செயலாற்றியிருக்க வேண்டிய முக்கியமான தரப்பு அறிக்கைகளுக்கான தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருந்திருக்கிறது! இந்த அறிக்கையை தயாரிப்பதற்காகத்தானா அல்லது இது போன்ற அறிக்கைகளைத் தயாரித்து அதிகார நாடுகளின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்தத்தானா ஐ.நா நிறுவனம் செயற்படுகிறது? மேலும் இந்த அறிக்கையின்; பயன்களை அனுபவிப்பவர்கள் யார்? 

போரையும் அதில் நடந்த அனர்த்தங்களையும் நன்றாக அறிந்த ஐ.நா, அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய வலுவோடும் பொறுப்போடும் இருந்தது. ஆனால், என்ன செய்தது? போர் முடிந்த பிறகு நடுநிலையோடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நமக்குக் காண்பிக்கிறது. எங்களின் உளவியலை ஆற்றுப்படுத்த யோசிக்கிறது. அதாவது, எங்களின் நியாயமான கோபங்களை இந்த அறிக்கையின் மூலம் கரைத்து வடியவிட முயற்சிக்கிறது. இது ஐ.நா வின் மிகப் பெரும் தந்திரங்களில் ஒன்று. உபாயங்களில் ஒன்று. இது ஒரு கண்கட்டு வித்தையன்றி வேறென்ன? இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த நிலையில் வரலாற்று அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் கொண்டுள்ள ஒரு மனம் இவற்றைப் பரிகாசம் செய்யாமல் வேறு என்ன செய்யும்? ஆனால், வெளியே இருப்போருக்கு இந்த அறிக்கை முக்கியமானதாகவே படும்.  ஏனெனில், அவர்களின் அனுபவம் வேறு. அதனால், அவர்களுக்கு இந்த அறிக்கை பெரியதொரு விசயமாகவே தெரிகிறது. 

சரி, இதற்குப் பின்னர், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டன. இந்த அறிக்கையினால், அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களினால் எத்தகைய நன்மைகளைப் பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரையில் பெற்றிருக்கிறார்கள்? அல்லது அவர்கள் இனியாவது என்ன நன்மைகளையெல்லாம் சர்வதேச அரசியற் பொறிகளிலும் கூட்டுகளிலும் இருந்து பெறவுள்ளனர்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை யமுனா ராஜேந்திரனும் அவரைப் போன்றவர்களும் அறுதியிட்டுக் கூற முடியுமா? பொதுவாகவே ஐ.நாவின் அறிக்கைகளும் செயற்பாடுகளும் தீர்மானங்களும் யாருக்கு அதிக நன்மைகளைத் தருகின்றன என்ற ஆரம்ப அறிவைக்கூட, எளிய உண்மைகளைக் கூட சர்வதேச அரசியலைப் பற்றி, விடுதலை அரசியலைப்பற்றி தன்முதல் மூச்சாகக் கொண்டு எழுதிவரும் யமுனா ராஜேந்திரன் அறியாமலிருப்பது நகைப்பிற்குரியது@ கேள்விக்குரியது. 

ஆகவே, அதைவிட, எந்தப் பதிவுகளையும் குறிப்பெடுக்கவே முடியாமல், அதற்கான வசதியும் வளங்களும் இல்லாமல், இருந்தாலும் அவற்றைச் செய்து கொண்டு வருவதற்கான சூழல் இல்லாத நிலையில், தன் மனதிலும் நினைவிலும் கொண்டிருந்த அனுபவங்களை வைத்துக் கர்ணன் எழுதிய கதைகள் பெறுமதியானவையாகத் தெரியவில்லை யமுனா ராஜேந்திரனுக்கும் அவரைப்போன்று சிந்திப்போருக்கும்? இது எவ்வளவு கொடுமையான மதிப்பீடு. எவ்வளவு அநீதியான அணுகுமுறை?

கர்ணன், பெரும்பாலான தன் கதைகளினதும் தன்வாழ்களத்தினதும் நேரடிச் சாட்சி. அல்லது தன்சூழலின் சாட்சி. மற்றும்; அவர் ஒரு இலக்கியப்படைப்பாளி. ஐ.நா நிறுவனமும் அம்மனஸ்டிக் குழுவும், பிற அமைப்புகளும் அதனுடைய அதிகாரிகளும் கர்ணனும் ஒன்றல்ல. ஒன்றை அணுகும், அதை வெளிப்படுத்தும்  வௌ;வேறு தரப்பினர். அவை அனைத்து விடயங்களையும் பொறிமுறையோடு அணுகும் அமைப்புகள். அவற்றின் செயற்படு முறையும் அப்படியே. கர்ணன் அதே நியாயப்பாடுகளைத் தன்னகத்திற் கொண்டு வரலாற்றையும் உண்மையையும் விளக்க முற்படும் படைப்பாளி. முன்னையவை தங்களுடைய அறிக்கையை முழுமைப்படுத்திய பின்னரே வெளியிட முடியும். இலக்கியப்படைப்பாளி தன்வாழ்நாள் முழுவதிலும் அந்த விடயங்களை பல பரிமாணங்களில் முன்வைக்கும் தொடர் செயற்பாட்டாளர். ஆகவே கர்ணன் எழுதிக் கொண்டிருக்கும்வரையில் அவை பகுதி உண்மைகளாகவே, பகுதி விடயங்களாகவே இருக்கும். அவை முழுமையை நோக்கி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும். என்றாலும் அவரால் முழு உண்மைகளையும் எழுதி முடித்து விட முடியாது. அவரால் மட்டுமல்ல, எவராலும் அப்படி எழுதிவிட முடியாது. வரலாற்றை எழுதுதல் என்பதும் வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடு என்பதும் ஒருபோதும் முழு உண்மைகளையும் உள்ளடக்கியதாக இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அவை பகுதி உண்மைகளாக, அல்லது சார்பு நிலைப்பட்டனவாகவே இருக்கின்றன. இங்கே கர்ணன் நடந்த நிகழ்ச்சிகளைக் கட்டமைத்து தன்படைப்புகளை எழுதியிருக்கிறார். ஆகவே அவை உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. உண்மையின் அடித்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டவை என்று புரிந்து கொள்ளப்படுகிறது.  

இதையே நிலாந்தன் ‘பெரும்போக்காகவுள்ள யுத்த சாட்சியத்திலிருந்தும் அவர் (கர்ணன்) துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால், ஒரு முழுமையான யுத்த சாட்சியம் என்று வரும் போது அதன் தவிர்க்ப்படவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார். அவரையும், அவரைப் போன்றவர்களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு முழுமையான யுத்த சாட்சியமே விஞ்ஞான பூர்வமானதாகவும், அனைத்துலகக் கவர்ச்சி மிக்கதாகவும் அமையும்’ என்று குறிப்பிடுகிறார். இதில் மறுப்பில்லை. ஆனால், ஒரு படைப்பாளியைப் பார்த்து, ஏன் நீ எல்லா உண்மைகளையும் எல்லா விடயங்களையும் சொல்லவில்லை? என்று கேட்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிக் கேட்க முடியுமா? 

மட்டுமல்ல கோடன் வைஸின் THE CAGE என்ற புத்தகமும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் எவ்வளவோ இடங்களில் வேறுபடுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எனவேதான் ‘இவை ஈழத்து வாழ்வைப்பற்றிய கதைகளாக மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளாகவும் இந்தக் கதைகள் வெடிக்கின்றன’ என்று தமிழ்ச்செல்வன் சொல்கிறார். தமிழ்ச்செல்வனின் பார்வையும் புரிதலும் இந்த இடத்தில் ஒரு கலைஞனின் அனுபவத்தைக் கொண்டுள்ளன. இதை ராஜேந்திரனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்ச்செல்வனின் அரசியல் வேறாக இருக்கலாம். அதன் நோக்கு நிலைகளும் வேறானவையாக அமையலாம். கர்ணனுடைய கதைகளை அவர் புரிந்து கொண்டுள்ள முறையே இங்கே கவனத்திற்குரியது. 

இதைப் புரிந்து கொள்ள முடியாமல், அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல், ‘முள்ளிவாய்க்கால் அவலம் குறித்த யோ. கர்ணனின் கதைகள் சொல்கின்ற உண்மைகளின் முன்னே, (இவை பகுதி உண்மைகள்) ஐ.நா அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை, நோர்வே அறிக்கை, சர்வதேச நெருக்கடிக்குழுவின் அறிக்கை, நல்லெண்ண ஆணைக்குழுவின் அறிக்கை போன்றவற்றின் தகமை என்ன?’என்று கேட்கிறார் யமுனா ராஜேந்திரன். ஆகவே இங்கே மீண்டும் நான் அழுத்திக் கூற முற்படுவது இரண்டும் வேறு வேறு என்பதையே. அவற்றின் அடிப்படைகளும் வேறு வேறே. அந்த அறிக்கைகள் அந்தப் போரை மையப்படுத்தியவை. அதன் புள்ளிவிவரங்களை ஆதாரமாகக் கொண்டவை. ஆனால், கர்ணின் கதைகள் போர்க்கள நிகழ்ச்சிகளின் அடிப்படைகளையும் அந்தக் களத்தின் நிலைமையையும் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கையையும் அதனுடன் சம்மந்தப்பட்ட தரப்புகளின் (அரசு, புலிகள், சர்வதேச சமூகம் உள்ளிட்டவை) இயங்குதன்மைகளையும் பற்றியவை. ராஜேந்திரனே குறிப்பிடுவதைப்போல அந்தப் புள்ளிவிவரங்கள் குருதி சிந்துவதைப் பற்றியவை. வரலாற்றின் நிகழ்ச்சிகளையும் அவற்றின் விசித்திரங்களையும் பற்றியவை. எனவேதான் அங்கதம் தொனிக்க அவற்றைக் கர்ணன் வெளிப்படுத்துகிறார். அங்கதம் தொனிக்க யாரும் அறிக்கையிட முடியாது. அப்படிச் செய்தால் அது அறிக்கையும் அல்ல. அதை இலக்கியமே செய்ய முடியும். பிரதிகளின் வழியாகவே உண்மைகளைக் கண்டறிய முற்படுபவர், பிரதிகளின் வழியாகவே வரலாற்றையும் வாழ்வையும் உணர்ந்து கொள்ள முற்படும்போது ஏற்படுகின்ற அபத்தம் இதுதான். ஏனெனில் எல்லாப் பிரதிகளும் ஒரே தன்மையைக் கொண்டிருப்பதில்லை. ஒரே அணுகுமுறைக்குரியவையும் அல்ல. இதை விளங்கிக் கொள்ள வேண்டும். 

3. நான் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ தொகுதிக்கான முன்னுரையில் எழுதும்போது குறிப்பிட்ட நிஸார் கப்பானி, அன்னா அக்மத்தோவா, அடோனிஸ் போன்றவர்களின் பின்னணியோடு கர்ணனின் கதைகளையும் ஒப்பிடுவதாகக் குறிப்பிடுவதைப் பற்றி -  

வரலாற்றில் ஒவ்வொரு புள்ளிக்கும் வௌவேறு தன்மைகளும் ஒத்த தன்மைகளும் இருப்பதுண்டு. நிச்சயமாக எல்லாப் புள்ளிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. அப்படி அமையுமானால், அது வரலாறாகவும் மனித இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் சமூக ஊடாட்டம் உள்ளவையாகவும் இருக்க முடியாது. நான் குறிப்பிட்ட அன்னா அக்மதோவா, தன் பிள்ளைக்காகவும் கணவருக்காகவும் தன்னுடைய அயல் (சக) மனிதர்களுக்காகவும் தன்னுடைய அரசையே, ஆட்சியையே நிந்தித்தவர். அவருடைய சனங்களையும் பிள்ளையையும் கணவரையும் அவருடைய அரசே பலியிட்டது. அங்கே நிலவிய அதிகாரமே பலியெடுத்தது. இங்கே கர்ணனின் கதைகளிலும் சனங்கள் நம்பிய அமைப்பு சொந்த மக்களையே நெருக்கடிக்குள்ளாக்குகிறது. ஆகவே, ஏறக்குறைய ஒத்ததன்மைகள் இரண்டுக்குமிடையில் நிகழ்கின்றன. இதேவேளை, இலங்கை அரசினாலும் இந்த மக்கள் நெருக்கடிக்குள்ளாகின்றனர். அவற்றின் வெளிப்பாடுகளையும் உணர்வையும் பிரச்சினைகளையும் இன்னொரு நிலையில் கர்ணன் வெளிப்படுத்துகிறார். மேலும் பிற அதிகார அடுக்குகளையும். ஆகவே கர்ணனின் கதைகள் பல நிலைகளில் ஏற்படுகின்ற, ஏற்பட்ட பல பிரச்சினைகளைப் பேசுகின்றன. இவற்றை தன்னுடைய புரிதலுக்கு மட்டும் சாத்தியப்பட்ட அளவுகோலினால் யமுனா ராஜேந்திரன் அளக்க முற்படுவது எவ்வளவு அபத்தமானது? இதற்காக நான் ஒரு விளக்கப்பள்ளியை எப்படித்தான் ஆரம்பிப்பது?

4. கர்ணனின் கதைகளை விதந்தோதுபவர்களைப்பற்றியது. கர்ணனின் கதைகளைக் கொண்டாடுவோர் புலி எதிர்ப்பாளர்களாகவும் அரச ஆதரவாளர்களாகவும் இருப்பதால், கர்ணனும் அவர்களுடைய அரசியலுடன் சம்மந்தப்படுகிறார்,  இவர்களே கருணாகரனையும் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பற்றியது. 

இதென்ன கொடுமையான மதிப்பீடு? ஒரு பிரதியை, ஒரு பண்டத்தை, ஒரு வெளிப்பாட்டை, ஒரு நடவடிக்கையை, இப்படி ஏதோ ஒன்றை  விரும்புவோரைக் கொண்டு சம்மந்தப்பட்டதைப் பற்றிய மதிப்பீட்டுக்கு வருவது ஒரு வழிமுறை. ஆனால், அது முற்றிலும் சரியானதல்ல. சிலர், தமது நோக்கங்களுக்காகவும் தேவைகளுக்காகவும் விருப்பங்களுக்காகவும் அவற்றைக் கொண்டாடுவர். அது அவர்களுடைய தேவைகளின் அரசியலாக இருக்கலாம். ஆனால், எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. ஆகவே, அதற்காக அவற்றை அவற்றின் அடியாக மட்டும் வைத்து மதிப்பிடப்படுவது தவறானது. இன்னொரு சூழலில், இன்னொரு காலகட்டத்தில் அதன் அர்த்த பரிமாணம் வேறுபடும். தவிர, சில தரப்பினரால் குறிப்பிட்ட விடயம் கொண்டாடப்படுகிறது என்பதற்காக, அதை அவர்களுக்குள் குறுக்கிப் பார்ப்பது ஏற்புடையதுமல்ல. ஆனால் யமுனா ராஜேந்திரன் இதையே செய்கிறார். பிரதியைக் கொண்டாடும் தரப்பினரை வைத்தே பிரதியை மதிப்பீடு செய்கிறார். இதிலும் அவர் தன்னனுபவம் சார்ந்தே செயற்படுகிறார். சீசனுக்கேற்ற மாதிரியும் சூழலுக்கு ஏற்றமாதிரியும் தன் பண்டங்களை உற்பத்தி செய்யும் வழி முறைமையை இங்கே பொருத்திப் பார்க்கிறார். பிரதியின் உற்பத்தியானது எந்தத் தரப்பினரைக் குறியாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கில் வியாபார நோக்கத்திற்கான குறிவைத்தலை. இது ஒரு வியாபார வாழ்வின், அந்தச் சூழல்சார்ந்த அனுபவ விளைவு. இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? புலிகளை எதிர்ப்போரும் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான வேறுபாடான கருத்துள்ளோரும் கர்ணனின் கதைகளையும் கருணாகரனின் எழுத்துகளையும் பாராட்டினால், இவர்கள் எல்லோரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் என்று எப்படிக் கருதமுடியும்? இது கட்சி அரசியற் பார்வையே. அந்த அரசியலின் சராசரி மனநிலையே.


5. கறுப்பு வெள்ளை அரசியலைக் கடைப்பிடித்துக் கொண்டே கறுப்பு வெள்ளை அரசியலையும் மக்கள் நல அரசியலையும் குறித்துப் பேசுகிற அவலமாகவே கருணாகரன் அவர்களது அவதானம் இருக்கிறது’ என்பதைப் பற்றி. 

எத்தகைய அடிப்படைகளை வைத்துக்கொண்டு யமுனா எதைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் ஆதரங்களுடன் முன்வைக்கவில்லை. ஆதாரமற்ற முறையில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்குப் பொருள் என்னவாக இருக்கமுடியும்? 1980 களில் ஈழப்போராட்டத்தின் ஈர்ப்பு விசைக்குள் உள்வாங்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அந்த நாட்களில் அந்த விசையின் இழுவைக்குள் நடந்த அத்தனை சம்பவங்களுக்கும் விளைவுகளுக்கும் நேரடிப்பொறுப்பாளியாக நான் இருக்கவில்லை என்றபோதும் ‘எதிலும் எனக்குப் பொறுப்பில்லை’ எனக் கைகளைக் கழுவிக்கொள்வதை என்றும் நான் ஏற்றுக்கொண்டதில்லை. அதேவேளை எங்களின் தவறுகளையும் பலவீனங்களையும் அனுபவங்களின் வழியாகவும் வரலாற்றறிவின் வழியாகவும் களைய வேண்டும். புதிய சிந்தனையுடன்  விடுதலையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். தொடர்ந்தும் நாம் அலைய முடியாது, சனங்கள் தொடர்ந்தும் துயரங்களோடு வாழ இயலாது என்பதை அழுத்திக் கூறிவருகிறேன். இங்கே கறுப்பு வெள்ளை அரசியலுக்கு நாம் பலியான விதத்தை என் சொந்த அனுபவத்தையும் உள்ளடக்கியே பார்க்கிறேன். புலிகளின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அத்தனைக்கும் நாம் பங்காளிகள், உடன்பாட்டாளர்கள் என்று இல்லாது விட்டாலும் அவர்களின் தளத்தில் நின்று செயற்பட்டவர்கள் என்ற காரணத்தின் பொருட்டும் நியாயத்தின் பொருட்டும் ஏற்பட்ட நன்மை, தீமைகள் அனைத்திற்கும் நாமும் பொறுப்பாளிகளே. அதற்கான தண்டனைகளை நான் அனுபவித்துக் கொண்டேயிருக்கிறேன்.

மேலும் இந்த விசயங்களை விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னரே நான் எழுதி வரும் பல கட்டுரைகளில் காணமுடியும். இது தவிர, அவற்றில் வரலாற்றறிவும் சமகால உலக அரசியற் போக்குப் பற்றிய புரிதலும் ஒற்றை மைய உலகின் தோற்றம் குறித்த அவதானமும் ஈழவிடுதலைப்போராட்டத்துக்கு அவசியமானது என்று வலியுறுத்தியிருக்கிறேன். குறிப்பாக, மு. திருநாவுக்கரசுவின் ‘ஒற்றை மைய உலகில் போரும் சமாதானமும்’ என்ற புத்தகத்துக்கு எழுதிய விமர்சனத்தில் இது பற்றிய விளக்கம் தெளிவாகவே உள்ளது. மேலும் ஏராளமான கட்டுரைகளிலும். இது ‘இறுதி நிகழ்ச்சி’களின் பின்னர் இன்னும் விரிவடைந்து மேலும் செழிப்படைந்துள்ளது. இந்த இடத்தில் என்னுடைய எழுத்துகளையும் சிந்தனையையும் பலரும் வரவேற்கிறார்கள். அதேவேளை இன்னொரு அணியினர் கடுமையாக எதிர்க்கிறார்கள். சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சிலர் விவாதங்களின் பின்னர் ஏற்றுக்கொள்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆதரிப்பவர்களைச் சார்ந்தோ, அவர்களைத் திருப்திப்படுத்தியோ நான் செயற்படவில்லை. அப்படிச் செயற்படவேண்டிய அவசியமும் எனக்கில்லை. மீண்டும் சொல்கிறேன், இந்த வரலாற்றில் நன்மைக்கும் தீமைக்கும் நானும் பொறுப்பாளி என்ற உணர்வுடனே செயற்பட்டு வருகிறேன். இதை என்னுடைய கவிதைகளிற் துலக்கமாகக் காண முடியும். ஆனால், யமுனா இவற்றைக் கவனிக்காமல் விட்டது அவதானக்குறைவா? அல்லது திட்டமிட்ட நோக்கைக் கொண்டதா? என்று புரியவில்லை. எனவே இந்த நிலையில் எப்படி கறுப்பு வெள்ளை அரசியலைத் தொடர்ந்தும் நான் கடைப்பிடிக்கிறேன் என்றும் மக்கள் நல அரசியலைப் பேசுகிறேன் என்றும் முடிவுக்கு வருகிறார்? இதைக் குறித்த மேலதிக புரிதலுக்காக - இதழ் -38, பெப்ரரி -2012 இல் ‘வல்லினம்’ இணைய இதழில் வெளியாகிய என்னுடைய விரிவான நேர்காணலை இங்கே இணைக்கிறேன்.http://www.vallinam.com.my/issue38/interview1.html எழுத்தையும் பிரதிகளையும் முன்னிறுத்தி, அவற்றை ஆதாரமாக வைத்துத்தான் எதையும் அணுகுவதாகச் சொல்லும் ராஜேந்திரன்,  இந்த நேர்காணலைச் சரியாக வாசிக்கவில்லை என்பது தெளிவு. இந்த நேர்காணலில் நான் தெளிவாகவே பல விசயங்களைச் சொல்கிறேன். ஆனால், ‘சே குவேரா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி இலங்கையின் ஹொரானா பிரதேசத்திலுள்ள ஹகல கெலா ரப்பர் தோட்டத்துக்கு விஜயம் செய்தார். இரப்பர் மரங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவரது திட்டம்.....’ என்று எழுதிச் செல்லும் யமுனா ராஜேந்திரன், ஈழ நிலவரங்களைப் பற்றிய முழுமைகளையும் அதில் கர்ணன், கருணாகரன், நிலாந்தன் ஆகியோரைப் பற்றியும் துல்லியமாக அறிய முடியாமலிருக்கிறார். இதற்கான காரணங்கள் உள்நோக்கமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? தொழிலுக்காக எதையும் படித்து மனனம் செய்து வைத்திருக்கும் திறனை முதன்மைப்படுத்துவோரே இவ்வாறு சிந்திப்பதுண்டு. எனவே இந்த இடத்தில் அறிவு ஒழுக்கத்தின்படி வேறு புதியவிசயங்களை, அறிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ யமுனா ராஜேந்திரன் தயாராகவில்லை. அதற்கு அவருடைய வணிக மனம் இடமளிக்கவில்லை?  எவ்வளவுதான் அவர் மறுத்தாலும் இதுதான் அவருடைய அடிப்படையாகும். இல்லையெனில், அவரே வலியுறுத்தும், நம்பும் கோட்பாடுகளின் வழியில் விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வோடு இணைந்திருப்பார். அந்த மக்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய போராட்ட உணர்வுகளையும் பிரச்சினைகளையும் புரிந்திருப்பார். குறைந்த பட்சம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலுக்கான விழிப்புணர்வைத் தூண்டும்  செயற்பாட்டுத்தளத்தில், தன்வாழ்வின் நெருக்கடிச் சவால்களுடன், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் போராடிய விடியல் சிவாவைப்போல இயங்கியிருப்பார். அல்லது புரட்சிகர அரசியலை முன்னிறுத்தியதற்காக தேடப்படும் நபராக இருந்த எஸ்.வி.ஆரைப்போல, சிறைவரை சென்ற தியாகுவைப்போல ஒரு கட்டத்திலாவது வாழ்ந்திருப்பார். 

‘யோ. கர்ணன், கருணாகரன் போலவே, புகலிட – தமிழக புலியெதிர்ப்பாளர்களின், ஈழவிடுதலை எதிர்ப்பாளர்களின், இலங்கை அரச ஆதரவாளர்களின், இந்த அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் அணிகளை நோக்கி நகர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறார்’ என்று ராஜேந்திரன் குறிப்பிடுவதைப் பற்றி. 

இதிலும் யமுனா ராஜேந்திரன் திட்டமிட்டே செயற்படுகிறார் என்றுதான் படுகிறது. இதை நான் வன்மையாகவே கண்டிக்கிறேன். எந்த அடிப்படையில் இவ்வாறு யமுனா ராஜேந்திரன் இத்தகைய தீர்மானத்துக்கு வருகிறார் என்று திரும்பவும் கேட்கிறேன். புலி எதிர்ப்பு அணியின் விருப்பத்தைப் பெறுவதற்காக, அரச சார்பானவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு எங்கே நான் எழுதியிருக்கிறேன்? அதை யமுனா ராஜேந்திரன் மட்டுமல்ல, வேறு யாராவது ஆதாரப்படுத்த முடியுமா? அவ்வாறு ஒரு சொல்லை, ஒரு வார்த்தையை இவர்களாற் காட்டமுடியுமா? 

மேலும் புலி எதிர்ப்பாளர்களின் - அரச ஆதரவாளர்களின் “பொற்கிளிகள்“ எதுவும் என்னிடமில்லை. அவர்களால் பொன்னாடைகளை எப்போது நான் போர்த்திக்கொண்டேன்? யார் அந்தப் பொன்னாடைகளை எனக்குப் போர்த்தியது? யார் அது சார்பான கிரீடங்களைச் சூட்டியது? எங்கே அவற்றைப் பெற்றிருக்கிறேன்? அல்லது அத்தகைய அங்கீகாரத்தை எப்போது நான் ஏற்றும் விரும்பியுமிருக்கிறேன்? கடந்த கால நிகழ்ச்சிகளின் சாட்சியாக நானும் இருப்பதால், அந்த அனுபவங்களை பகிரவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதால் அவற்றை எழுதுகிறேன். அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு புதிய காலமொன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். அதை ஏற்பவர்களையும் விரும்புகிறவர்களையும் வைத்துக்கொண்டு எவ்வாறு என்னை இவ்விதம் அளக்க முடியும்? எல்லாவற்றுக்கும் அப்பால், என்னுடைய அனுபவங்களைப் பகிர்வதையும் வரலாற்று நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துவதையும் அதிலிருந்து பொருத்தமான தெரிவுகளைச் செய்யலாம் என்று கூறுவதையும் பலரும் வாசிக்கிறார்கள். நான் முன்னரே சொன்னதைப்போல அவர்களில் பாராட்டுவோரும் இருக்கிறார்கள். எதிர்ப்போரும் இருக்கிறார்கள். நான் யார் சார்பாகவும் செயற்படவில்லை. யாரையும் திருப்திப்படுத்துவது என்னுடைய நோக்கமும் இல்லை. என்னுடைய நிலை நின்று எழுதுகிறேன். வரலாற்றின் சாட்சியாக, நல்லவற்றுக்கும் கெட்டவற்றுக்கும் சாட்சியாக நின்று எழுதுகிறேன். தீமைகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் மீள நாம் மீள வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். அவ்வளவுதான். என்னுடைய வெளிப்பாடுகள் அத்தனையும் எழுத்து மூலமானவையே என்பதால், அவற்றை வைத்து என்னால் இதை நிறுவமுடியும்.

ஆனாலும் ஒரு விசயத்தை யமுனா ராஜேந்திரன் ஏற்றுக்கொள்கிறார், ‘சிலருக்குத் தமது அனுமானங்களின் அடிப்படையில் எனக்கு முத்திரை குத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஐ.பி.ஸி, நிருபம், குளோபல் தமிழ் நியூஸ் என வேறுபட்ட தளங்களில் நான் ஊதியத்திற்கென  வேலை செய்தாலும் எனது சுயாதீன நிலைப்பாட்டிலேயே நான் இருந்து வந்திருக்கிறேன். இந்த மூன்று இடங்களிலும் இதனைச் செய் என எவரும் என்னை நிர்ப்பந்தித்தது இல்லை. அதற்கு நான் அடிபணிந்ததும் இல்லை. அகிலனோ அல்லது என்மீது இயக்க முத்திரை குத்துபவர்களோ எனது எழுத்துகளில் இருந்து அதற்கான ஆதாரங்களை முன்வையுங்கள் எனத் திரும்பத்திரும்பக் கோரி வருகிறேன். எவராலும் அதனை முன்வைக்க முடிவதில்லை. அதனை எவராலும் முன்வைக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும்’ என்று. இதையே நானும் யமுனா ராஜேந்திரனுக்குத் திருப்பிச் சொல்கிறேன். உங்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதி என்று ஏன் சிந்திக்கிறீர்கள்? 

இறுதியாக, யமுனா ராஜேந்திரனைப் போன்றவர்களைப்போல நான் பிரச்சினைகளின் களத்தை விட்டு எப்பொழுதும் வெளியேறவில்லை. பிரச்சினைகளின் மையத்தில், நெருக்கடிகள் மத்தியில், அவலப்பரப்பில், சனங்களோடு சனமாகவே தொடர்ந்தும் இருக்கிறேன். சனங்கள் சந்தித்த அத்தனை வலிகளையும் சுமைகளையும் அவமானங்களையும் நானும் சந்தித்திருக்கிறேன். என் பொருட்டு என்னுடைய குடும்பமும் இதையெல்லாம் முழுமையாகச் சந்தித்திருக்கிறது. இன்னும் சந்தித்துக்கொண்டேயிருக்கிறது. கடந்த காலத்தில் எங்கள் அரசியல் வழிமுறைகளில் இருந்த அரசியற் தவறுகளும் அறப்பிழைகளும் எங்களுடைய வாழ்க்கையை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. அதற்கான தண்டனையை நாங்கள் ஏற்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் எங்களின் வாழ்க்கை முறையே எங்களின் பலம். அதுவே எங்களுடைய சேதி. இதைப் ‘பொங்குதமிழ்’ ஆசிரிய பீடமும் அறியும். 

ஆனால், யமுனா ராஜேந்திரனோ, ஈழத்துக்கு நிகரான பல பிரச்சினைகள் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கும்போது அவற்றையெல்லாம்  விட்டுவிட்டு, அங்கிருந்து வெளியேறி, வளர்ச்சியடைந்த லண்டனை நோக்கிப் பெயர்ந்தவர். இவ்வளவுக்கும் ஈழத்திலிருந்த அரசியல் நெருக்கடிகள் அளவுக்கு, உயிராபத்துகளின் அளவுக்கு தமிழகத்தில் ராஜேந்திரனுக்குப் பிரச்சினைகள் இருக்கவில்லை. இளமைக் காலத்திலேயே புரட்சியின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட அவர் எப்படி லண்டனைத் தேர்ந்தெடுத்தார்? அவருடைய கால்களும் மனமும் பயணித்திருக்க வேண்டிய இடங்கள் வேறாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பிரித்தானியச் சாம்ராஜ்ஜியம் எப்படி இத்தனை வளமுடையதாகியது? நூற்றாண்டுகளாக, ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்ரேலியக் கண்டங்களில் சுரண்டிய வளங்களும் அந்த மக்களின் குருதியும் வியர்வையையும் கண்ணீருமே இன்றைய பிரித்தானியா. அப்படிப் பார்த்தால், ராஜேந்திரன் குடிப்பது இந்த மக்களின் கண்ணீரும் இரத்தமுமே. ராஜேந்திரன் அனுபவிப்பது இந்த மக்களுடைய வியர்வையின் விளைச்சல்களையே. எங்கள் முன்னோர்களின் இரத்தைத்தையும் கண்ணீரையுமே. 

ஆனால், யமுனா விரும்புகின்ற, ஆதர்சமாகக் கொள்கின்ற சே குவேராவோ கியூபாவில் அதிகாரமும் பாதுகாப்பும் வசதியுமுள்ள வாழ்க்கை இருந்தபோதும் அதை விட்டு விட்டுப் போராடும் தேவையுள்ள இடத்தை நோக்கிப் பயணித்தவர். அந்தப் பயணத்தில் சோதனைகளையும் வேதனைகளையும் தெரிந்து கொண்டே சந்தித்தவர். இறுதியில் அந்தப் பயணத்தில் மரணத்தையே தழுவியவர். சே குவேரா யமுனா ராஜேந்திரனுக்கு  வாசிப்பின்பத்தை அளிக்கிறார். எங்களுக்கோ வாழ்க்கைத் தோழனாகிறார். அதுபோலவே எழுத்து ராஜேந்திரனுக்குத் தொழிற்றுறை சார்ந்த ஒன்று. எங்களுக்கு அது வாழ்க்கையின் ஊற்று. 

யமுனா ராஜேந்திரன், தான் பிறந்து வளர்ந்த மண்ணில் இன்றிருக்கின்ற பெரும்பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு, காவிரியாறு, கூடங்குளம் அணுமின்நிலையம் போன்ற பிரச்சினைகளையும் ஒடுக்கப்பட்டோர் விவகாரங்களையும் பொருட்படுத்த விரும்பவேயில்லை. அவை அவருடைய கண்களுக்குப் புலப்படவும் இல்லை. மேலும் இந்திய மண்ணில் நீடிக்கின்ற அசாம், காஸ்மீர், பஞ்சாப், மணிப்புரி போன்ற பெரும்பாலன மாநிலங்களில் நிலவுகின்ற இராணுவ வேட்டைகளையும் ஒடுக்குமுறைகளையும் காணவில்லை. ஏன், தமிழக - இலங்கை மீனவர் பிரச்சினையைப் பற்றிக்கூட ராஜேந்திரன் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அவற்றின் வேர்களைக் கண்டறியும் முயற்சியில் அவர் இறங்கவும் இல்லை. இந்தப் பிரச்சினைகளோடு போராடும் மக்களுடன் இணைந்திருக்க விரும்பவுமில்லை. அதற்கான அக்கறைகளே அவரிடம் இல்லை. இவற்றைப் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகளை ‘தொலைநோக்கி’களில் பார்த்து அவரால் எழுதிக்கொண்டிருக்க முடியுமே தவிர, இந்தப் பிரச்சினைகளின் மையத்தில் இறங்குவதற்கு அவரால் ஒரு போதுமே இயலாது. 

ஆனால், ஒரு இடதுசாரி அப்படி இருக்க முடியாது. தத்துவங்களையும் வியாக்கியானங்களையும் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் காலம் இதுவல்ல. ஊடகத்துறையைச் சேர்ந்த மிக இளவயதுடைய கவின்மலர், பாரதித்தம்பி, குட்டிரேவதி போன்றோரே சனங்களின் போராட்டங்களோடிணைந்து வேலைசெய்யும் நிலை இன்று. அவர்கள் தங்கள் பங்குக்கு எழுதிவிட்டு தங்களின் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவில்லை. எழுத்தை நடைமுறையாக்கும், மாற்றங்களைச் செயல்முறையாக்கும் தேவையுள்ள சூழல் இது. 

ஒரு இடதுசாரியின் பாத்திரம் என்பது, பங்காளி, பங்கேற்பாளன் பற்றிய விளக்கங்களைச் சொல்வதில் அர்த்தம் பெறுவதில்லை. தான் நம்புகின்ற கோட்பாட்டின்வழி, தான் நேசிக்கின்ற சமூகத்துக்காக, தன்னை உட்படுத்திச் செயற்படுவதிலேயே அது முழுமையடைகிறது; அடையாளம் பெறுகிறது. அல்லது கோட்பாடுகளில் இருந்தும் நடைமுறையில் இருந்தும் இறங்கிச் சென்றதாக யமுனா ராஜேந்திரனே குற்றம்சாட்டுகின்ற தமிழகத்தின் இடசாரிகளையும் விட மோசமானவராகவே அவர்  இருக்க முடியும். இங்கே நாம் ஈழத்தில் வந்து போராடுங்கள், ஈழத்தமிழர்களின் துயரங்களைச் சுமந்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தவோ வலியுறுத்தவோ இல்லை. யமுனா ராஜேந்திரன் பிறந்து வளர்ந்த நாட்டின் மக்களுக்காக, அவருடைய சனங்களுக்காக, அவர் விரும்புகின்ற சனங்களுக்காக ஏதாவது செய்யுங்கள் என்றே கேட்கிறேன். அப்போதுதான் அவர் எழுதுவதற்கான அறத்தை அவரால் பெற முடியும். இல்லையெனில், ஈழத்தைச்சேர்ந்த ஒருவர் ஈழ நிலவரங்களைப் புறக்கணித்து விட்டு பலஸ்தீனத்தைப் பற்றியோ கிழக்குத் திமோரைப் பற்றியோ சுலபமாகப் பேசுவதற்கு நிகரானது. இப்படியே ஒருவர் பேசித் தன்னுடைய போராட்டப் பங்கேற்பை நிகழ்த்தி விடலாம். ஆனால் அது ஒரு அசல் தப்பிலித்தனமாகும்.

இதனாற்தான் போராட்டங்களைப் பற்றியும் போராளிகளைப் பற்றியும் கதைப்பதை விட ஒரு போராளியாக வாழ்வதே தேவையானது என்றேன். அதுவே சிறந்ததும். தன்னைப் பாதுகாப்பதற்கான உபாயங்களை ஒருவர் வகுப்பதை விடவும் சனங்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அதிகாரச் சக்திகளுக்கெதிரான வியூகங்களை வகுப்பதே அவசியம். அதுவே ஒரு போராட்ட விரும்பிக்கு அழகு. அதுதான் சனங்களைப் பற்றிச் சிந்திப்பவனின் வேலை. 

இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு தனியே சிங்களத்தரப்போ, மகிந்த ராஜபக்ஷ அரசோதான் பொறுப்பு என்று யமுனா ராஜேந்திரன் நம்புகிறார். ஆனால், சர்வதேச அரசியலைப் பேசும் அவர், இடதுசாரிய அரசியலின் வழியில் வந்ததாகக் காட்டும் அவர், இந்த யுத்தத்தில் பிற ஆதிக்கச் சக்திகளான இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா , கியுபா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், யப்பான், இஸரேல்  போன்ற நாடுகள் வகித்த பாத்திரங்களைப் பற்றி அறியாதிருக்கிறார். இந்தச் சக்திகள் தங்களின் அதிகாரப் போட்டிக்காகவும் நலன்களுக்காகவும் எப்படித் தொழிற்பட்டன என்பதை உணராதிருக்கிறார். ஈழ யுத்தம் என்பது ஒரு கூட்டு யுத்தம் என்பதையும் கூட்டுப்படைகளில்லாத ஒரு கூட்டு நடவடிக்கையாகவே அது நடந்தது என்பதையும் ராஜேந்திரன் அறியவில்லை. 

அப்படி அவர் இந்த உண்மைகளை அறிந்திருந்தால் அவர் எப்போதோ லண்டனை விட்டு, ஐரோப்பிய நாடுகளை விட்டு, இந்தியாவை விட்டு நீங்கியிருப்பார். ஏன் இந்தப் பூமியை விட்டே நீங்கியிருப்பார். வேறு கிரகங்களுக்கும் அவர் போகமுடியாது. அங்கும் ரஷ்யாவும் அமெரிக்காவும் பிற ஆதிக்க சக்திகளும்தான் கொடிகளை நாட்டியுள்ளன. போதாக்குறைக்குப் பிற கிரகங்களை நோக்கிச் செய்மதிகளையும் அவை அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

எனவே மீண்டும் சொல்கிறேன், போராட்டங்களைப் பற்றி லட்சம் பக்கங்கள் எழுதுவதை விடவும் போராட்டத்திற் பங்கெடுப்பதே மேலானது. அந்தக் களத்தில், அந்த மக்களுடன் வாழ்வதே சிறப்பு. அந்த அனுபவமும் அறிவுமே உண்மையை அறியவும் நெருங்கவும் சுவைக்கவும் கூடியதாக இருக்கும். சரியும் பிழையும் அங்கேதான் விளங்கும். யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான வெளியின் அளவையும் தன்மை வேறுபாட்டையும் அங்கே தெளிவாக உணர முடியும்.

‘இல்லை, மற்றொரு வானத்தின் கீழும் அல்ல
அந்நியச் சிறகுகளின் அரவணைப்பில் அல்ல
அன்று நான் எனது நாட்டு மக்களோடு இருந்தேன்
என் நாட்டு மக்களுக்கு விதிக்கட்டிருந்த இடத்தில்’ 

                                                                                                      - அன்னா அக்மதோவா

- இந்த எதிர்வினைக் கட்டுரைக்கான தலைப்பு அன்னா அக்மதோவா அவர்களின் இரங்கற்பா என்ற கவிதையில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 

00

Monday, November 5, 2012

சேகுவேரா இருந்த வீடு - நூல் வெளியீட்டு நிகழ்வு

 யோ. கர்ணனின் “சேகுவேரா இருந்த வீடு“ சிறுகதை நூலின் வெளியீட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்























Saturday, November 3, 2012

மெழுகாய்க் கனிந்த ஆஸ்பத்திரியில் புன்னகையைத் தவறவிட்ட பெண்























மெழுகாய் உருகிக் கொண்டிருந்த ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன்
இருபத்தி நான்காம் அறை
நாற்பத்தி ஏழாம் இலக்கக் கட்டில்
புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண் 
அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு.

மருத்துவத் தாதி என்பது 
சிகிச்சைக்கும் ஆதரவுக்கும் இடையில் கனிந்த மலர் என்பதுவா 
உதிர்ந்த மலர் என்பதுவா 
என்றறிய விரும்பிய மனதில் 
கத்திகளும் காயங்களும் மாறி மாறி விழுகின்றன.

அருகே,
முகத்தை மறைக்க விரும்பிய கிழவனொருவன்
அகத்தை மறைக்க முடியாமற் திணறிப் புலம்பினான்.
அவனிடம் உருக்குலைந்த விதியைக் கண்டேன்.
மலத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாட்களைத் தள்ள முடியாமல்
விதியின் ஓரத்தில் அவனிருக்கையில்
அவனைப் புதுப்பிக்க முயல்கிறது மருந்தின் வாசனை. 

என்னையும்தான்.

வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் 
புன்னகைக்குத் தாவும்படி என்னைச் செய்யும் மந்திரத்தை 
அந்த மருத்துவர் இன்னும் உச்சரித்துக் கொண்டேயிருக்கிறார். 

இனிப்பும் மகிழ்வுமாக இருந்த 
என்னுடல் பாரமாகிக் கனக்கிறது
வலியும் வேதனையுமாகிக் கனக்கும் 
இந்தவுடல் காற்றாகிடத் துடிக்கிறது.

அப்படியே தன்னுடலும் என்கிறான் வலி பெருத்த மற்றவனும்
இன்னொருவனும் இன்னொருவரும்...

அந்த மருத்துவமனை வலியால் நிரம்பியதா
வலியைப்போக்கும் மந்திரத்தினால் நிரம்பியதா 
அறியேன்
ஆனால்,
இரண்டுக்குமிடையி்ல் அது போராடிக் கொண்டேயிருக்கிறது முடிவற்று.

அங்கிருந்து நான் வெளியேறினாலும்
அது அப்படித்தானிருக்கும்
வலிக்கும் வலி நீக்கத்திற்குமிடையில்.

ஒரு மருத்துவமனையின் விதியென்பது 
வலிக்கும் வலியை நீக்குவதற்கு மிடையில் 
ஓயாது ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலா?

இன்னும் நான் அதே கட்டிலில்தான்.

வழுகிச் செல்லும் புன்னகையை
விலத்திச் செல்ல முடியாமல்
திரும்பி வரும் தாதியிடம் எதையோ சொல்லத் தேடினேன்,
அவளிடமிருந்த கவனமற்ற நிலையிலும் மிச்சமாக இருந்த ஈரத்தை.

மெழுகாய்க்கனிந்து கொண்டிருந்த ஆஸ்பத்திரியில்
எனக்குப் பதிலாக இன்னொருவர்
மேலும் இன்னொருவர் என 
வந்து கொண்டிருப்போருக்கிடையில்
புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண்
அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு.

மருந்தின் வாசனை 
மகிழ்ச்சிக்கும் வேதனைக்கும் இடையில் 
சுகமின்மைக்கும் சுகத்திற்குமிடையில் 
சித்து விளையாடிக் கொண்டிருக்கிறது கணந்தோறும்.



00