Saturday, November 12, 2011

தேவன் வருவார்


காய்ந்து, கறள் கட்டின மாதிரி இருந்த இரத்தைக் கழுவினான் அலோஸியஸ். அது கையை விட்டுப் போக மறுத்தது. வாய்க்கால் மண்ணை அள்ளிக் கைகளைத் தேய்த்தான். இரத்தக்கறள் அல்லவா. லேசில் போகமமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தது. மணந்து பார்த்தான். இரத்த வெடில். ‘நாய்ச்சீவியம்’ என்று பட்டது. சவுக்காரமோ ‘சேவ்எக்ஸோ’ போட்டுக் கழுவினால்தான் வெடில் போகும். மிஞ்சியிருக்கிற கறளும் தொலையும். ‘சேவ்எக்ஸ்க்கு’ எங்கே போவது?

பொலித்தீன் பையில் சுற்றியிருந்த அந்த அழுக்குப்படிந்த சவுக்காரத்தை எடுத்துக் கைகளைத் தேய்த்தான். கைகளைக் கழுவிய பிறகு மறுபடியும் மணந்து பார்த்தான். இப்போது சோப்பின் மணமே மூக்கிலேறியது. எத்தனை வருசமென்றாலும் ‘சன்லைற்’ சோப்பின் மணம் மாறவில்லை. அதே மணம். அதே தரம். முப்பது வருசமாக அவனுடைய மூக்கு அதைப்பழகியிருக்கிறது.

கால்களில் தெறித்திருந்த கறைகளையும் கழுவினான். தினமும் கொலை. தினமும் குருதி. அலோஸியஸ்க்கு இதெல்லாம் சாதாரணம். ஆனால் கொல்லும் போது வெறுப்பாகவும் இரக்கமாகவும் இருக்கிறது. அதேவேளை அதில் ஒரு ருஸியும் உண்டு.

ஆனால், எல்லாம் முடிந்து வெளியே போகும்போது கிளீனாகப் போக வேணும். தனக்கிசைவாக இரண்டு உலகங்களை அதற்கேற்றமாதிரி வைத்திருந்தான். வீட்டுக்குப் போய் உடுப்பை மாற்றிக் கொள்ளலாமா என்று யோசித்தான். ஆனால், உடல் சூட்டில் கொதித்தது. கடந்த இரவு குளிப்பதற்கு நேரம் இல்லை.

வாய்க்காலில் தாராளமாகத் தண்ணீர் ஓடுகிறது. தெளிந்த நீர். அதற்குள் ஒரு கூட்டம் மீன்கள். அவனிடம் நெருங்குவதும் பிறகு மிரண்டோடுவதுமாக. ஒரு மான் கூட்டத்தைப் போல அவை மிரட்சியோடு இருந்தன. ஒரு கணம் சிறுவர்கள் கூட்டத்தைப் போலவும் இருந்தது. ஏதோ வம்பு செய்வது போல வருவதும் பிறகு மிரண்டோடுவதுமாக. எல்லாம் தூண்டிலில் சிக்கும்வரைதான்.

அவனுக்கு மீன்களைப் பார்க்கும்போது சிரிப்பு வந்தது.

வாய்க்காலில் விழுந்து குளித்தால் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது நேரம் போதாது. சந்தையில் வழமையை விட நேரம் பிந்திவிட்டது. பேசாமல் முகத்தையும் மேல் உடலையும் கழுவிக் கொண்டு புறப்பட்டான்.

தொண்டை வரண்டு தாகமெடுத்தது. இனி இந்திரனிடம் போக முடியாது. நேரமாகி விட்டது. சூரியன் பனைக்கு மேலே. உச்சியில். இந்திரன் ‘கோப்பிறேஷனு’க்குப் போயிருப்பான். ‘கோப்பிறேஸ’னில் பழைய கள்ளைக் கலந்து வைத்திருப்பார்கள். புலிகளின் வடிசாலை குண்டு வீச்சில் அடிபட்ட பிறகு, வடிசாலைக்குப் போகும் பழைய கள்ளை மறுபடியும் கலக்கிறார்கள். பச்சைப் புளி. கள்ளின் சுவையையே தெரியாமலாக்கி விட்டார்கள். வாயையும் வயிற்றையும் பழுதாக்குவதுதான் மிச்சம். ஆனால் சுளையாகக் காசைப் பிடுங்கி விடுகிறார்கள்.

‘ரண்டு போத்தலைத் தனியா எடுத்து வை’ என்று எத்தனை தடவைதான் சொன்னாலும் இந்திரன் நேரம் பிந்தினால் எடுத்து வைக்க மாட்டான். சரியான தொடை நடுங்கி. கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இவனைப்போல நடுங்கிச் சாகும் ஆளை அலோஸியஸ் தன் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. பரதேசி நாய். ஆனால் தகப்பன் இவனை விட நேர் மாறு. என்ன மாதிரி அவன் இருந்தான்!

“மடத்தல் ரத்தினம்“ என்றால், அந்த நாளையில் யார்தான் பயப்பட மாட்டார்கள். எந்தப் பெரிய ஆளுக்கும் அவனைப் பற்றி ஒரு பயம் உள்ளுர ஓடிக்கொண்டிருக்கும். ரத்தினத்தின் அண்ணன் தம்பிகள் ஆறு பேரும் வெட்டுக் கொத்துக்காரர்கள். ஆனால், அந்தக் குடும்பத்தில் படு சுவாகியாக, ஒரு பசு மாட்டைப் போல வந்து பிறந்திருக்கிறான் இந்திரன்.

சீவுகிற நேரம் போனால், ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு ஐந்தைக்கூட தருவான். வயிறு முட்டக் குடிக்கலாம். ஆனால், யாருக்கும் ஆள் காட்டக் கூடாது. காட்டினால் தொலைந்தான். பாதிக் கள்ளை வாங்கிக் கொண்டு ‘போய் வாருங்கள்’ என்று அனுப்பி விடுவான். பிறகு கொஞ்ச நாளைக்கு அவனிடம் அவர்கள் நெருங்க முடியாது. அவனைக் கோவிக்கவும் முடியாது. சாதுவல்லவா!

‘ரண்டை எடுத்து வையடா’ என்றால், அதற்குச் சம்மதியான். அந்த மெல்லிய உருவத்தில் இத்தனை நிதானமா என்று அலோஸியஸ் போதையில் கூட வியந்திருக்கிறான். இருக்காதா பின்னே. சட்டத்துக்கு மாறாக எப்படியோ தந்திரமாக எல்லோருக்கும் கள்ளைக் கொடுத்து விடும் ஆளை எப்படி மறுத்துப் பேசமுடியும்?

ஆனால், சட்டத்தைத் தூக்கிக் கொண்டு வரும் அவனுடைய அதிகாரிகளிடம் அவன் சிக்குவதில்லை. எல்லாம் அவனுடைய சாதுரியம். யாரோடும் அவன் வாதிட்டதில்லை. தான் நினைத்ததை எப்படியோ செய்து விடுவான். அதுவும் மற்றவர்கள் கோபப்படாதமாதிரி.

பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு தவறணைக்கே போனான் அலோஸியஸ்.

தூரத்தில் வரும்போதே தெரிந்தது சனக்கூட்டம். இண்டைக்கும் வரிசைதானோ என்று யோசித்தான். இப்போதே தாகம் வாட்டுகிறது. இதற்குள் கியூவிலும் நிற்பதென்றால்? பூழல் வேலை. இந்தப் பழங்கள்ளுக்கு ஒரு கியூ. நல்லகாலம் பெண்டுகள் இல்லை. அவையளும் கள்ளுக்குடிக்கத் தொடங்கியிருந்தால் இப்ப கதையே வேறமாதிரியிருக்கும். இப்போதே அடிபிடி வேறற. அதை விட கட்டைப் பூபாலனின் அட்டகாசம், தாங்கேலாது. தான் ரண்டு மாவீரரின் தகப்பன் என்று சொல்லிக் கொண்டு, தனக்குத் தான் முன்னுரிமை என்று நிற்பான். ‘ஒரு நாளைக்கு இந்தச் சேட்டைக்கு மூஞ்சையைப் பொத்திக் குடுக்காமல் விடமாட்டன்’ என்று அலோஸியஸ் மட்டும் ஆறேழு தடவை தன்னுடைய தொடையில் ஓங்கிக் குத்தியிருக்கிறான்.

தாகத்தில் இப்போதே நாக்குப் புரள மறுத்தது. மனதில் எரிச்சல் கெம்பியது. ஆனாலும் வேறு வழியில்லை. கியூவில் நிற்கத்தான் வேணும்.

கிட்ட வந்தபோது, ஒரே அமளியாக இருந்தது. இரைச்சல். வசையும், திட்டும், கெஞ்சுதல்களும் கோபமும் கொந்தளிப்பும் நிறைந்த இரைச்சல். உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஒவ்வொரு முகங்களும் தவித்தன. கள்ளின் மணத்தோடு அவர்களின் அந்த உணர்ச்சிச் சுழிப்புகளைக் கண்டு அலோஸியஸ் ஆச்சரியப்பட்டான்.

பள்ளிக் கூடத்திலும் சந்தையிலும் கோப்பிரேஷனிலும் ஏன் இந்த இரைச்சல் எப்போதுமேயிருக்கிறது. அப்படி என்னத்தைத்தான் பறைந்து தள்ளுகிறார்களோ!

அலோஸியஸ் தவறணைக்குள் நுழைந்த போது கட்டைப் பூபாலன் கள்ளோடு நின்று இழித்தான். அலோஸியஸ் சிரிக்காமல் முகத்தைக் கடுப்பாக்கினான். தவறணைக்கு அருகில் நின்ற நாவல் மரத்தின் கீழே நின்று ‘றிச்’மணியம் அலோசியஸைக் கூப்பிட்டான்.

‘இஞ்ச வா, அலோஸியஸ். ரண்டு வைச்சிருக்கிறன். வறுவலைக் கொண்யுடு வா”

சைக்கிளை வேலியோரமாகச் சாத்தி விட்டு, தூக்குப் பையைக் கழற்றி எடுத்தபடி மணியத்திடம் போனான் அலோஸியஸ். அந்தப் பையுக்குள் மாட்டு ஈரலில் வறுத்த வறுவல் இருந்தது.

‘றால் போட்டு சுறாப்பிடிக்கிறாய், என்ன? பாப்பம், எத்தினை நாளைக்கு உந்தக் கொண்டாட்டம் எல்லாம்” என்று மணியத்தைப் பார்த்து எரிந்தான் நாகம்.

அடேய், அலோஸியஸிட்ட உந்தப் புலுடாவெல்லாம் வாய்க்காது. எந்தப் பயறும் அவனிட்ட அவியாது” என்றான் மணியம் பதிலுக்கு. அலோஸியஸ் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையாகச் சிரித்தான். ஆனால், அவன் வாய் திறக்கவோ, பல்லுக் காட்டவோ இல்லை. இரண்டு பேரும் எப்படியோ தன்னை எதற்காகவோ மதிக்கிறார்கள் என்று பட்டது அவனுக்கு. அவன் சேர்ட் கொலரை பின்னுக்கு இழுத்து விட்டான். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, கண்களை மூடியவாறு நின்ற நிலையிலேயே ஒரு போத்தலை உள்ளே இறக்கினான்.

வாயைத் துடைத்தபடி தூக்குப் பையுக்குள்ளிருந்து, ஈரல் வறுவலையும் இறைச்சிக் கறியையும் எடுத்து வெளியே பூவரசமிலையில் பரப்பி வைத்தான் மணியம். நாகம் எழுந்து வந்து அருகில் குந்தி, வறுவலில் ஒரு துண்டை எடுத்துக் கடித்தான். அவனுடைய முககம் பன்றியின் முகத்தைப்போல சுருங்கி விரிந்தது.

‘தாயோளி உனக்கு வழியிற நாக்கு. ஆனால், கதை மட்டும் பெரிசு” என்ற சினந்தான் மணியம். வெளியே வெயில் அனலடித்துக் கண்ணைக் கூசியது.

நாகத்தை மணியத்துக்குப் பிடிக்காது. அவனுடைய சரித்திரத்தில் அரைப் போத்தல் கள்ளு யாருக்கும் வாங்கிக் கொடுக்காதவன். ஐம்பது சதம் செலவழிக்காதவன். பத்து ரூபாயைப் பொக்கற்றுக்குள் வைக்காதவன். ஆனால், தினமும் கோப்பிறேஷனுக்கு வந்து நான்கு ஐந்து போத்தல் கள்ளை வயிற்றுக்குள் இறக்குவான். இறக்கி விட்டு தள்ளம் பாடியபடி அங்கு மிங்குமாக அலைவான். இல்லையென்றால் ‘விகரை’ உள்ளே தள்ளுவான். இதற்குத் தோதாக பொரியலோ றாலோ கரம் சுண்டலோ தின்பான். யாரிடமும் கூசாமல் எதையும் கேட்பான். எவருடைய சேர்ட் பொக்கற்றிலும் சொல்லாமற் கொள்ளாமல் கை வைப்பான்.

ஆனால் ஒன்று, களவு கிடையாது. ஆக அது ஒன்றுதான் நாகத்தின் பிளஸ் பொயின்ற். பொய் தாராளம். பொய்யில்லாமல் அவனால் ஒரு நிமிசம் கூட வாழ முடியாது. நாகத்தின் வார்த்தையில் உண்மையை ஒருவன் கண்டு பிடித்தால் அவனுக்கு “நோபல் பரிசு“ குடுத்துப் பாராட்டலாம்.

நாகம் எதைப்பற்றியும் பொருட்படுத்தவில்லை. கூசாமல் வறுவலை எடுத்துத் தின்று கொண்டிருந்தான். அலோஸியஸ் நூறு ரூபாய்த் தாளை எடுத்து இரண்டு போத்தல் கள்ளு வாங்கி வரும்படி நாகத்திடம் கொடுத்தான். நாகம் குண்டி மண்ணைத் தட்டிவிட்டு, எழுந்து போனான். கள் வாடை எங்கும் வீசியது. மரம், செடி, கொடி, வெயில், நிழல் எல்லாத்திலும் அது மணத்தது.

கிப்பி இறைச்சியைப் பொரித்துக் கொண்டிருந்தான். கள்ளு வாய்க்கு இதமாகப் பொரிப்பதில் அவன் பக்கா ஆள். கள்ளின் மணத்தோடு பொரியல் மணமும் கலந்து மூக்கைப்பிடுங்கியது. நாக்கில் ஊறியது எச்சில். சுவை அறிந்த மனம் அலைக்கழிக்கும் மணம்.

‘மாடுகளின்ர விலை நல்லாக் குறைஞ்சிருக்காம். மல்லாவி, பாண்டியன் குளத்தில ஒரு மாடு ஆயிரத்தைநூறு, ரண்டாயிரத்துக்க அவிழ்க்கலாம் எண்டு நவரத்தினம் சொன்னான்” என்றான் மணியம்.

“மாட்டின்ர விலை குறைஞ்சும் இறைச்சி விலை ஏன் குறையேல்ல எண்டா கேக்கிறாய்” என்றான் அலோஸியஸ்.

“பின்ன, சரி அரைவாசிக்கும் குறைவாக மாடுகள் விலைப்படுகுது. பிறகேன் இறைச்சி விலை குறையேல்ல?” கொஞ்சம் ஆவேசமாய்க் கேட்டுக் கொண்டே கண்களை மூடிக் கள்ளை உறிஞ்சினான் மணியம்.

“உனக்கு நாட்டு நடப்புத் தெரியாதா? நாங்களா விலையைத் தீர்மானிக்க முடியும்? ஆமிக்காரர் வாறாங்களெண்ட பயத்தில சனங்கள் எல்லாத்தையும் அறாவிலைக்கு விக்குதுகள். இயக்கம் வாங்குது. எங்களுக்கு பதினைந்தாயிரம், பதினாறாயிரம் எண்டு பழைய விலைக்கே தாறாங்கள். நாங்கள் என்ன செய்ய ஏலும்?”

மணியம் தலையை மேலும் கீழுமாக ஆட்டினான். அவன் ஆழமாக யோசிப்பதைக் கண்கள் காட்டின. அதில் வன்மத்தின் ரேகைகள் படர்ந்திருந்தன. பற்களைக் கறுவினான். ஒரு காலமும் இந்தச் சிக்கல் தீராது. எந்த மன்னனாலும் இதைத் தீர்க்க முடியாது. எந்த விண்ணனாலும் இதை மாத்த முடியாது’ என்று பட்டது அவனுக்கு. நாகம் கள்ளோடு வந்தான். அவனைத் தொடர்ந்து திட்டிக் கொண்டு பின்னால் அருந்தவலிங்கமும் வந்தான். அருந்தவலிங்கம் நன்றாகக் கறுத்து வாடியிருந்தான்.

“என்ன கோலமடா, உது?” அருந்தவலிங்கத்தைப் பார்த்துக் கேட்டான் நாகம்.

“மச்சான், உன்னை மாதிரி ஆளில்லை நான். பார், இண்டைக்கும் எதுக்கும் தயாராகத்தானிருக்கிறன்” என்று நெஞ்சை நிமிர்த்திக் காட்டினான் அருந்தவலிங்கம். ஒடுங்கிய நெஞ்சு விரிய முடியாமல் திணறியது.

“போடா வக்கறுந்தவனே! இப்பவும் ஆற்றை தலையைக் குத்தினாயோ! ஆற்றை காலை நக்கினோயோ!” என்றான் நாகம்.

அலோஸியஸ் புருவங்களைச் சுருக்கி அருந்தவலிங்கத்தைப் பார்த்தான். அருந்தவலிங்கம் நெளிந்தான். ஆனால் அவனுடைய முகத்தில் வெறுப்பு ஏறியது நெருப்பாய். அலோஸியஸ் அதைப் பார்த்தான்.

“கதைக்கிறதை அளந்து கதை. ஆரோட கதைக்கிறன் எண்டதை யோசிச்சுக் கொள்” அருந்தவலிங்கம் எச்சரித்தான். ஆனால் உடைந்து இழுபட்ட குரலை அவனால் மறைக்க முடியவில்லை. அது தளர்ந்து இழுபட்டது.

“ஓகோ அப்பிடியோ சங்கதி? ரண்டு கிழமை புலிவேசம் போட்டவுடன குணம் மாறீட்டுது மச்சானுக்கு” என்றான் நாகம். நாகத்தின் கிண்டல் எப்போதும் சர்வதேசத்தரம் வாய்ந்தது. அவனிடம் வாயைக் கொடுத்தால் அவ்வளவுதான். எதிராளியைக் கந்தலாக்கி விடுவான். கதைக்குக் கதை. சொல்லுக்குச் சொல். கொழுவிக் கொழுவிக் கதைத்துக் கொண்டேயிருக்கும் பேர் வழி. அதனால் அவனோடு யாரும் இந்த மாதிரிக் கதைப்பதில்லை. என்ன கஸ்ர காலமோ தெரியாது, இப்ப அருந்தவலிங்கம் மாட்டியிருக்கிறான். அதுவும் நாகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு. விதி யாரைத்தான் பாவம், பரிதாபம் பார்த்து விட்டது?

“மச்சான் மரியாதையாக் கதை. அளவுக்கு மீறினால் பிறகு?.... நான், ஆரெண்டும் பாக்க மாட்டன்”

“என்ன புடுங்குவாய்? மசிர். இல்லக் கேக்கிறன், உன்னால என்னத்தையடா புடுங்க முடியும்?.....யாண்டி. நீ முந்தி இயக்கத்தில இருக்கேக்க எத்தின பேருக்கு தகடு குடுத்தனி எண்டு தெரியாதே? உன்னால எத்தின பேர் துண்டு குடுத்துப் போட்டு வெளியில வந்தாங்கள் தெரியுமே! போதாக் குறைக்கு எல்லாரையும் கலைச்சுப் போட்டு நீயும் விலகினாய். இப்ப பேந்தும் சேந்து கொண்டு எங்களுக்கென்ன வாலாட்டுகிறாயா?” நாகம் கெம்பினான்.

அலோஸியஸ்க்கும் மணியத்துக்கும் இருப்புக் கொள்ளவில்லை. மணியம் எதுவோ சொல்ல வாயெடுத்தபோது அலோஸியஸ் அதைத்தடுத்தான். மணியம் குடிப்பானில் பாதிக்கு கள்ளை நிரப்பிக் கொடுத்தான் அலோஸியஸிடம். பொரித்த இறைச்சியை விரித்து நாகத்திடம் நீட்டினான். நாகம், நாகம் என்று பெயர் வைத்திருக்கிறானே தவிர, அவனிடம் பாம்புக் குணமெல்லாம் கிடையாது. ஆனால், அருந்தவலிங்கம் பாம்பு. விசப்பாம்பு. தருணம் பார்த்துக் கொத்துவான்.

அருந்தவலிங்கத்தின் முகம் கறுத்து வெளிறியது.

“அண்ணை, உதென்ன பேய்க்கதை. ஊரில உலகத்தில இல்லாத காரியத்தையா நான் செய்தன். இயக்கத்தில தகடு வைக்கிது எண்டதென்ன புதுசா? நான் எனக்குச் சரியெண்டதைச் செய்தன். அதைக் கேக்கிறதுக்கு இயக்கம் இருக்கு. தலைமை இருக்குது. இவர் ஆர் அதையெல்லாம் கேக்கிறதுக்கு. மண்ணாங்கட்டி” கெஞ்சுவதைப்போலவும் கோபிப்பது போலவுமான தொனியில் மணியத்தைப் பார்த்துச் சொன்னான் அருந்தவலிங்கம். மணியமோ அலோஸியஸோ எதுவும் பேசவில்லை. அலோஸியஸ் மேலும் கீழுமாகத் தலையை ஆட்டினான்.

“அருந்தவலிங்கம் கதை விடாதை. உன்னைப்பற்றி எங்களுக்குத் தெரியும். நீ என்னவெல்லாம் செய்தனி எண்டும் எங்களுக்குத் தெரியும். இப்ப எல்லாருந்தான் இயக்கம். எங்களுக்கு நீ வாலாட்டேலாது. நாங்களும் பயிற்சி எடுத்திருக்கிறம். நானும் லைனில நிண்டவன்தான். அதைவிட நீ என்ன கூடுதலாக் கிழிச்சனி?” நாகம் மீண்டும் அருநந்தவலிங்கத்தை வம்புக்கிழுத்தான். அப்போது ஏதோ என்னவோ என்று எல்லோரும் அமளிப்பட்டார்கள். இரைச்சல். உயர மேலே குண்டு வீச்சு விமானங்கள். ஆனால் தலையைக் கடந்து போய்விட்டன. என்றாலும் வட்டமிட்டன.

அடுத்த ரவுண்ட் வருவதற்குள் எல்லோரும் எங்கேயோ பாய்ந்தோடினார்கள். உயிர் அல்லவா. அதைக் காப்பாற்றியாகவேண்டும். அந்தப் போதையிலும் உயிராசை பெரிதாகவே இருந்தது. அலோஸியஸ் மணியத்தை இழுத்துக் கொண்டு பக்கத்திலிருக்கிற பங்கருக்குள் பாய்ந்தான். அருந்தவலிங்கம் கள்ளுப் போத்தலோடு வயல் வெளிக்குள்ளால் ஓடிக் கொண்டிருந்தான். நாகம் எங்கே? கதிரவேலு சைக்கிளுக்கடியில் தடக்குப்பட்டு விழுந்து கிடந்தார். எழும்பாமல் அப்படியே குப்புறப் படுத்திருந்தார். அதுதான் அவருடைய பாதுகாப்பு ஏற்பாடு.

விமானங்கள் உறுமி, ஊழையிட்டு, குத்துக் கரணமடித்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. அடிவயிறு கலங்கியது மணியத்துக்கு. வயிற்றில் கத்தி பாய்ந்ததைப் போலிருந்தது அலோஸியஸ்க்கு. இன்னும் குண்டுகள் போடப்படவில்லை. அதுவரையில் குலை நடுக்கம்தான். போட்டு விட்டால் போய்விடுவார்கள்.

எங்கோ குண்டுகளை வீசிவிட்டு அவை போனபிறகு, மீண்டும் கோப்பிரேஷன் களை கட்டியது. தட்டுப்பட்டு ஊத்துப்பட்ட கள்ளுக் கோப்பையைத் தூக்கிக் கொண்டு நாகம் வெளியே போனான். அருந்தவலிங்கத்தைக் காணவில்லை. யாருடையதோ பொரியலை நாய்கள் தின்று கொண்டிருந்தன. அதை யாரோ கலைத்தார்கள். வசை வேறு.

“பெரிய மசிர். வந்திட்டார் கதைக்க“ என்று கறுவிக் கொண்டு வந்த நாகத்திடம் “உனக்கேன் வீண் வம்பு? எக்கணம் அவன் உன்னைப் பழி வாங்க நினைச்சால் என்ன செய்வாய்?” என்று கேட்டான் அலோஸியஸ்.

“மசிரைத்தான் புடுங்குவான் அவன். எனக்குத் தெரியாத அருந்தவலிங்கமா? இல்ல எனக்குத் தெரியாத இயக்கமா?”

“அதில்ல நாகம். அவன் ஒரு நச்சுப் பாம்பு’’

“ஆனால் அது இப்ப பல்லில்லாத பாம்பு” இப்படிச் சொன்னாலும் நாகத்துக்கு அலோஸியஸ் சொன்னதையிட்டு உள்ளுர ஒரு பயம் ஓடிப்பரவியது.

அருந்தவலிங்கம் பழைய ஆள். இயக்கத்தை விட்டு விலகினாலும் இயக்கக் குணம் போகாதவன். அவனுக்கு நிறையப் பேரை இயக்கத்தில் தெரியும். செல்வாக்குண்டு. அதைவிட, இப்ப மறுபடியும் இயக்கத்தில் ஆட்பற்றாக்குறை என்று சேர்ந்திருக்கிறான் என்றும் சொல்கிறார்கள். ஆனால் கள்ளுக்கும் பகிரங்கமாக வாறான். லைனுக்கும் போறான்.

‘இதென்ன கோதாரியில போற வேலையாக்கிடக்கு. சனியன் வந்து தோளில ஏறிக் கூத்தாடுது’ என்று நினைத்தான் நாகம்.‘பயந்தால் சாகத்தான் முடியும். வாழமுடியுமா’ என்று உள்மனம் தூண்டியது. வருவது வரட்டும். தனக்கும் துவக்கைத் தூக்க முடியும். யாரிக்கு நிற்க முடியும் என்று எண்ணிக் கொண்டான். என்ன தலையா போகப் போகிறது?

2

நாகம் ஆறு மாதமாக பங்கர் வெட்டப் போகிறான். லைனுக்கு என்று கொண்டு போய், ஆமிக்கு முன்னால் நிற்பாட்டப் படுகிறான். ‘விருப்பமில்லை. தனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாலும் அவர்கள் அவனை விடுவதாயில்லை. பிடித்து ஏற்றிக் கொண்டு போனார்கள். குடும்பகாரன். தன்னை நம்பி நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். கூலிக்காரன். வேறு வருமானமில்லை. தனக்கு ஒன்று நடந்து விட்டால் அதுகள் தனிச்சுப் போய்விடுங்கள்’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவர்கள் அதையெல்லாம் கேட்கவேயில்லை. தனக்கிருக்கும் முட்டு வருத்தத்தைக் கூடச் சொன்னான்.

“களத்தில் மருந்து தருவதற்கு ஆட்கள் இருக்கு“ என்றார்கள்.

‘அது காயப்பட்ட ஆட்களுக்கு’ என்றான் நாகம். அவர்கள் மசியவில்லை.மசிவதாகவுமில்லை.

கிளினிக் கொப்பியையும் குளிசைகளையும் காட்டினான். மனிசிக்காரி அழுதுகுழறினாள்.

ஆனால் அவன் லைனுக்குப் போகவேண்டியே வந்தது. அவர்கள் அவனைத் தள்ளிக் கொண்டு போனார்கள்.

இப்போது அவன் போராளியா அல்லது இயக்க ஆளா என்று அவனுக்கே புரியவில்லை.

இயக்கக்காரர்கள் பார்க்கிற அலுவல்களைத்தான் அவனும் பார்க்கிறான். ஆனால், போர் உதவிப் படை வீரர், எல்லைலப்படை வீரர் என்று என்னவோ எல்லாம் சொல்கிறார்கள். அவன் போருக்கு ஒருபோதுமே உதவவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி அவனைப் போர் உதவிப்படை வீரர் என்று சொல்லமுடியும்? அதைப்போலவே எல்லைப்படை வீரர் என்றும் சொல்ல முடியாது. இப்போது படைகள் அவனுடைய ஊருக்கு அருகில் நிற்கின்றன. ஏறக்குறைய தமிழ்ச் சனங்களின் இடங்களில் பாதிக்கும் மேல் படைகளிடம் வீழ்ந்து விட்டன.இதில் எல்லை எங்கே?

சரி, என்னவே தங்கள் வசதிக்குத் தக்கமாதிரி எதையோ சொல்லித் தொலைக்கிறார்கள். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்? அல்லது இதெல்லாம் யாருக்குத்தான் வேணும்? போகட்டும் என்று விட்டான்.

இதில் என்ன வேடிக்கை என்றால், தள்ளிக் கொண்டு போய் விடப்படுகிறவவர்கள் போர்க்களத்தில் செத்துப்போன பின்னர்தான் எல்லைப்படையா போர் உதவிப்படையா அல்லது வேறு ஏதாவது படையா என்று தெரியவரும். அதுவரையில் எந்தப் படையில் இருக்கிறோம் என்று தெரியவராது. தெரிய வந்துதான் என்ன, வராது விட்டாற்தான் என்ன? அவனுக்கு ஒரு லாபமும் கிடையாது. அவன் விரும்பியா இதற்கெல்லாம் வந்தான்.

கடவுளே! ஆமிக்கு முன்னால் கொண்டு வந்து நிற்பாட்டியிருக்கிறார்களே.

இப்படியொரு நிலைமை தனக்கு வரும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. யமனுக்கு முன்னால் உயிர்ப்பிச்சை கேட்பது போலிருந்தது. தொடை நடுங்கியது. உடல் பதறியது. கைகள் உதறின. கைகளில் வைத்திருந்த துப்பாக்கி உதறியது. “வீரனுக்கு இதெல்லாம் அழகில்லை என்று யாரோ சொல்லிக் கேட்டது. அது யாருமல்ல. அவனுடைய உள்மனம்தான். தான் வீராகி விட்டேனா! அப்படியென்றால் எப்போதிருந்து? தமிழ்க்குடியில் பிறந்தவன் வீரனாகாமல் வேறெப்படி இருக்க முடியும்? இல்லையென்றால் அவனுக்குக் கோவணம் எதற்கு?

ஆனால் அவன் இந்த ஆறு மாதங்களில் ஒரு ஆமியைக் கூடச் சுட்டதில்லை. கொலைப் பழியோ பாவமோ அவனை அண்டியதில்லை. ஆனால் இரண்டு தடவைகள் காயப்பட்டான். ஒரு தடவை மேற் தொடையில், விதைக்கு அருகில் சன்னம் சிராயத்துக் கொண்டு போனது. உண்மையில் மயிரிழையில் உயிர் தப்பினான். அல்லது விதை தப்பியது. விதை தப்பியதால் அவனுடைய வம்சம் தப்பியது. எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் உயிராபத்துகளுக்கு நடுவே தேசப்பணியைச் செய்து கொண்டு வரும் நாகத்தோடு அருந்தவலிங்கம் கதைத்த கதை அவ்வளவு நல்லதில்லை என்று பட்டது அலோஸியஸ்க்கு. நாகத்தை நினைக்கும்போது அவனுக்கு அழுகை வந்தது. பாவம். சரியான பயந்தாங்கொள்ளி.

வாழ்க்கையில் அவன் ஒரு ஆமியைக் கூடக் கொல்ல மாட்டான் என்று அலோஸியஸ்க்குத் தெரியும். இந்தப் பிறவியிலேயே அது நடக்காது. அதற்காக அவன் பிறந்ததுமில்லை. ஆனால், அவன் ஆமியைபச் சுடத்தான் வேண்டும் அடாத்துப் பண்ணுகிறார்கள். என்ன நடக்குமேமா தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை.

நாகத்தை ஒரு நாள் ஆமிக்காரர்கள் போட்டுத்தள்ளுவார்கள். நான்கு நாட்கள் கழித்து, சந்தையில் அலோஸியஸிடம் அருந்தவலிங்கம் வந்தான். அப்போது கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அலோஸியஸ் வியர்த்துக் களைத்தபடி மேசையில் இறைச்சியும் தராசும் கையில் பையும் காசுமாக பரபரத்துக் கொண்டிருந்தான். அதற்குள் அருந்தவலிங்கம் தன்னை ஒருவாறு, நுழைத்துக் கொண்டு எட்டிக் கையையும் காசையும் நீட்டினான்.

“கொஞ்சம் பொறு” என்று கையைக் காட்டிக் கண்ணைச் சிமிட்டிச் சொன்னான் அலோஸியஸ். அருந்தவலிங்கம் நெரிசலில் இருந்து வெளியேறினான். தேருக்கு நிற்பதைப்போல அலைமோதியது கூட்டம். அதற்குள் இரண்டுபேர் வந்து. ஒரு பைலை (கோவையை) விரித்தார்கள்.

“அண்ணை நீங்கள் இண்டைக்குப் பணிக்குப் போகோணும்” என்றான் ஒருத்தன்.

“தம்பி, கடையில ஆளில்லை. நான் மட்டும்தான் நிற்கிறன். பாருங்கோ எவ்வளவு சனம் நிற்குதுகள் எண்டு. இறைச்சியும் கிடக்கு. இந்த நிலைமையில இதுகளை எல்லாம் விட்டுப் போட்டு எப்பிடி நான் வாறது? சொல்லுங்கோ” என்று சற்று அழுத்தமாகவும் பவ்வியமாகவும் கேட்டான் அலோஸியஸ்.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இப்ப நீங்கள் வரோணும். துருப்புக்காவி வெளிக்கிடப்போகுது” என்றான் மற்றவன். குரலில் இறுக்கமும் கடுமையும் தொனித்தது.

சனங்கள் அமைதியாக நின்றார்கள். ஆனால் உள்ளுரப் பரபரத்தார்கள். கடையைப் பாதியில் மூடிவிட்டால் இறைச்சியை வாங்க முடியாது. மீன் விலையோ உச்சத்தில். மேற்குக் கடல் படைகளிடம் வீழ்ந்த பிறகு அந்தக் கடலில் மீன் பிடி இல்லை. கிழக்குக் கடலில் இப்போது சீசன் இல்லை. கொந்தளிப்பு வேறு. அதற்குள் பிடிக்கும் மீன்கள் மட்டும்தான் சந்தைக்கு வருகின்றன. அது இப்படி லட்சமாகத் திரண்டிருக்கும் சனங்களுக்குப் போதுமா?

“தம்பி, வெட்டின இறைச்சியை என்ன செய்யிறது?”

“ஏன் உங்களுக்குத் தெரியாதா, இண்டைக்குப் பணிக்குப் போறதெண்டு? அதுக்கு நாங்கள் பொறுப்பில்லை” அவனுடைய குரல் மேலும் இறுகியது.

“தம்பி கொஞ்சமாவது நீதியா நடக்கோணும். மனச்சாட்சிக்குக் கணக்குக் குடுக்கோணும். நான் ஆரையெண்டாலும் ஒராளை ஒழுங்கு செய்யிறன். ஆனா, இண்டைக்கு ஏலாது” அலோஸியஸின் குரலிலும் இறுக்கம்.

“அண்ணை, உங்கட கதைகளக் கேக்கிறதுக்காக இங்க வரயில்லை, நாங்கள். இப்ப அரை மணித்தியாலத்தில வரோணும். இல்லையெண்டால் ஆறாயிரம் ரூபாய் கட்டவேணும்” என்று உத்தரவிட்டான் அவர்களில் ஒருவன்.

‘அந்தோனியாரே, ஆறாயிரம் ரூபாய்க்கு இப்ப நான் எங்கே போவேன். கடை வாடகை, தினவரி எல்லாம் குடுத்து வருகிற மிச்சத்தில் வீட்டைச் சமாளிக்கவே பெரும்பாடாக இருக்கும் போது, ஆறாயிரம் ரூபாவுக்கு நான் என்ன செய்வேன்?’

“காசில்லை எண்டால் நீங்கள் வாங்கோ”

“நான் வாறதுக்கு வசதியில்லை எண்டுதானே சொல்லுறன்.”

“அப்ப காசைத் தாங்கோ”

“அதுக்கு நீங்கள் விட்டாத்தானே. வருவாய்த்துறை எண்டு தினவரி வாங்கிறியள். நில வாடகை கேக்கிறியள். வர்த்தக சங்கமெண்டு தனியாக் காசு கட்டச் சொல்லுறியள். பிறகு, இறைச்சிக் கடைச் சங்கம் எண்டு அதுக்குத் தனியாக சந்தப்பணம், சந்தாப் பணம், பங்களிப்பு எண்டெல்லாம் கநற்து கொண்டிருக்கிறியள். பிறகு இப்ப ஆறாயிரம் கட்டோணம் எண்டால் நான் எங்க போறது?”

“அண்ணை, உங்களோட கதைச்சுக் கொண்டிருக்கிறதுக்கு நாங்கள் வரேல்ல. இப்ப காசைக் கட்டுங்கோ. இல்லையெண்டால் கடையைப் பூட்டுங்கோ”

“அப்ப வெட்டின இறைச்சியெல்லாத்தையும் என்ன, நாற விடுறதே?”

“அது உங்களைப் பொறுத்தது”

“இதென்ன ஞாயமடா, அந்தோனியாரே! கலி முத்தித்தான் போச்சு. அக்கிரமம் கூடிட்டுது.

“அண்ணை, கதை வேண்டாம். கடையைப் பூட்டச் சொன்னால் பிறகென்ன, தேவையில்லாக் கதையெல்லாம். அவர்கள் மிரட்டிக் கதவைச் சாத்தினார்கள். சனங்கள் இடிபட்டு வழி வழிவிட்டார்கள். யாரோ என்னவோ சொன்னார்கள். சனங்களின் அமுங்கலான கசமுசாச் சத்தங்களையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

எல்லோரும் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். இறைச்சியில் மொய்க்கும் இலையான்களுக்கு எந்தக் கவலையுமில்லை.நான்கைந்து நாய்கள் தங்கள் சோலியோடு நின்றன.

அலோஸியஸ்க்கு இரத்தம் கொதித்தது. நாடி துடித்தது. அப்படியே அவர்களுடைய மூஞ்சையைப் பொத்தி நாலு குத்தினால் என்ன என்று யோசித்தான். கைகள் துருதுருத்தன.

குத்தினால், கொண்டுபோய், இருட்டறையில் அடைப்பார்கள். பச்சை மிளகாய் தின்னக் கொடுப்பார்கள். கட்டாயப்படுத்தி முன்னரங்கில் கொண்டு போய் விடுவார்கள்.முந்தியெண்டால் வட்டுவாகல், சீர்திருத்தப்பள்ளி என்று கொண்டு போவார்கள். இப்ப சண்டைக்கு ஆள் வேணும் என்ற படியால் அங்கேதான் கொண்டு போவார்கள்.

இதெல்லாவற்றைப் பற்றியும் கவலைப்படாமல், குத்தலாம். இறைச்சி வெட்டும் கத்தியால் ஒரு போடு போடலாம்.

ஆனால்,வீட்டில் மனுஷி, பிள்ளைகளின் நிலை? ஏற்கனவே அவள் தன்னுடைய தம்பியைக் கொடுத்து நொந்து போயிருக்கிறாள். அவனை அவர்கள் கொண்டு போய் சரியாக அறுபத்தி மூன்றாம் நாள் அவனுடைய மூடிய சவப்பெட்டியைக் கொண்டு வந்தார்கள். அதைவிட மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை மடத்தனமாக பணயம் வைக்க முடியாது. ஆனால், அதற்காக இப்படி அடிமைச்சீவியம் நடத்தவும் முடியாது.

ஒரு கணம் கனத்த மௌனம். அதற்குள் நூறாயிரம் கோடுகளை எல்லாத் திசைகளிலும் வரைந்தது மனம். சனங்கள் இறைச்சிக்காக அந்தரப்பட்டார்கள். வெட்டித் தொங்கும் இறைச்சியை ஏதாவது ஒரு வழி பண்ணத்தானே வேணும் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். அதற்குள் தங்கள் காரியத்தைப் பார்த்துவிடத் துடித்தார்கள் அவர்கள்.

அலோஸியஸ் ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்தான். வியாபாரத்தைச் செய்தான். கத்தி கையிலிருந்தது. நெஞ்சை நிமிர்தியபடி, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, இறைச்சியை மளமளவென்று வெட்டிப் போட்டான். அவர்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள். சனங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அலோஸியஸ்க்கு சனங்களைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.

“நாளைக்கு கடையைத் திறக்கலாமெண்டு நினைச்சுப் போடாதேங்கோ” அவர்கள் இருவரும் சொல்லிவிட்டுப் போனார்கள். இரு உன்னை ஒரு கை பார்க்கிறோம் என்பதைப் போல அவர்களுடைய பார்வை இருந்தது. கண்களில் குரோதம் வழிந்தது.

“மசிருகள், ஆரைக் கொண்டுபொய்க் கொல்லலாம் எண்டு ஆலாய்ப்பறக்கிறாங்கள்” என்றார் இறைச்சி வாங்குவதற்காக நின்ற ஒரு முதியவர் சற்றுச் சத்தமாக.

“கடவுளே, இந்தக் கொடுமை எப்பதான் தீரப்போகுதோ” என்று பெருமூச்சு விட்டாள் ஒரு கிழவி. “நாசமமாய்ப்போவார், அழிவார், கொள்ளையில போவர்” அவள் திட்டிக் கொண்டேயிருந்தாள்.

யார் பக்கத்தில் நிற்கிறார்களோ என்ற பயம் சிலருக்கு. அவர்கள் இதையெல்லாம் கேட்டால் கதை கந்தல்தான்.

“நாங்கள் பயந்து பயந்துதான் இந்த நிலைமை வந்திருக்கு” என்றார் வெள்ளைளச் சேர்ட் போட்டிருந்தவர்.

“பச்சை மிளகாய் தின்ன விருப்பமோ” என்றொரு குரல் பின்னாலிருந்து ஒலித்தது. தலைகள் குரல் வந்தி திசையில் திரும்பின. பிறகு கனத்த அமைதி.

அலோஸியஸிற்குள் நூறு புகையிரதங்கள் தாறுமாறாக ஓடின. ‘எல்லாற்றை முதகெலும்பையும் உருவி எடுத்துப் போட்டாங்கள்’ என்று எண்ணினான்.

‘மனிசரைக் கொன்று வெறும் சடலங்களாக்கி விட்டார்கள். இப்ப தாங்கள் நினைக்கிறதையும் சொல்கிறதையும் செய்கிற வெறும் மிசின்களாக்கி விட்டாங்கள். மசிர்ப் போராட்டம். இதைவிடச் சாகலாம்’என்று தோன்றியது அவனுக்கு.

இறைச்சியை வெட்டிப் போட்டு நிறுத்துக் கொண்டேயிருந்தான். சனங்கள் முண்டியடித்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

எல்லாம் முடிந்து கடையைப் பூட்டி வெளிக்கிட்டபோது சூரியன் உச்சியில் நின்று சிரித்தது. நாக்கு வரண்டது. காலையில் அவர்கள் வந்து கதைத்த கதைகள் அவனுக்கு கேந்தியைக் கிளப்பியிருந்தன. அது வேறு தாகம். கோபம் வரும்போது தாகம் வருகிறது. சைக்கிளை கோப்பிரேசனுக்கு விட்டான். இரண்டு போத்தல்களை உள்ளே விட்டால்தான் நெஞ்சுக் கொதி ஆறும்.

பிள்ளையார் கோயிலடி முடக்கால் திரும்பியபோது யாரோ கத்திக் கேட்டது. அவலக்குரல். ஐந்தாறு பெண் குரல்கள். கிட்ட நெருங்கியபோது, வசையும் திட்டும் கேட்டன.

அவனை இடித்துத் தள்ளிக் கொண்டு ஒருவன் ஓடினான். நான்கைந்து பேர் விட்டுக் கலைத்தார்கள். ஓடியவவன் ஆறு பட்டு முட்கம்பி வேலியை உன்னிப் பாய்ந்து கடந்தான். கலைத்தவர்கள் திகைத்துத் தடுமாறி நின்றார்கள். யாருக்கும் அந்தக் கம்பிகளைப் பாயத் துணிவிருக்கவில்லை. எல்லாம் ஒரு கணம். பிறகு திரும்பி, அந்தக் காணிக்கு எங்கே வாசல் என்று தேடினார்கள். அதற்குள் அவன் எங்கோ ஓடி மறைந்தான்.

“எல்லாரையும் துலைச்சுப் போட்டு என்னடா செய்யப் போறியள்?” என்று ஒரு பெண் மண்ணை அள்ளி எறிந்து திட்டினாள். அலோஸியஸ் ஒரு கணம் அங்கே தாமதித்தான். துரத்திக் கொண்டு போன ஆட்பிடிகாரர், ஆவேசமாய் அங்கு மிங்கும் வேட்டை நாயைப் போல அலைந்து கொண்டிருந்தார்கள். வளவுக்குள் போவதும் வருவதுமாய் ஒரே அமளி.

ஒரு ஐந்து நிமிசமிருக்கும். மறுபடியும் கூக்குரல். வசைகள். “அடேய், அவரை விடுங்கோடா, விடுங்கோடா. ஏனிப்படி அநியாயம் செய்யிறியள்? நாங்கள் ஆரெண்டு எங்களை இப்பிடிப் போட்டு வதைக்கிறியள்? ஐயோ, கடவுளே! இதையெல்லாம் கேக்கிறதுக்கு ஆட்களில்லையா? அந்தாள் வருத்தக்காரன். வீட்டு வேலையைக் கூட செய்ய மாட்டாமல் இருக்கிற பிறவி. அதுவும் உங்களாலதானே இந்தியன் ஆமியிட்ட அடிவாங்கினவர். ஏலாத சீவன். அவரைக் கொண்டு பொய் என்னடா பலியா குடுக்கப் போறியள்..?

அதே பெண் புலம்பிக் கத்தினாள். சின்னப் பிள்ளைகள் ஐயோ என்று கதறினார்கள்.

ஆனால் பிடிகாரர் எதையும் பொருட்படுத்தவில்லை. அந்த வீட்டிலிருந்து ஒரு மெல்லிய உருவத்தை வெளியே இழுத்துக் கொண்டு போனார்கள். அந்த உருவம் மாட்டேன் மாட்டேன் என்பதாக தயங்கித் தயங்கிப் போனது. அதை அவர்கள் தள்ளிக் கொண்டும் இழுத்துக் கொண்டும் போனார்கள். அது அந்தப் பெண்ணின் கணவனாகத்தானிருக்க வேண்டும். ஓடியவன் அவர்களுடைய மகனாகவோ அல்லது உறவினனாகவோ இருக்கலாம்.

அந்தப் பெண் விடவில்லை. அவள் கடுமையான ஆக்ரோஷத்தோடு எதிர்த்தாள். அவர்களுக்கு மண்ணள்ளி எறிந்தாள். கணவனைப் பிடித்து இழுத்தாள்.பிடிகாரரில் இருந்த பெண்கள் அவளைப் பிடித்துத் தள்ளிக் கீழே தள்ளினார்கள். அவள் நிலை தடுமாறினாள். ஆனால் அவள் விடவில்லை. சட்டெனச் சுதாகரித்துக் கொண்டு, எழுந்து பாய்ந்தாள். பாய்ந்து ஆட்பிடிக்கும் பெண்களில் ஒருத்தியின் கூந்தலைப் பிடித்து இழுத்தாள். அப்போது அதைப் பார்த்த மற்றப் பிடிகாரப் பெண், அவளைக் கீழே தள்ளி விழுத்திக் கன்னத்தில் ஓங்கியறைந்தாள். அவள் அந்தப் பெண்ணின் முகத்தில் காறித்துப்பினாள். அவர்கள் அவளை மீண்டும் அறைந்தார்கள். இதற்குள் ஏகப்பட்ட வசைகள். அவள் மறுபடியும் துப்பினாள். துப்பிக் கொண்டும் ஏசிக் கொண்டுமிருந்தவளைப் பார்க்க அலோஸியஸ்க்கு பரிதாபமாக இருந்தது.

அந்த வீட்டிலிருந்து ஓடியதற்குப் பதிலாக வீட்டுக்காரரைக் கொண்டு போகிறார்கள் என்று அலோஸியஸ்க்கு விளங்கியது. தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது. கால்கள் ஆத்திரத்தில் நடுங்கின. “தாயோளியள்” என்று பல்லை நறுமினான்.

“வாங்கோடா, எடேய், என்ரை பிள்ளையைக் கொண்டு போனியள். என்ர தம்பியையும் கொண்டு போனியள். இப்ப என்ர புருசனையும் கொண்டு போறியளா? தினக் கூலிக்குப் போய்ப் பிழைக்கிற நாங்கள் இனி என்ன செய்வம்? ஐயோ, கடவுளே!” என்று அவள் புலம்பி, ஓலமிட்டாள்.

அவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதைப்போல அப்பனான பேச்சுகள், திட்டுகள், வசைகளை எல்லாம் கேட்டவர்கள் தாங்கள் என்பதைப்போல அவளுடைய கதறலைப் புறக்கணித்து விட்டு, சிரித்துப் பம்பலடித்துக் கொண்டு போனார்கள். கூடவே, அந்த வீட்டுக்காரரைத் தள்ளிக் கொண்டு போனார்கள். அந்த மனிதன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கி நடந்தான். கால்கள் இடறின. மத்தியான வெயில் கொழுத்திக் கொண்டிருந்தது. இரண்டு “பிக்கப்“ வாகனங்கள் புழுதி கிளப்பிக் கொண்டு பறந்தன.

“அடேய், வாங்கோடா, உழைக்கிற புருசனைக் கொண்டு போறியள்... நானினி என்ன செய்வன்? மனச்சாட்சியிருக்கோடா உங்களுக்கு...” என்று அவள் காறித்துப்பினாள். காற்றில் ஏறி அப்பால் விழுந்தது அந்த எச்சில். காற்றிலேயே பற்ந்து அலைந்தது அவளுடைய கதறல்.

3

இதெல்லாம் நடந்து ஆறாவது நாள். அலோஸியஸ் வன்னேரிக்குளத்தில் பண்டிவெட்டிக்கு அருகில், முன்னரங்கில் நிறுத்தப்பட்டிருந்தான். அவனுக்குத் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. அவனைப் போர் உதவிப்படை வீரர் என்றார்கள். இதையெல்லாம் நினைக்கும்போது அவனுக்கு ஒரு கணம் சிரிப்பு வந்தது. அவன் போரையே விரும்பாதபோதும் போர்க்களத்தில் நிற்கிறான். போர் வீரன் என்று பேர் வேறு சூட்டப் பட்டிருக்கிறது. இதெல்லாம் அருவருப்பைத் தந்தன.

அவன் தலையைப் பிய்த்துக் கொண்டான். இதையெல்லாம் நினைத்தால் ஹா..ஹா என்று சிரிக்க வேண்டும். அல்லது “ஹோ“வென்று வானம் கிழிய அழ வேணும். அவன் துவக்கைத் தூக்கி மரங்களுக்கு மேலே வானத்தை நோக்கி வைத்தான் வெடி. படபடவெனப் பொழிந்தன ரவைகள். இலைகள் சிதறின. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம் கலவரப்பட்டார்கள்.

“ஆமி வந்திட்டுதா? ஆழ ஊடுருவும் படையணி வந்திட்டுதா? என்ற கலக்கம். படபடவென்று ஆறெழு துவக்குகள் வெடித்தன. ஒரு பத்து நிமிசம் அமோக வெடி.

என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது. அலோஸியஸையும் கடவுளையும் தவிர. அதிலும் அலோஸியஸ்க்கே பிறகு இப்படியெல்லாம் கூத்து நடக்கும் என்று தெரியாது.

ஆனால், சனியன் தொலையுமா? அது கடவுளைப் பிடித்ததோ இல்லையோ அலோஸியஸை வளமாகப் பிடித்துக் கொண்டது.

அவர்கள் ஒருவாறு அலோசியஸின் துவக்குத்தான் முதலில் வெடியை வைத்தது என்று கண்டு பிடித்து விட்டார்கள். “என்ன நடந்தது.? ஏன் சுட்டாய்? அதவும் இந்தப் பட்டப்பகலில்? சுடுவதற்கு யார் அனுமதித்தது? பகிடியா விடுகிறாய்? என்று ஏராளம் கேள்விகள்.

இப்படியெல்லாம் கேள்விகள் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சுட்டதைப் பற்றி அவன் தனியாக அறிக்கை கொடுக்க வேணும் என்றார்கள். இப்படிக் கண்டபடி சுட்டு எல்லோரையும் கலவரப்படுத்தியதற்குத் தண்டனை என்றார்கள். இதையெல்லாம் அவன் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், ஒன்று, அவன் ஏற்கனவே தண்டனையாகத்தானே இந்தப் படுகளத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறான்.

வீட்டில் பிள்ளைகள் எப்படியோ! சமைத்தார்களா? சாப்பிட்டார்களா? மாடுகளுக்கு வைக்கோல் போட்டார்களா? கடையில் நடேசன் என்ன செய்கிறானோ. இதுகளைப் பற்றியெல்லாம் ஒரு அறிக்கையைப் புலிகளிடமிருந்து தான் கேட்டால் என்ன?

‘முறைப்படி பயிற்சி எடுத்தேனா? விரும்பி இங்கே வந்தேனா? துவக்கைத் தூக்கி கூத்தாட ஆசைப்பட்டேனா? ஒன்றுமில்லையே!

எந்தச் சம்மதமுமில்லாமல் வேண்டு மென்றே எல்லாவற்றையும் அவர்களாகவே செய்து விட்டு எப்படித் தண்டனையைத் தருகிறார்கள்? இதில் அவர்கள் குற்றவாளிகளே இல்லை. ஒருபோதும் அவர்கள் குற்றவாளிகள் இல்லை. எப்போதும் தண்டனையையே மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு தரப்பு தான் குற்றவாளி என்பதை ஏற்றுக் கொள்ளப்போவதேயில்லை. எப்படியெல்லாம் மிரட்டுகிறார்கள்? எப்டியெல்லாம் பழிவாங்குகிறார்கள். என்ன கொடுமை? என்னவதை? அந்தோனியாரே..!’

அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. எதற்காக தனக்கு இந்தமாதிரித் தண்டனையெல்லாம்? கையை ஓங்கி மண்ணில் குத்தினான். என்ன நோயோ,வியாதியோ தெரியேல்லை. இப்பிடிப் பித்துப் பிடித்தலைகிறார்களே! வெறி. தீராத வெறி. முடிவுப்புள்ளிகள் இல்லாத வெறி.

முந்தி இந்த மாதிரி இருக்கவில்லையே!

இப்ப தேவை எவருடையவதாவது ஒரு தலை. அது மட்டும்தான். அதை விட்டால் வேறு என்னதான் வேண்டும். வெற்றி தோல்வியைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. விளைவுகளைப்பற்றிய அக்கறைகளில்லை. நின்றால் பால். செத்தால் இறைச்சி. வழித்தேங்காய். தெருப்பிள்ளையார். அடியடா, அடி.

ஒவ்வொரு தலையாக உருட்டுகிறார்கள். இந்தத் தினவு அடங்காது. கடவுளே..! அவனுக்குத் தெரியும். அவனுடைய பீற்றர்ச் சித்தப்பா சூதாடினார். கடைசி வரை ஆடினார். எப்போதாவது ஒருபோது வரும் வெற்றிக்காக ஆடினார். அதற்காக அவர் எத்தனை தோல்விகளையும் பொருட்படுத்தவில்லை. என்றாவது வரும் வெற்றி என்று நம்பினார். அதற்காக அவர் தோற்றுக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. சித்தியின் காசு போனது. நகைகள் போனது. காணியிலிருந்த பொருட்கள் போனசு. அயலில் கடன் வாங்கினார். ஒரு நாள் வெல்வேன். எல்லாக் கணக்கையும் தீர்ப்பேன் என்று நம்பினார். அவருடைய மனதுக்குள் அந்த வெற்றிக் கிளுகிளுப்பு உயிருள்ள குழந்தையாகத் துடித்தது. அப்போது அவருடைய முகத்தைப் போர்க்கவேணும். ஆயிரம் கிலோ வாற்ஸில் ஒளிரும். போனவர், வந்தவர் எல்லாரிடமும் கடன் கேட்டார்;. பிறகு சொந்தக்காரரிடம், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரிடமும் வாங்கி வாங்கி அந்தப் பெருங்கிணற்றில் இறைத்தார்.

சித்தி திட்டினாள். பெரியப்பா கோவித்தார். வீட்டில் கண்ணீரும் வசையும் நிரம்பியது. சித்தப்பா சிரித்துக்கொண்டேயிருந்தார். பைத்தியக்காரர்கள். வெற்றியின் ருஸியைத் தெரியாதவர்கள். நம்பிக்கையின் முனையை அறியாதவர்கள். அவர் சிரித்தார். சிரித்துக் கொண்டேயிருந்தார். வீட்டில் கண்ணீர் நிரம்பியது. கவலைகள் நிரம்பின. எல்லோரும் துக்கப்பட்டார்கள். அவர் சிரித்தார். சிரித்துக் கொண்டேயிருந்தார்.

ஒருநாள் அவரைக் காணவில்லை. தேடினாள் சித்தி. அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. எல்லோரும் அவரைத் தேடினார்கள். அவர் இல்லை. அவருடைய நம்பிக்கை, அந்தச் சிரிப்பு அவரை எங்கோ கொண்டு போனது. அவருடைய நம்பிக்கைகள் அவரைக் காப்பாற்றவில்லை. அவர் பிறகு திரும்பவேயில்லை. எல்லோருக்கும் ஒரு வதை நீங்கியதைப் போலிருந்தது. சித்தியின் முகத்தில் அவன் பிறகுதான் ஒளிக்கீற்றைக் கண்டான். இத்தனை அழகியா அவள் என்று அலோஸியஸ் ஆச்சரியப்பட்டான்.

கடவுளே! இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ! அலோஸியஸ் தன் வாழ்நாளில் இப்படியொரு பொறியில் சிக்கவேயில்லை. அவனுக்கென்ன பைத்தியமா? பொறியில் சிக்குவதற்கு? பொறியைவைத்துப் பிடிக்கிறார்கள். இதற்கொரு முடிவேயில்லையா? இதைக் கேட்பதற்கு ஆட்களேயில்லையா? இந்தத் தெரு முழுவதும் வெள்ளை, கறுவல் என்றெல்லாம் எத்தனைபேர் திரிகிறார்கள். அவனுடைய கடைக்கு இறைச்சி வாங்கவரும் ஐ.ஸி. ஆர். ஸிக் காரரிடம் இதைப்பற்றியெல்லாம் ஒருதடவை கேட்க யோசித்தான். ஆனால், அவனுக்கு இங்லிஸ் தெரியாது. வந்த வெள்ளைக்குத் தமிழ் தெரியாது.

உலகம் ஒரு பொய் முட்டை. அலோஸியஸ்க்கு உடல் பதறியது. மனதில் பெருங் கொந்தளிப்பு. அலைகள் பெருக்கெடுத்தன. மிஞ்சியிருக்கும் ரவைகளையும் சுட்டுத் தீர்த்து விட்டு, துவக்கை வீசி எறியவேண்டும் போலிருந்தது. எதற்காகத் தான் இங்கே வந்தேன்? ஒரு சம்மந்தமும் இல்லாமல், ஏன் இப்படி, இந்தக் காட்டில் துவக்கோடு இருக்கிறேன் என்று தன்னைத் தானே கேட்டான். தன்னைத் தானே சுட்டுக் கொன்றால் என்ன? அல்லது வந்து அறிக்கை கேட்பவனை, கட்டளையிடுபவனை சுட்டுக் கொன்றால் என்ன?

தன்னைத்தானே சுட்டுக் கொன்றால் சிரிப்பார்கள். கோழை என்பார்கள். அதற்கு மேல் என்ன? சடலத்தைத் தூக்கிக் கொண்டுபொய் வீட்டில் போட்டு விட்டுப் போய்விடுவார்கள். அப்படிச் சாக வேண்டுமா? எதற்காக அப்படிச் சாகவேணும்? கட்டளைக் குதிரைகளோட வரும்போது அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம். இரண்டு பேரையாவது போட்டுத்தள்ளி விடலாம். போட்டு விட்டு ஓடி விடலாம். ஓடி, எங்கே போவது? எல்லா வாசல்களையும் அடைத்து விட்டார்கள்.

அவன் அறிய இருவத்தெட்டு வருசமா, “அல்லேலோயா, அல்லேலோயா, தேவன் வருவார், தேவன் வருவார்“ என்று அவனுடைய வீட்டுக்கருகில் கத்துகிறார்கள். உருகி உருகிப் பாடுகிறார்கள். மற்றாடுகிறார்கள். ஆண்டவரே தங்களை ரட்சியும் என்று மன்றாடுகிறார்கள். “ஆண்டவரே, தேவனே“ என்றெல்லாம் மனம் நெகிழந்து அழைக்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும் போதும் பார்க்கும் போதும் அவனுக்கே இதயம் கரைந்து போகும். அவன் இந்த அழைப்பைக் கேட்டுச் சிலபோது அழுதுமிருக்கிறான்.

அவர்களுடைய மன்றாட்டத்தில், பிரார்த்தனையில், அவர்களுடைய விசுவாசத்தில் எல்லாம் அவனுடைய நரம்புகள் சிலிர்த்திருக்கின்றன. இப்படியொரு உலகமா? இப்படியொரு வாழ்வா? என்ன அதிசயம். என்ன அழகான ஒப்புக் கொடுப்பு? எவ்வளவு விசுவாசம்? ஆன்மாவை ஒன்றித்துத் தங்களை அர்ப்பணிக்கும் இந்த மனங்கள்… அவன் நெகிழ்ந்தான்.

ஆனால் அவர்களிடம் தேவன் வந்ததாக இல்லை. அவர்கள் தங்கள் பிணிகளோடும், துயரங்களோடும் சந்தைக்கு வந்தார்கள். வயலுக்குப் போனார்கள். கடலில் வலையை இறக்கினார்கள். தெருவிலே நடந்தார்கள். தேவன் வரவில்லை. அவர்களில் யாரையும் அவர் எங்கும் அழைத்துப் போகவில்லை. எந்த ஒளிமிக்க பொருளையும் அவர் கொடுத்ததாகவும் இல்லை. அவர்கள் மன்றாடிக் கொண்டேயிருந்தார்கள். தேவன் வருவாரோ இல்லையோ தங்கள் கடனெல்லாம் தேவனுடைய வருகைக்காகப் பிரார்த்திப்பதே என்று அவர்கள் நம்பினார்கள். இந்த வாழ்க்கைகூட தேவனின் பிச்சை என்றே அவர்கள் எண்ணினார்கள்.

தேவன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தக் கூடிய மாதிரி இல்லையோ என்னவோ தெரியாது அவர் கடைசிவரையில் வரவேயில்லை. அவர் வந்ததாக அவன் அறிந்ததாகவும் இல்லை. அவர்கள் அறிந்ததாகவும் இல்லை. தேவன் அவ்வளவு கல் நெஞ்சக்காரனா என்று அவன் அஞ்சினான்.

தன்னை விசுவாசிப்பவர்களையே பொருட்படுத்தாமல் விடும் குணம் ஏற்கக் கூடியதில்லை. மன்னிக்கக் கூடியதுமில்லை.

“அல்லேலோயா தேவன் வருவார். அல்லேலோயா தமிழீழம்“.

அவனுடைய பதின் மூன்று வயதிலிருந்து ‘நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்’ என்ற செல்லப்பாவின் பாட்டைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறான். முதலில் அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அவனுடைய உடலில் நரம்புகள் போதவில்லையே, சிலிர்த்துக் கொள்வதற்கு. என்றெல்லாம் கவலைப்பட்டான்.

ஆனால் பிறகு அதைக் கேட்கும்போதெல்லாம் அது புனைவாக, வெறும் கற்பனையாக, பொய்யின் திரண்ட முகமாக அவனுக்குள் ஒரு உருவம் தோன்றியது. இப்படியே அந்தப் பாடல் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒலித்துக் கொண்டிருக்கப்போகிறதோ!

செல்லப்பா பாடிக்கொண்டேயிருக்கப் போகிறார். பாவம் பாடலை எழுதிய காசி. ஆனந்தன். அவர் மட்டுமல்ல, அவருடைய பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என்று எத்தனை தலைமுறை வந்தாலும் ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’தான்.

இதைப்பற்றி ஒருக்கால் குணபாலனுடன் கதைக்கும் போது “யுதர்கள் ரெண்டாயிரம் வருசமா தங்கட நாட்டைப் பற்றிய எண்ணத்தோடயும் நினைவுகளோடயும்தான் இருந்தார்கள். அதனால்தான் அவர்களால இஸ்ரேல் எண்டொரு நாட்டை உருவாக்க முடிஞ்சுது “ என்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான்.

“யுதர்களின் வரலலாறும் வாழ்க்கையும் வேற. அதைப்பற்றிய சர்வதேச நிலைப்பாடும் அந்த அமைவிடமும் வேற. அதையும் எங்கட கதையையும் ஒண்டாப் பாக்கேலாது. அவர்களின் மூளைக்கும் அவர்களின் விடுதலைக்கும் பெரும் பங்குண்டு. எங்கட மூளை எங்களைப் பாதாளத்துக்ள் விழுத்தியிருக்கு” என்றான் அலோஸியஸ்.

“விசர்ப்பன்னாடைக் கதை கதைக்காதை. இண்டைக்கு எங்கட சனம் புலம்பெயர்ந்து உலகம் முழுதிலயும் வாழுதுகள். அதுகள் எல்லாம் ஒண்டாச் சேந்தா எங்களுக்குத் தமிழீழம் கிடைக்கிறதில என்ன பிரச்சினை”

அலோஸியஸ்க்குப் பத்திக் கொண்டு வந்தது. குணபாலன்ரை குதிரைகள் வெகு தொலைவிலேயே ஓடுகின்றன என்று சிரித்தான் அலோஸியஸ்.

“அதுக்கான அகப்புறச் சூழல்களைப் பற்றிக் கவனிக்காமல் கதைக்கிறாய்” என்று அலோஸியஸ் நிதானமாகச் சொன்னான். அவனுடைய குரலில் உறுதியிருந்தது.

அதைப்பற்றிக் கவலையில்லை. லண்டனில இனிஇனி தேர்தல்களில தமிழாக்களும் நிப்பாங்கள். கனடாவில சில மாநிலங்களில தமிழாக்கள்தான் முக்கிய பிரதிநிதிகளாக இருக்கிறாங்கள். இப்பிடி உலகம் முழுதிலயும் தமிழாக்கள்தான் வருவாங்கள். அப்ப நான் சொன்னது நடக்கும். வேணுமெண்டால் இருந்து பாருங்கோ”

“அப்பிடியெண்டால் ரண்டாயிரம் வருசம் செல்லும் நாங்கள் தமிழீழத்தைக் காண”

குணபாலன் எதுவும் பேசவில்லை. இதற்குமேல் பேசிப் பயனில்லை என்று அவனுக்கு விளங்கியிருக்க வேணும். நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்தான். மூளை கடுமையாக வேலை செய்திருக்க வேணும். அவனுடைய மெல்லிய குச்சிக் கைகள் நடுங்கியதை அலோஸியஸ் கவனித்தான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், அவன் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

இதற்குப் பிறகு அவன் அலோஸியசுடன் அதிகமாகக் கதைப்பதில்லை. ஆனால் றேடியோவில் அவன் செய்யும் நிகழ்ச்சிகளில் இஸ்ரேலை எழுப்பு எழுப்பெண்டு எழுப்புவான். எல்லாம் அலோஸியஸ்க்கான பதிலடிகள்.

இதைப்பற்றிப் புரியாமல் ‘இவன் என்னடா, இருந்தாப்போல இஸ்ரேலைப் பற்றிப் புகழ்பாட வெளிக்கிட்டிட்டான். இயக்கம் இஸ்ரேலைப் பற்றி என்ன புதுசாக் கதைக்கிது’ என்று குழம்பினார் கேந்திரநாதன்.

அவருடைய கொம்யுனிஸ மூளையில் குணபாலனின் இஸ்ரேல் கதை பளீரெனப் பொத்தியடித்தது.

இயக்கத்தை ஆதரிச்ச இரண்டு மூன்று கொம்யூனிற்றுகளில் ஒருத்தர் கேந்திரநாதன். தமிழீழம் என்ற சொல்லோடு, புலிகளை ஆதரித்ததற்காக அந்த நாட்களில் அவரைக் கட்சிக்கார்கள் வாங்கு வாங்கென்று வாங்கியிருந்தார்கள். எத்தனை சூறாவழிகள், புயல்கள், தடைகள், தாக்குதல்கள், வசை பாடுதல்கள், புறக்கணித்தல்கள், கேலிப்படுத்தல்கள் என எல்லாவற்றையும் சந்தித்துச் சமாளித்து, அவர் தமிழீழத்துக்காகத் தலையைக் குடுத்தார்.

ஆனால், அவர் கனவிலும் இப்படியொரு கோடு தனக்கோ, இயக்கத்துக்கோ வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஏதோ இயக்கத்தை இஸ்ரேலோடு சேர்த்து ஒன்றாகப் பிணைக்கப்போகிற மாதிரி இஸ்ரேலைப் பற்றிய கதைகளைக் குணபாலன் அவிழ்த்து விடுகிறான். இதைப்பற்றி இயக்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்று அறிய வேண்டும் போல இருந்தது அவருக்கு. ஏற்கனவே இயக்க நடைமுறைகளால் நொந்து அலுத்து மெல்ல ஒதுங்கித் தூர இருந்தாலும் இந்த மாதிரிக் காரியங்கள் பகிரங்கமாக நடக்கும்போது அதைப்பார்த்துக் காண்டு சும்மா இருக்க முடியவில்லை.

சுருட்டுக் கட்டுகள் தீர்ந்தன. மூன்று நாட்கள் ஒழுங்கான தூக்கமில்லை. ஏற்கனவே இருந்த ஆஸ்மா இப்போது கூடிவிட்டது போலிருந்தது. இதைப்பற்றி, குணபாலனின் இந்தக் கொடுமையைப் பற்றி யாரோடு கதைக்கலாம்? என்று யோசித்தார்.

அவருக்குத் தெரிந்த பழையவர்களில் பாதிப்பேருக்கு மேலானவர்கள் “காற்றுப் போய்“ இருக்கிறார்கள். அவர்கள் இப்போது “ஓடிய குதிரைகள்“ என்றும் சொல்லப்படுகிறது. அவர்களின் கதையை அவரே கேட்கவெண்டிய நிலைமை. இதற்குள் அவருடைய கதையையா கேட்கப் போகிறார்கள்.

மிஞ்சியிருக்கும் அரைக்காற்று, முக்காற் காற்றுகள் இந்தமாதரி விசயங்களைக் கதைக்கப்போய் தங்களின் இருக்கின்ற காற்றையும் இழக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் ஆளைக் கண்டவுடனேயே தலைமறைவாகிவிடுவார்கள். திடுமுட்டாகச் சந்தித்தால், அல்லது மாட்டுப்பட்டால், எப்பபடியோ சுழித்து வெட்டி விடுவார்கள். அல்லது சாட்டுப் போக்குகள் சொல்லிக் கடத்தி ஆளைக் களைக்கப்பண்ணி விடுவார்கள். இதெல்லாம் கேந்திரநாதனுக்குத் தெரியாமலில்லை. அவர் பழந்தின்று கொட்டை போட்ட ஆள். என்றாலும் அவரை மிஞ்சி விட்டார்கள் இயக்கக்காரர்கள்.

அவருடைய மூளையில் யாரும் பொருத்தமாகத் தட்டுப்படவில்லை. ஏற்கனவே முஸ்லிம் மக்களோடு விரோதம் பாராட்டிய பேர்வழிகள் இஸ்ரேலை ஆதரிப்பதில் என்ன ஆச்சரியம்? உண்மையில் முஸ்லிம் எதிர்ப்புவாதத்தின் இன்னொரு வடிவம்தான் இதுவா என்றும் அவர் யோசித்தார். அதுதான் சரி. இல்லையென்றால் இத்தனை துணிச்சலோடு குணபாலன் எப்படிக் கத்த முடியும்? முஸ்லிம்களை எப்போதும் “சோனி, சோனி“ என்றே அவன் கதைப்பான். இதைப்பற்றி அவனோடு பல தடவை அவர் அவனோடு சண்டைகூடப் போட்டிருக்கிறார். இனத்துவேசி என்று குணபாலனை வாய்க்குள் திட்டினார். இந்த மாதிரி ஆட்களால் எல்லாந் தொலையப்கோகிறது என்று கவலைப்பட்டார்.

ஆனாலும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. மேலிடத்துக்கு எழுதினார். எல்லாவற்றையும் திரட்டி, அதை ஒரு பிடியாக்கி, நன்றாக வற்றக்காய்ச்சி, மிகச் சுருக்கி (இரத்தினச் சுருக்கம் என்பார்களே! –ஏனென்றால் மிகச்சுருக்கமாக எழுதினால்தான் பெரியவர் வாசிப்பார் என்று ஐதீகம். அதனால் அதற்கேற்றமாதிரி) ஒரு துளியாக்கி, இந்த விசயத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார்.

அடிக்குறிப்பாக இது இனத்துவேசம், பிற்போக்குத்தனமான காரியம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அப்போதும் ஒரு சந்தேகம். கொடுத்த கடிதம் உரிய இடத்துக்குப் போய்ச் சேருமா என்று.

எத்தனையோ கடிதங்களை நம்பிக்கையோடு அனுப்பி விட்டு, மேலிடத்திலிருந்து பதில் வரும் வரும் என்று காத்திருந்து ஏமாந்தவர்களின் கதைகளை அறிந்தவர் அவர். எனவே அந்தக் கடிதத்தில் வேறு பிரதிகளை எடுத்து தனக்குத் தெரிந்த வேறு “றூட்“களாலும் அனுப்பினார்.

கடிதத்தின் கதை எல்லாம் கடலில் போட்ட கல்லாகிப் போனது. இஸ்ரேலின் கதையோ தினமும் காலையில் சனங்களுக்குச் சொல்லப்பட்டது.

கேந்திரநாதன், யாஸிர் அரபாத்திடம் மன்னிப்புக் கேட்டார். பலஸ்தீனியர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.. அவருக்கு விருப்பமான கவிஞரகள்; முகமட் தர்விஸிடம் மன்னிப்புக் கேட்டார். அடோனிஸிடம் மன்னிப்புக் கேட்டார். போகிற போக்கில் அவர், நெல்சன் மண்டேலாவிடமும் கறுப்பர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டியும் வரலாம். கண்கள் நிரம்பின. துக்கம்; தொண்டையில் நிரம்பியது.

இந்தச் சோகமான கதைகளை எல்லாம் அவர் அலோஸியஸிடம் பின்னேரங்களில் வந்து சொல்வார். பின்னேரம் தொடங்கும் கதை இரவு சாமம் வரையில் கூடத் தொடர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லி ஆறுகிறாரா? அல்லது துக்கப்படுகிறாரா, அல்லது இந்தமாதிரியெல்லாம் காரியங்கள் நடக்கின்றன என்று சொல்ல விரும்புகிறாரா என்று அலோஸியஸால் உடனடியாகத் தீர்மானிக்க முடியவில்லை.

இறைச்சிக் கடைக்கு வந்தாலும் அவர் இதே கதைதான். துக்கம் தோய்ந்த வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருப்பார். கவலை படிந்த கண்கள் கெஞ்சுவதைப் போலிருக்கும். தவறணையில் சந்தித்தாலும் இதே கதைதான். ஆனால் ஒன்று, தவறணையில் உசாராக இருப்பார். சொற்கள் சும்மா தெறித்து விழும். சிவாஜி கணேசன் தோற்றுப்போவார். “குணபாலனின் மண்டையை உடைக்கோணும்“ என்று சபதமெடுப்பார்.

00

“என்ன அறிக்கை எழுதியாச்சா” என்று கேட்டான் அலோஸயசுக்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவன். அநேகமாக அவன் துணைப்பொறுப்பாக இருக்கவேணும். அவனுடைய குரல் இறுக்கமாய் ஒலித்தது. ஆனால் இயல்பான இறுக்கமில்லை. போர்க்களங்களில் சிலர் செயற்கையாக உருவாக்கும் இறுக்கம்.

“அறிக்கையோ, இதென்ன வில்லங்கமாக்கிடக்கு? நான் என்னத்தை எழுதிறது? ஏதோ காட்டுக்குள்ள அசுமாத்தம் தெரிஞ்சுது. அதுதான் சுட்டனான்” அலோஸியஸ் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அதனால் தன்னுடைய பதிலுக்கு அவன் என்ன விளைவைக் காட்டுகிறான் என்று பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் என்ன பதில் வரப்போகிறது என்று எதிர்பார்த்தான்.

“என்ன, பகிடியா விடுகிறியள்? காட்டுக்குள்ள அசைவு தெரிஞ்சால் ஏன் மேல வானத்துக்குச் சுடோணும்?“ அவன் ஒற்றைக் கண்ணைக் கொஞ்சம் சுருக்கிக் கேட்டான். அந்தக் கேள்வி நிச்சயம் ஒரு விசாரணைச் சாயலைத்தான் காட்டியது. அவனுடைய கண்ணில் ஒன்று சிறியது. முன்னர் எப்போதோ ஏற்பட்ட காயத்தினால் அப்படி மாறியிருக்கலாம். அநேகமாக அது போர்க்களமொன்றில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

“முதல் வெடியை மேல வைச்சாத்தான் காட்டுக்குள்ள நிக்கிறது ஆமியோ இல்லையோ எண்டது தெரியும்” இந்த அடிப்படை அறிவு கூட இவர்களுக்கில்லை என்று அலோசியஸ் நினைத்தான். ‘இதையெல்லாம் தெரியாமல்தான் கண்டபடி சுட்டுப் பெடியளும் பெட்டையளும் செத்துத் துலையுதுகள்’ என்று எண்ணினான்.

“எங்களுக்கு நீங்கள் படிப்பிக்க வேண்டாம். பேசாமல் என்ன நடந்தது? ஏன் சுட்டனிங்கள்? எண்டதை எழுதுங்கோ’’ என்று அவன் எச்சரித்தான்.

அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. சொல்லிப்பயனில்லை. எல்லாவற்றையும் நினைக்கும் போது சிரிப்பு வந்தது. சிரித்தான். கோபம் வந்தது. ஓங்கிக் குத்தினான், தன்னுடைய தொடையில். வலி எழுந்து உடலில் பரவியது.

4

அந்த இரத்த வெடிலை அலோஸியஸால் தாங்க முடியவில்லை. அந்த அதிகாலை இருளை ஊடுருவித் தாக்கியது. மூக்கு என்று ஒன்றிருப்பதே பெரும் தண்டனை என்றிருந்தது. குமட்டும் நாற்றம். தினமும் இரத்தத்தோடும் இறைச்சியோடும் வாழ்ந்தவனுக்கு இந்த நெடியைச் சகிக்க முடியவில்லை. மனுச இரத்தத்தைப் போல ஒரு கெட்ட நாற்றம் உலகில் வேறில்லை. மனுச ரத்தமும் நாற்றம் தான். மனுச மலமும் நாற்றம்தான். அதிலும் தேங்கி உறைந்த இரத்தத்தில் மழை நீர் சேர்ந்து தேங்கினால் அதைப் போன்ற அருவருப்பு வேறில்லை. இனி அதில் புழுக்களும் நெளியலாம்.

“சவேரியாரே! இதென்ன கொடுமை? இப்படியொரு கொலைப்பாவம் என்னைச் சேர ஏன் அனுமதிக்கிறீர்?’’அவன் மன்றாடினான். மேலே விரிந்த வானம். நட்சத்திரங்களில்லை. எப்போது கிழக்கு வெளிக்கும் என்றும் தெரியவில்லை. எல்லா இடமும் கறுத்து இருண்டிருந்தது. ஆனால், நள்ளிரவு கடந்து நெடுநேரம். தலை சுற்றியது.

கொட்டும் மழை. மாறி, மாறி ஆளை ஆள் சுடும் கொலைக் களம். ஒரு பக்கத்தில் அவன். மறுபக்கத்தில் அவனைப்போலவோ இல்லை இன்னும் பரிதாபமாகவோ அல்லது படு மோசமாகவோ யாரோ. இடையில் கடவுள் அல்லது யமன்.

அவனுக்கு எப்போதும் குண்டு பாயலாம். அங்கே நிற்கும் வரையில் அது சர்வ நிச்சயம். அது அவனுடைய இதயத்தைப் படிக்காது. அதற்கு அந்த மொழி தெரியாது. இதயத்தின் மொழி தெரியாத குண்டு. அதற்கு யார், எவர், ஏன் என்ற பேதங்களோ விளக்கமோ கிடையாது.

அவனின் முன்னே அவனோடு இருந்த, அவனைப் போல எந்தப் பக்கமும் இல்லாத இரண்டு பேர் சிதறிக்கிடக்கிறார்கள். அலோஸியஸ்க்குக் குடல் கருகியது. இந்த மாதிரிக் காட்சியை, அதுவும் இந்தளவு நெருக்கத்திலும் தனிமையிலும் அவன் ஒரு போதுமே பார்த்ததில்லை.

இரத்தம் மழையோட கரைந்து அவனுடைய கால்களினூடாகப் பாய்கிறது. மனுச இரத்தம். இதைப் போன்றதொரு நிலை தனக்கு என்றாவது வரும் என்று அவன் எண்ணியிருக்கவும் இல்லை.

அது நடந்து நான்கு மணித்தியாலங்களுக்கு மேலிருக்கும். காலை ஒளி மெல்ல வானத்தில் படிந்து பூமியில் இறங்கியது. மரங்கள் நிறம் மாறின. இரவிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தது சூழல். ஆனால், இன்னும் அந்தப் பீதியும் அபாயமும் நெருக்கடியுமான சூழல் மாறவில்லை. அது இன்னும் இன்னும் நெருக்கடியும் அபாயமுமாக மாறிக் கொண்டிருந்தது. யுகங்கள் முழுவதற்கும் இந்தநிலை மாறப் போவதில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. இந்தக் கணத்திலோ அடுத்த கணத்திலோ அவனும் இதைப்போலச் சிதறிப் போகலாம். இரத்தத்தை மழை கரைக்கும். அல்லது நிலம் உறிஞ்சும். அவ்வளவுதான். அவனுடைய வாழ்க்கை அதோடு முடியும்.

எப்படிச் சாவின் முன்னே நிறுத்தப் பட்டிருக்கிறேன் என்று எண்ணியபோது, உடல் ஒரு கணம் செயலற்றுத் தளர்ந்தது. எத்தனை ஆடுகளையும் மாடுகளையும் போட்டுத் தள்ளியிருக்கிறான். அந்தப் பழியும் பாவமும்தான் இப்போது தன்னைச் சூழ்ந்திருக்கிறதா என்று ஒரு கணம் நினைத்தான். மனுசனையும் மிருகத்தையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடியும்? ஏன், உயிர் என்றால் எல்லாம் ஒன்றுதானே! இதென்ன பேதமையான எண்ணங்கள்? மனம் குலையும்போது இப்படி எங்கிருந்தோவெல்லாம் எண்ணங்கள் வந்து அலை பாய்கின்றன.

மண்ணாங்கட்டி. எல்லாவற்றுக்கும் உயிர் ஒன்றென்றால், இப்படி மனிச உயிர்களைக் குடிக்கிற இந்தப் பைத்தியக்காரர்களுக்கு என்ன தண்டனை?

தமிழீழம்’ என்ற இந்த ஒரு சொல்லின் பயங்கரத்தை அவன் அப்போதுதான் முழுமையாக உணர்ந்தான்.

முடிவற்ற கண்ணீர், எல்லையற்ற துயரம், பேரவலம், கொடூரம், வதைகள், கொடுமைகள், பரிவு, வலி, அவமானம், இயலாமை... லட்சக்கணக்கான மனித உயிர்களின் இழப்பு. பைத்தியக்காரத்தனம், கனவு, தாகம்.... எல்லாவற்றினதும் திரண்ட வடிவம்தான் இந்தச் சொல்.

இந்தக் கனவு. அந்தர வெளியில் மிதக்கும் கனவு.

அவனுக்கு வெறுப்பு வந்தது. பற்களைக் கடித்துக் கொண்டான். பசித்தது. தொண்டையில் நிரம்பிக் கூடாகியது துக்கம். கொப்பளிக்கும் கோபம் கண்களில். அவனால் எதற்கும் முடியவில்லை. கள்ளுக்குடித்தாலாவது இதுகளைக் கொஞ்சம் மறக்கலாம். அல்லது விகர் (வடிசாராயம்) அடிக்கலாம். தலை அவமானத்தால் தாழ்ந்தது. கையை ஓங்கித் தன்னுடைய தொடையில் குத்தினான். இடது கையால் நெற்றியைத் தடவி அதை அமுக்கினான். தலை வலித்தது. உடல் இந்தமாதிரி நிலையில் ஒரு சுமையே. அதை விடச் சுமை இந்த உயிர். இரண்டும் இப்போது அவனுக்குப் பெரும் தண்டனையாகிவிட்டன.

„ஐயொ என்னைக் காப்பாத்துங்கோ, நான் சாகப்போறன். அய்யோ, அய்யோ..“ அவன் திடுக்கிட்டான். ஒரு பெண்ணின் அவலக்குரல். அவனுக்கருகில். மிக அருகில். அது மரணக் குரல். சாவோலம். கடவுளே..! மனம் துடித்து விழித்தது. கைகள் அவனை அறியாமலே பரபரத்தன. கால்களில் ஏதோ வேகம். ஆனால், சிறிதும் நகர முடியாத சூழல். கொலை வலயம்.

சரமாரியான சண்டை. சன்னங்களும் எறிகணைகளும் தலைகளைத் தேடிக் கொண்டிருந்தன. மரணம் தன்னுடைய பெரிய நாக்கை நீட்டி அலைந்தது.

காடு அதிர்ந்தது. மழையில் நனைந்திருந்த மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. பறவைகள் இல்லாத காடு. மிருகங்கள் இல்லாத காடு. எல்லாம் எங்கே இடம் பெயர்ந்து போயிருக்கும்? அலோஸியஸ் அங்கே நின்ற நாட்களில் பறவைக் குரலைக் கேட்டது அரிது. பறவைகளின் குரல் கேட்காத வெறுமையான காட்டை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இலைகள் கருகும் மணம். பச்சை மரங்கள் எரியும் வாடை. கிளைகள் முறிந்து விழும் ஓசை. இந்தப் பெண்ணின் அவலக்குரல். இந்த இன்னும் யாரோ முனகுகிறார்கள். சன்னங்கள் தாறுமாறாகப் பறக்கின்றன. தலையை உயர்த்த முடியாது. நிமிர முடியாது.

அலோஸியஸ்க்கு வீட்டு நினைவு வந்தது. பிள்ளைகளின் முகம். மனைவியின் முகம். கடை. கடைக்கு வரம் ஆட்கள். கட்டவேண்டிய கடன்.... அவனுக்கு கட்டளையிடும் அந்த முகத்தை நினைவிலிருந்து அகற்றினான்.

“விடாதே அடி, அடி. டேய் வாறான்ரா. வாறான்ரா. வரவிடாதை அடி. பு...ஆண்டி, அடியடா. என்ன மசிராடா பாக்கிறாய். உதிலதான்ரா நிக்கிறான். அடி, அடி..“

“சட சட சட் சட சட டும் டுமீர் டப்,டப், சடசட”

அலோசியஸ் சுட்டான்.சரமாரியான சூடு... தலையை நிமிர்த்தாமல் ரவைக்கூடுகளை மாற்றினான். மாற்றி மாற்றிச் சுட்டான்.

எல்லாமே பைத்த்தியக்காரத்தனத்தின் உச்சமாக அவனுக்குத் தோன்றியது. கொலை வெறி எப்பிடியெல்லாம் போட்டலைக்கிறது. இரண்டு யானைகள் மோதும் போது நசிபடுவது செடிகள்தான். செடியாகச் சிக்கிவிட்டேனா என்ற கேள்வி அவனுக்குள் இருந்தது. தான் மட்டும் அல்ல பலரும் சிக்கித்தான் விட்டார்கள்.

தருமு சொல்வார்“கொடாக்கண்டனுக்கும் விடாக்கண்டனுக்குமிடையில் சிக்கி விட்டோம்“ என்று.

இதெல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைமை இல்லை. அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேணும். தாமதிக்க முடியாது. தாமதித்தால் இன்னும் ஆபத்து அதிகமாகலாம். அவன் ஒரு நொடியில் அந்தப் பயங்கரங்களின் வழியே பாய்ந்து சென்றான். சாவினூடே சென்று அந்தப் பெண்ணைத் தூக்கினான். அவள் விழிகள் சொருகி விட்டன. இரத்த நெடி. அவலமான முகம். முகதத்தில் வலது பக்கத்தில் பாதிக்கும் குறைவாகச் சிதைந்திருந்தது. உலர்ந்த வாய். மயங்கிக் கொண்டிருந்தாள். இரத்தம் பெருகிக் கொண்டேயிருந்தது.

தூக்கிய பெண்ணைக் கொண்டு, பின் பக்கமாக ஓடினான். ஆனால், ஓட முடியாதபடி சாவு அவனைச் சுற்றி வளைத்தது. எறிகணைகள் அங்குமிங்குமாக வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. துப்பாக்கிச் சன்னங்கள் பறந்து வந்தன. தலையைத் தூக்க முடியாது. நிமிர முடியாது. இந்த நிலையில் அவளை எப்படிக் காப்பாற்ற முடியும்? தன்னை எவ்வாறு காத்துக் கொள்ள இயலும்? கடவுளே என்ன கூத்தெல்லாம் நடக்குது, இது எங்கே போய் முடியப் போகுது. எப்படியெல்லாம் ஆகப் போகுது?

ஆனால் தாமதிக்க முடியாது. நிலைமை அநேகமாக மோசமாகி விட்டது போலவே தெரிந்தது. அவ்வளவுக்குச் சண்டை உக்கிரம். சத்தம் காதைப்பிளந்தது. அப்படியே இதயத்தைப் பிளந்தது. உடல் பதறியது. இனி இதிலிருந்து மீள்வது அபுர்வம். அதிசயந்தான். அவனை மீறி அழுகை வந்தது. மனம் முழுவதும் பிள்ளைகளின் முகங்கள்.

என்ன செய்ய முடியும்? அவன் மட்டுமே அந்தப் பகுதியில் தனித்து நிற்கிறான். திருப்பிச் சுடலாமா? சுட்டால் அதே இலக்கில் சுடுவார்கள். உயிர் பிழைக்க வேணும் என்றால் சுட்டுத்தான் ஆகவேணும். அப்படியென்றால் கொலை. செபஸ்ரியாரே! நான் கொலையாளியா? வேறு வழியில்லை. சுட்டால் மட்டும் தப்பி விடமுடியுமா? தான் எங்கே நிறுத்தப்பட்டிருக்கிறேன். எங்கே நிற்கிறேன் ஒன்றுமே அலோசியஸ்க்குப் புரியவில்லை.

“டேய்...பு.. ஆண்டி தமிழீழத்தை நினைச்சுக் கொண்டு அடியுங்கோடா. வாறான்ரா, வாறான்ரா விடாதை அடி, அடி அந்தா மரத்துக்குப் பின்னாலை பதுங்குகிறான். குடு. பின்னால பெரிசை அனுப்பு. ஐம்பது மீற்றர் தூரத்தில நிற்கிறான். விடாத“

கட்டளைக் குரல் அவனின் பின்னாலிருந்து ஒலித்தது. அந்தக் குரலுக்கு இசைய அலோசியசைச் சுற்றி சிலர் இயங்கினார்கள். சூடு உக்கிரமாகியது. அதற்கு மறுத்தானை எதிர்த்தரப்புக் கொடுத்தது. அடை மழை. அந்த மழையை விடவும் இந்த மழை உக்கிரம்.

அலோஸியஸ் தவழ்ந்தான். நிலத்தின் குளிர்ச்சியையும் அதன் கருணையையும் அவனுடைய அடிவயிறு உணர்ந்தது. அந்த மண்ணில் அப்படியே படுத்து விடலாம். அதன் கருணையில் தன்னை முழதாகக் கொடுத்து விடலாம். தாய் மடியின் சுகம். அப்படியே தானும் முடிவற்று மண்ணில் சாய்ந்துவிடத்தான் வேணுமோ என்ற எண்ணம் வந்தது அவனுக்கு. அக்கணமே அவனுள் ஒரு பேரியக்கம்.

அந்தப் பெண்ணை அவன் இழுத்தான். தவழ்ந்த படி இன்னொரு உடலை இழுத்துச் செல்வது எவ்வளவு கடினமானது. அதைவிடக் கடினமானது, உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாமல் இப்படித் தவிப்பது. எவ்வளவு கொடுமை? தான் ஒரு பிராணியைப் போல மாறி விட்டதாக உணர்ந்தான். இதுதான் கிடைத்த பரிசா?

“ டேய் தமிழீழத்தை நினையுங்கோடா“ திடீரென உக்கிரமான குரல்.

“ஐயோ இந்த நரகம் வேண்டாம்“ என்று வாய்விட்டுக் கத்தினான்.

எதுவோ ஒரு வலி, காலில். மேல் தொடையில். சம நேரத்தில் தோள்பட்டையில். வரவர வலி கூடியது. படாரென விழுந்து படுத்த படியே வலித்த இடங்களில் தடவிப் பார்த்தான். கை பிசு பிசுத்தது. ஈரம். பச்சை இரத்தம். அந்த இரத்தத்தின் நெடிலை அவனுடைய மூக்கு ஏற்க முடியாமல் தவித்தது.

5

அலோஸியஸ் கண் விழித்தபோது அவனுடைய வலது கால் தொடைக்குக் கீழே காணாமற் போயிருந்தது. காலைத் தடவிப் பார்த்தான். கண்கள் மங்கின. எல்லாமே இருண்டு வந்தது. அழுவதற்கு நாக்கு எழவில்லை. அவனால் அதைத்தாங்க முடியவில்லை. இனி எந்தச் சந்தர்ப்பத்திலும் அவனால் அதைத் திரும்பப் பெற முடியாது. அதற்கு விலையில்லை. தான் சம்மதிக்காத, விரும்பாத காரியத்தில் ஈடுபடுத்தப்பட்டதன் விளைவுக்கு எப்படி இந்தத் தண்டனை? அவன் குற்றமே இழைக்காமல் கிடைத்திருக்கும் தண்டனை. அவன் விம்மி விம்மி அழுதான். ஆஸ்பத்திரி மணத்தை மீறி அந்த அழுகைக் குரல் கேட்டது.

மூக்கில் மருந்து நெடி. சுற்றிவர காலையோ, கையையோ, கண்ணையோ, மூக்கையோ, முதுகையோ கொடுத்தவர்கள். ஊழைக்குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.

உடலில் ஏதாவது ஒரு பகுதியில் கட்டுப்போடாதவர்கள் இல்லை. காய்ந்து வரண்ட முகங்கள். எதற்காக இந்தத் துன்பமெல்லாம் என்று கேட்கும் கண்கள். ஏன் தாங்கள் இப்படிப் பழிவாங்கப் படுகிறோம் எனப் பார்க்கும் பார்வைகள். தங்களை மீட்பதற்கு யாராவது மீட்பதற்கு யாராவது இல்லையா என்று ஏங்கும் அந்தக் கண்களில் படர்ந்திருக்கும் நீண்ட துயரை அலோஸியஸ் பார்த்தான்.

அவன் இதயம் ஒரு கணம் இயங்க மறுத்தது. தன்னுடைய கண்களிலும் இப்படித்தானே துயரம் கரை கட்டியிருக்கும் என்று எண்ணினான். எல்லாமே வாடிய முகங்கள். வயதை மீறிய முதுமை. இளமையின் வாளிப்பை அவற்றில் காணவில்லை. அதை எதுவோ தின்று கொண்டிருக்கிறது.

“அலோஸியஸ் அண்ணை, என்னைத் தெரியுதா?“ என்று கேட்டான் அவனுக்கு வலது பக்கமாக இணர்டாவது கட்டிலில் படுத்திருந்தவன்.

அலோஸியஸ் ஒரு கணம் தடுமாறி விழித்தான். கன்னங்கள் ஒட்டி, மெலிந்தவன். அலோஸியஸைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனுடைய சிரிப்பையும் விட அந்த முகத்தில் வெளிப்பட்ட சோகம் பெரியது. அலோஸியஸ் கூர்ந்து பார்த்தான். யாராயிருக்கும். அந்த மதிய நேரத்தில் வெளியே எறித்துக் கொண்டிருந்த கோடை வெயிலின் ஒளி ஆஸ்பத்திரிச் சுவரில் வெளிப்பட்டு அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது. அலோஸியஸ் அவனை அடையாளம் கண்டான்.

மாவடிச் செல்லத்தம்பியின் மகன். தங்கேஸ். தகப்பன் செல்லத்தம்பி, மாட்டு வியாபாரி. கரீம் காக்கா ஊரிலிருந்த போது காக்காவோடு சேர்ந்து மாடு வாங்கி விற்றான். இயக்கம் முஸ்லிம்களை வெளியேற்றிக் கலைத்தபோது(1990 இல்) காக்கா குடும்பமும் புத்தளத்துக்கு ஒரே இரவில் போய்விட்டது. பிறகு செல்லத்தம்பி, தனியாக மாட்டு வியாபாரத்தைப் பார்த்தான். ஒரு மூன்று வருசம் போயிருக்கும். ஒரு நாள் இரவு செல்லத்தம்பி அருளப்புவின் கடையில் பீடிக்கட்டை வாங்கிக் கொண்டு திரும்பியபோது கடை மறைவில் மறைந்து நின்ற இரண்டு இயக்கப் பெடியள், அவனுடைய சேர்ட் கொலரில் பிடித்து இருளுக்குள்ளே இழுத்தார்கள். ஒருவன் வாயைத் துணியினால் அடைத்தான். செல்லத்தம்பி திடுக்கிட்டுத் திமிறியபோது அவனை அமத்திப் பிடித்தார்கள் இருவரும். அவன் சத்தம் போடுவதற்காக முயன்றவேளை ஒருவன் பிஸ்ரலை வாய்க்குள்ளே திணித்தான். மற்றவன் காதில் வைத்தான்.

என்ன, ஏது, எதற்கு என்று தெரியாமலே அவனைக் கொண்டு போன இயக்கப் பெடியள், கரீம் காக்கவுக்கும் அவனுக்குமிடையில் தொடர்பிருக்கிறது என்று அடித்துச் சொன்னார்கள். ஆறு மாதமாக அவர்கள் இதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் செல்லத்தம்பிக்கோ இதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அப்படித் தொடர்பிருந்தால் தான் என்ன? காக்கா தேசத்துரோகக் குற்றம் எதையும் செய்ய ஆளில்லை. ஊரிலிருக்கும் வரையில் காக்காவின் மகனுடைய கொத்து ரொட்டிக் கடையில் எப்பவும் இயக்கக்காரரின் மோட்டார்சைக்கிள்கள்தான் சாமம் வரையில் நிற்கும். கோக்கோகோலா குடிப்பதை இயக்கம் தடுத்திருந்தாலும் அந்தக் கடையில் போராளிகள் அதைக் குடித்தார்கள். அவனுடன் சிரித்துப் பம்பலடித்தார்கள். அப்படியெல்லாம் இருந்தார்கள். இப்பொழுது தலை கீழாகி நிற்கிறார்கள்.

ஆக செல்லத்தம்பி செய்ததெல்லாம் ஒன்றேயொன்றுதான். கரீம் காக்கா ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட போது தனக்கு இயக்கத்திடமிருந்தும் வேறு ஆட்களிடமிருந்தும் வர வேண்டிய மாட்டுக் காசு ஒரு லட்சத்து ஐம்பத்தி மூவாயிரத்து இரு நூற்றம்பது ரூபாவை வாங்கும்படி செல்லத்தம்பிக்கு ஒரு கடிதம் கொடுத்ததுதான். இதில் இயக்கத்திடமிருந்து வரவேண்டிய காசு, தொண்ணூறாயிரத்து ஐநூற்றி எழுபது ரூபா.

இங்கே ஆகலும் சிக்கல் என்னவென்றால், காக்கா வெளியேற்றப்பட்டு இரண்டு மாதங்களின் பிறகே அந்தக் கடிதத்தை அவர் செல்லத்தம்பிக்கு அனுப்பியிருந்தார். வெளியேறும்போது இருந்த அந்தரத்திலும் எதிர்பாராத திகைப்பிலும் காக்காவினால் எதையுமே செய்ய முடியவில்லை. ஒரே நாளில் ஊரை விட்டு ஓடிப்போ என்று சொன்னால் யாரால்தான், எதைத்தான் செய்ய முடியும்?

ஆறு தலைமுறையாக வாழ்ந்த ஊர். படித்த பள்ளி. பழகிய நண்பர்கள். ஊர் ஆட்கள். திரிந்த தெருக்கள். குளித்த குளம். அவர் தேடித்தேடி ஆசையோடு வாங்கிச் சேர்த்த பொருட்கள். அவர் தன் நண்பர்களோடு திருவிழாவென்றும் பொங்கலென்றும் போய்க் கொண்டாடிய கோவில்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு பகலில் வெளியேற வேண்டும் என்று கட்டளை வந்தபோது அவருக்கு எதுவும் புரியவில்லை. முதலில் தலை சுற்றியது. பிறகு பூமி சுற்றியது. வருமதி கொடுக்குமதி ஒன்றைப்பற்றியும் அவரால் சிந்திக்க முடிடியவில்லை. தெரிந்த இயக்கக்காரர்களிடம் ஓடிப்போனார். அவரை விட முந்திக் கொண்டு அவருடைய மகன் அவர்களைத் தேடிப் போனான். தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்தார்கள். பாவத்தில் அவர்களுக்குப் பங்கிருந்ததோ இல்லையோ கையைக் கழுவினார்கள். ஒரு கைப்பையில் எடுக்கக் கூடியவைகளை எடுத்துக் கொண்டு எல்லோரோடும் தன்னுடைய குடும்பத்தையும் தள்ளியவாறு போனார் காக்கா. போகும்போது அவர் சிந்திய கண்ணீர் காயாமல் நீண்ட நேரம் இருந்ததாக எப்போதும் செல்லத்தம்பி சொல்லிக் கொண்டிருந்தான்.

அவர் போய், அங்கேயிருந்து கொண்டு பிறகு, தான் சீர் செய்ய வேண்டியவற்றை, அப்படிச் செய்யக் கூடியவற்றை, சரியாக்கலாம் என்பவற்றை எல்லாம் சிந்தித்தார். இத நடந்தது அவர் வெளியேற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு. அப்போதுதான் அவர் செல்லத்தம்பிக்கு கடிதமெழுதினார். தான் செல்லத்தம்பிக்குக் கொடுக்க வேண்டிய கணக்கையும் எழுதி, கடைக்காரச் சண்முகத்துக்குத் தீர்க்க வேண்டிய பாக்கி, சீட்டுப் பிடிக்கும் தங்கத்துக்கு தரவேண்டி தொகை என்றெல்லாம் எழுதி, மேலதிகமாக செல்லத்தம்பி தன்னோடு ஒன்றாகத் தொழில் செய்ததற்காக வரவேண்டிய வருமதிகளின் காசில் ஒர தொகையை எடுக்கும்படி எழுதியிருந்தார். அவற்றையே செல்லத்தம்பி கடன்காரரிடம் கேட்டான்.

என்னடா காக்காவுக்கு வால் பிடிச்சு ஏஜென்ஸி வேலை பாக்கிறியோ? இல்லாட்டி, அங்கால காக்கா மூலமா ஆமிக்கு தகவல் சொல்லுறியோ என்று இயக்கப் பெடியள் கேட்டபோது றூட், வேறு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது என்று புரிந்தது. மீளமுடியாத ஒரு உலகத்துக்கு தன்னை அவர்கள் கொண்டு பொகிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. உடலில் இரத்தம் உறைந்தது. அவனுடைய இதயம் இயங்குகிறதா என்று அவனுக்கே தெரியவில்லை.

ஆனால், அவர்கள் வயரால் நாலு போடு போட்டு அதை இயங்கவைத்தார்கள். தோல் பட்டையாய், வரி வரியாய்க் களம்பி இரத்தம் வடிந்தது. செல்லத்தம்பி கெஞ்சினான். குழறி மண்டாடினான். அவர்கள் சிரித்தார்கள். வலி அவனைச் சப்பித் தின்றது.காலில் விழுந்து கெஞ்சினான். நடந்த தெல்லாவற்றையும் சொன்னான்.

ஆனால் அவர்கள் எதையும் ஏற்கத் தயாராகவில்லை. தனக்கு ஆறு பிள்ளைகள். ஒரு கண் தெரியாத மனைவி. அதுவும் வருத்தக்காரி. ஆறு பிள்ளைகளில் ஒன்று வாய் பேசமாட்டாதவன். எல்லாவற்றையும் சொல்லி, தனக்குக் கருணை காட்டும்படி கெஞ்சிக் கேட்டான்.

அவனுடைய அந்தக் கதறலையும் கெஞ்சுதலையும் கேட்டு அவன் அடைக்கப்பட்டிருந்த அந்தக் கற்சுவர்கள் கரைந்தாலும் அவர்களுடைய இதயம் கரையும் போலத் தெரியவில்லை. வரவர நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருந்தன. அதை அவன் உணர்ந்தான். வீட்டு நினைவுகள் அவனைச் சிப்பிலியாட்டின. உழைப்பில்லை. வருமானமில்லை. என்ன பாடுபடுகிறார்களோ என்ற கவலை அவனைத் தின்றது. எதையும் அறிய முடியவில்லை. அவன் இருக்கிறானா இல்லையா, அவனை விடுவார்களா இல்லையா, எதற்காகப் பிடித்தார்கள்? வீட்டுக்காரருக்கு எதுவும் தெரியவில்லை.

அவர்கள் தினமும் இயக்கத்தின் ஒவ்வொரு முகாமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். செல்லத்தம்பியிடம் வந்து காரியம் பார்த்தவர்களே கையை விரித்தார்கள். இல்லையென்றால் ஆட்களைக் கண்டவுன் வெட்டி மறைந்தார்கள். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சிறு ஆறுதலும் கிட்டவில்லை.

இருந்தாற்போல ஒரு நாள் சாமம் ஒரு மணியிருக்கும். இரண்டு இயக்கப் பெடியள் அதிரடியாக வந்து அவனுடைய கூண்டுக்குள்ளிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

டேய், காக்கான்ர மனிசி அவ்வளவுக்கு இனிப்பாளோடா? நீதான் சோனகத்தியை வைச்சிருந்தியாம். காக்காவுக்க மாட்டு யாவாரம் நல்லாத்தான் நடத்தியிருக்கிறாய். இப்ப எங்களுக்கும் விளையாட்டுக் காட்டப்பாக்கிறாய்..சோனிப் பொம்பிளையோட படுக்க உனக்கு வெட்கமில்லையோடா நாயே..! என்று அவர்கள் கத்தினார்கள்.

செல்லத்தம்பி இதை, இப்படியொரு கோணத்தில் கேவலங்கெட்ட கதையை இயக்கப் பெடியள் கதைப்பார்கள் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவன் எதிர்பாராத காரியங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. இன்னும் உயிர் வாழ்வதை விடச் செத்துப் போய்விடலாம் என்று உறுதியாக நம்பினான். ஆனால் அதற்கும் வழியில்லையே. அவர்கள் அதற்கு அனுமதிக்கிறார்களில்லை.

“என்னைச் சுட்டுக் கொல்லுங்கோ. இதெல்லாத்தையும் என்னால தாங்கேலாது“ என்று இரண்டு கைகளையும் எடுத்து அவர்களைக் கும்பிட்டான். குரல் கம்மியது. அந்த இருளில் வெறெதுவும் புலப்படவில்லை.

“ரோசம் வருதாக்கும் தம்பிக்கு“ என்று கேலிப்படுத்திச் சிரித்தார்கள். ஒருவன் நெஞ்சில் உதைத்தான். அந்த ஒடுங்கிய விறாந்தையில் மல்லாக்காக விழுந்தான் செல்லத்தம்பி. கையில் போடப்பட்டிருந்த விலங்கு எதிலோ அடிபட்டு கையை நெரித்தது. வலி உயிரை ஒரு தடவை உறிஞ்சியது. அவனுடய வழுக்கைத் தலையில் மிதித்தான் மற்றவன்.

சரியாக ஆறு மாதமும் மூன்று நாளும். செல்லத்தம்பி ஒரு தேசத்துரோகி என்றும் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவனுடைய படத்தை பத்திரிகை ஒன்று வெளியிட்டு அறிவித்தது. செல்லத்தம்பியின் படம் பத்திரிகையில் வந்த முதல் நாளும் கடைசி நாளும் அது.

கீழே அவன் செய்ததாகவும் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு ஒரு குற்றப் பட்டியல்.

சடலத்தைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை. அவனை அவர்கள் சுட்டார்களா அடித்துக் கொன்றார்களா? சயனைட் கொடுத்தார்களா? நெஞ்சில் ரயர்தான் போட்டு எரித்தார்களா? சரி, கொலையைத்தான் செய்தார்கள் என்றால் அதை எப்போதவது செய்தார்கள் என்று ஒன்றுந்தெரியாது.

இதற்குப் பிறகு செல்லத்தம்பியின் குடும்பத்தை ஊரில் ஒரு மாதிரிப் பார்த்தார்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போனாலும் வாத்திமார் தொடக்கம் அங்கே படிக்கிற பிள்ளைகள் வரையில் தேசத்துரோகியின்ர பிள்ளை என்று சொல்லி ஒரு மாதிரி நடத்தினார்கள்.

இதனால் படிப்பை பாதியில் நிறுத்தினான் செல்லத்தம்பியின் மூத்தவன். மாங்காய் வியாபாரத்துக்கு யாரோடோ கூடப் போனான்.

அந்த மூத்த மகன்தான் இப்போது காயப்பட்டு அலோஸியஸ்க்கு அருகில் படுத்திருக்கிறான். கண்கள் குழிவிழுந்து விட்டன. நிறமும் குறைந்திருந்தான். இவனை எப்போது இயக்கம் போராளியாக்கியது? அவனாக இயக்கப் போராளியாகுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

அலோஸியஸ்க்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் தங்கேஸைப் பார்த்தான்.

“நீங்கள் என்னத்தை நினைக்கிறியள் எண்டு எனக்குத் தெரியுமண்ணை. எங்கள விட்டிடுவாங்கள் எண்டுதான் நினைச்சுக் கொண்டிருந்தம். ஆனால், என்னைப் பிடிச்சிட்டாங்கள்“ என்றான் தங்கேஸ். குரல் விம்மிக் கமறியது.

அலோஸியஸ் தலையை மேலும் கீழுமாக அசைத்தான். விரிக்கப்பட்டிருக்கும் வலையில் ஒருவரும் தப்ப முடியாது என்று தெளிவாகத் தெரிந்தது. அதைவிட, தெரியாத சங்கதி ஒன்று அலோஸியஸ்க்கு இருந்தது.

செல்லத்தம்பியின் குடும்பம் இப்போது தேசத்துரோகி குடும்பமா அல்லது போராளி குடும்பமா என்று.
00

Thursday, November 10, 2011

ஏழாம் அறிவு - படைப்பின் அடிப்படைகளைப் புறக்கணிக்கும் சினிமா


சில காலங்களுக்கு முன்னர் ‘ஆறாந்திணை’ என்று புதியதொரு திணையைப் பற்றிச் சேரன் அறிமுகப்படுத்தினார். தமிழில் அதுவரை ஐந்து திணைகளைப் பற்றியே பேசப்பட்டு வந்தது. புலம்பெயர்ந்து வாழும் புதிய களத்தைச் சேரன் ஆறாந்திணை என்றார். அந்த ஆறாந்திணையின் அனுபவங்களும் அறிகையும் ஒரு வடிவமாகி, இன்று தமிழுடன் இணைந்து விட்டன. அதற்கு முன்னர் தமிழர்களின் வாழ்வியற் பரப்பும் வாழ்வனுபவங்களும் பெரும்பாலும் ஐந்து திணைகளுக்குள்தான் இருந்தன. குறிப்பாகப் பனி விழும் பருவ மற்றும் பிரதேச அனுபவங்கள் முன்னைய தமிழ் வாழ்வில் இருக்கவில்லை. ஆனால், இன்று அந்த அனுபவங்கள் தமிழில் தாராளமாகவே உள்ளன. ஒரு படைப்பாளியின் நுண்ணுணர்கை இதைச் சரியாக முன்னுணர்ந்தது.

இப்பொழுது ஆறறிவு என்று சொல்லப்படுவதற்கு அப்பால், இன்னொரு புதிய அறிகையை ‘ஏழாம் அறிவு’ என்று உணர்த்தும் பாவனையில் பல வகையான முன்னறிவித்தல்கள், விளம்பரப்படுத்தல்களுடன் தமிழ்ச் சினிமா ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பலவும் வந்து கொண்டேயிருக்கின்றன. சில விமர்சனங்கள் சற்று நிதானமானவை. பலதும் உணர்ச்சிகரமானவை. ஒரு நண்பர் சொல்வதைப் போல ‘ஏழாம் அறிவைப் பற்றி ஐந்தறிவுத்தனமாகப் பேசுகிறார்கள்’ பலரும்.

ஏனைய வழமையான தமிழ்ப் படங்களைப் போலவே வியாபார நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ஏழாம் அறிவு. பெரும்பாலான - சாதாரண தமிழ்ச்சினிமா வாய்ப்பாட்டை அப்படியே பேணியுள்ளது ஏழாம் அறிவு. (டூயட்) பாடல்கள், காதல், சண்டைக்காட்சிகள், கொஞ்சம் நகைச்சுவை.... அப்படி வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொள்ளும்போது அதற்குத் தோதாக ஒரு எல்லைவரையில் ‘இன உணர்வு’ என்ற அம்சமும் கலக்கப்பட்டுள்ளது. இந்த ‘இன உணர்வு’ என்ற அம்சம்தான் இங்கே வியாபாரத்துக்கான ஒரு முக்கிய உத்தியாக இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். முருகதாஸ் தமிழ்ச் சூழலை நன்றாகவே விளங்கி வைத்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படம் நல்ல ஆதாரம்.
எதையும் மேலோட்டமாகப் பார்க்கும் இயல்பைக் கொண்;டவர்கள் தமிழர்கள். இன உணர்வு என்று வந்து விட்டாற்போதும் அதற்குப் பிறகு அவர்கள் எதையும் நிதானிக்க மாட்டார்கள். இந்த இன உணர்வைக் கொண்டாடுவதற்காகவே ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இன உணர்வு என்ற விசயத்துக்காக இலவசமாகவே பிரச்சாரம் செய்யும். அதன்மூலம் மேலதிகமான ஆதரவை வழங்கும். எதிராக வருகின்ற விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் தாமாகவே முன்னின்று கட்சி கட்டிக்கொண்டு எதிர்த்து முறியடிக்க முயற்சிக்கும். இந்த நிலையில் படத்தைப் பற்றிய பேச்சுகளும் அறிமுகங்களும் தாராளமாக, தானாகவே நடந்து கொண்டிருக்கும். மேலும் இந்த இன உணர்வு என்ற அம்சம் நிச்சயமாக ஒரு பெருந்தரப்பினரின் அபிமானத்தைப் பெற்றுத் தரும். அது மட்டுமல்ல புலம்பெயர்ந்திருக்கிற ஈழத்தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்தியத்தமிழர்களிடையேயும் இந்த இன உணர்வு என்ற விசயம் பெரிதாக எடுபடும். அவர்கள் தாம் பிறந்த நாட்டுக்கு வெளியே இருப்பதால், சொந்த நாட்டைப் பற்றியும் தமிழரின் சிறப்பைப் பற்றியும் ஏதாவது செய்திகள் வரும்போது அது அவர்களைக் கவர்ந்து விடுகிறது. தங்களுடைய சூழலுக்கு வெளியே – அந்நியச் சூழலில் இருப்பதன் காரணமாக உருவாகியிருக்கும் ஒரு வகையான உளவியல் இது.

நாட்டுக்கு வெளியே இருப்பவர்களிற் பெரும்பாலானவர்களின் உளவியல் இந்தமாதிரித்தான் செயற்படுகிறது என்பதற்கு இணையத்தளங்களிலும் முகப்புத்தகங்களிலும் எழுதப்பட்ட – எழுதப்பட்டு வரும் - கருத்துகள் ஆதாரம்.

ஆகவே இந்த மாதிரியான விசயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்குத் தோதாக இந்தப் படத்தை எடுத்துள்ளார் முருகதாஸ்.

அந்த வகையில் ‘ஏழாம் அறிவு’ இரண்டு நிலைகளிலும் படத்தை உருவாக்கியவர்களுக்கு வெற்றியே. முருகதாஸ் கூட்டணி எதிர்பார்த்ததைப்போல ‘ஏழாம் அறிவு’ தமிழ்ப் பரப்பில் வெற்றிகரமாக அறிமுகமாகியுள்ளது. பொருளாதார ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது.
ஆனால், தமிழ்ப் பரப்பில் இந்தப் படத்தைப் பற்றி நிகழ்த்தப்படும் கொண்டாட்டங்கள் மிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நிகழ்கின்றமை மிகுந்த கவலையையே அளிக்கின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் நமது நண்பர் சொன்னதைப் போல ஐந்தறிவுத்தனமானவையாகவே அமைந்துள்ளன. ஆகவே இந்தப் பத்தி அந்த நிலைமையைப் பற்றியும் ஏழாம் அறிவு திரைப்படத்தின் அடிப்படையைப் பற்றியும் தன்னுடைய பார்வையை முன்வைக்க முயற்சிக்கிறது.

00

ஏழாம் அறிவு ஒரு பக்கத்தில் தமிழர்களின் அறிவையும் வீரத்தையும் பண்பாட்டுச் சிறப்பையும் பேசுகிறது. மறுபக்கத்தில் அத்தகைய வரலாற்றுச் சிறப்பையுடைய தமிழின் நிலையும் தமிழர் வாழ்வும் இன்று வீழ்ந்து பட்டிருக்கிறது என்பதையும், இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இதற்காக அது தமிழரின் வரலாற்றுக் குறிப்பொன்றைப் பின்தொடர்ந்து தனக்கான வடிவத்தை உருவாக்கியுள்ளது.

இந்த அடிப்படையில், தமிழ் நாட்டின் காஞ்சிபுரத்தில் பல்லவ இளவரசனாகிய போதி தர்மர், மருத்துவம், வர்மக்கலை போன்றவற்றில் அசாத்தியமான திறமையைப் பெற்றிருந்தார். இவருடய ஆற்றல் சீனாவரை பரவிப் புகழடைந்திருந்தது. இப்போதும் சீனர்கள் போதி தர்மரை மதித்து வணங்குகின்றனர். அத்தகைய சிறப்பையும் பெருமையையும் கொண்ட தமிழர்கள் இன்று தோற்றுப் போனவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே படத்தின் மையப் பேசுபொருள்.

இன்று இந்தப் படம் வெளிவந்ததற்குப் பிறகு, ஏராளம் கவனக்குறிப்புகள் எழுதப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் போதி தர்மரைப் பற்றி. படம் வலியுறுத்தும் தமிழி உணர்வைப் பற்றி. தமிழ்த் தேசியத்தின் எழுச்சியைப் பற்றி. இத்தகைய கவனக்குறிப்புகளை எழுதத் தூண்டியதில் இந்தப் படத்துக்கும் இயக்குநர் முருகதாஸ_க்கும் ஒது முக்கியத்துவம் உண்டு.
வரலாற்றுணர்வை ஏற்படுத்தியதிலும் வரலாறு பற்றிய அறிவு முக்கியமான ஒன்றென்றும், வரலாற்றில் எண்ணற்ற புதினங்களும் முக்கிய அம்சங்களும் உள்ளன என்றும் கருதும் நிலையை இளைய தலைமுறையினரிடத்திலே ஏற்படுத்த முனைந்ததிலும் முருகதாஸ் கவனத்தைப் பெறுகிறார்.

அதேவேளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு முரண் நீண்டகாலமாகவே உள்ளதென்றும் இனி அது கூர்மையடைக் கூடிய நிலை உண்டென்றும் முருகதாஸ் உணர்த்துகிறார். மேலும் ஈழத்தமிழரின் போராட்டத்தை – புலிகளை ஒடுக்குவதில் தனியே இலங்கை அரசு என்ற ஒரு சக்தி மட்டும் ஈடுபடவில்லை. பல நாடுகள், பல சக்திகள் சம்மந்தப்பட்டிருந்தன என்றும் சொல்கிறார் முருகதாஸ். அவருடைய புரிதல்கள் சரியான பார்வையைக் கொண்டுள்ளன.

ஆனால், அதற்கப்பால், படத்தின் முழு வடிவமானது முருகதாஸ் என்ற கலைஞனைக் குறித்த கேள்விகளையும் ஒரு சினிமா என்ற படைப்பின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கக் கோருகிறது.

‘தமிழ் அறிவையும் வீரத்தையும் இழந்து இன்று வீழ்ந்து பட்டிருக்கிறோம். அண்மையில் இலங்கையில் நடந்த போரிலும் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் வீரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. தமிழ் வீரத்தை மீட்டெடுத்து மீண்டும் எழுச்சிபெறும் தமிழ் வாழ்வையும் வரலாற்றையும் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க முடியும். அதற்கான அடிப்படைகள் வரலாற்றிலும் விஞ்ஞானத்திலும் நிச்சயமாகவே உண்டு’ என்று சொல்லும் இந்தப் படத்தைப் பற்றி மெய்சிலிர்த்துப் பலரும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். பாராட்டுகளைப் பொழிந்து தள்ளுகிறார்கள். படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள் என்று இணைய வழியாகவும் தொலைபேசிகளின் ஊடாகவும் தூண்டற்செயற்பாடுகள் தொடர்கின்றன. முருகதாஸ் தமிழ்த் தேசியத்தின் தூண்களில் ஒருவராக சித்திரிக்கப்படுகிறார்.

ஏழாம் அறிவு மையப்படுத்தும் இந்தக் கருத்தைப் பலரும் பல விதமாகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வெளிப்படுத்தியும் வருகிறார்கள். போதி தர்மனின் கதையைத் தவிர்த்து. பதிலாக சங்ககாலத்திலிருந்து சோழர் காலம் உள்ளடங்கலாக தமிழரின் பொற்காலங்களை ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். (சாண்டில்யனின் ‘கடற்புறா’ தனக்கொரு தூண்டலைத் தந்ததாகவும் அத்தகைய வரலாற்று நூல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டென்றும் விடுதiலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் கூறியிருந்ததை இங்கே நாம் இணைத்துப் பார்ப்பது பொருத்தம்). மேலும் ‘புகழுடைத் தமிழன் பிணியிடை வீழ்ந்து கிடப்பதோ’ என்றவாறாக.

ஆகவே படத்தின் செய்தி ஒன்றும் புதியதல்ல. ஆனால், இந்தக் கருத்தை சற்று வேறு விதமாகக் கொஞ்சம் கவர்ச்சிகரமாக, சினிமா என்ற வெளிப்பாட்டுச் சாதனத்தின் தன்மைக்கேற்ப புதிதாக – மீண்டும் சொல்லியிருக்கிறார் முருகதாஸ். அதற்கு அவர் எடுத்தாண்ட ஆயுதங்களில் ஒன்று வரலாற்றிலிருந்து போதி தர்மர். மற்றும் விஞ்ஞானத்திலிருந்து மரபணுத் தொழிற்பாடு.
மற்றது, கவனத்திற்காக அவர் இலங்கையில் நடந்த போரையும் அங்கே நடந்த அநீதியையும் சாரப்படுத்திச் சொல்லும் விதம்.

‘தமிழன் எல்லா இடத்திலும் அடிவாங்குகிறான். இலங்கையில், தமிழ் வீரத்தை ஒரு நாடு மட்டும் மோதித் தோற்கடிக்கவில்லை. ஒன்பது நாடுகள் சேர்ந்து தோற்கடித்தன’ என்ற மாதிரியான விசயங்கள் இன்றைய நிலையில் தமிழ் மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன. வன்னிப் போரின்போது நடந்த கொடுமைகள் உலகெங்கும் உள்ள தமிழ்மக்களின் மனதில் பெருந்துயரத்தை ஏற்படுத்தியது. அந்த துயர நிலையிலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. பதிலாக அவர்கள் இன்னும் அந்த நிகழ்வுகளின் தாக்கத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சனல் 04 ஐயும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையையும் வரவேற்கிறார்கள். மேலும் போர்க்குற்ற விசாரணையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த நிலையில், படத்தில் பேசப்படும் சமகால ஈழ நிலவரம், தமிழர் நிலவரம் ஆகியவற்றைப் பற்றிய பேச்சு திரையில் வரும்போது அது அதிக கவர்ச்சியைக் கொடுக்கிறது. இதுகூட ஆற்றாமையின் வெளிப்பாடுதான். உள்ளுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் கோபத்துக்கான ஒரு வடிகால்.

ரஜனியின் படங்களில் அவர் பேசுகிற ‘பஞ்ச்’ வசனங்களைப் போல இந்த வசனங்களைச் பேசுகிறார் சூர்யா. ரஜனியின் வசனங்கள் அரசியலில் பாதிப்படைந்தவர்களின் உளவியலை மையப்படுத்தியதாக இருக்கும். அல்லது சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலை மையப்படுத்தியதாக இருக்கும். இந்த உபாயத்தையே முருகதாஸ_ம் பயன்படுத்தியுள்ளார்.
‘இந்த உலகத்துக்கே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள்;’ என்று சொல்வதெல்லாம் உணர்ச்சி வசப்படும் தமிழபிமானிகளின் உச்சியிற் குளிரைக் கொட்டுகிறது. குளிர் நாடுகளில் உள்ளவர்களுக்கு உடம்பிற் சூடேற்றுகிறது. ஆகவே இவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரப்படுத்துகிறார்கள்.

தமிழர்களிடம் சிறப்புகளும் தகுதிகளும் ஏராளம் உள்ளன. செழுமையான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதிற் பிரச்சினையில்லை. இவையெல்லாம் உண்மையே. ஆனால், அதேயளவுக்கு அவர்களிடமும் ஏராளம் குறைபாடுகள் உள்ளன. அந்தக் குறைபாடுகளே தமிழர்களைத் தோற்கடித்துக் கொண்டிருக்கின்றன. இதை ‘ஏழாம் அறிவு’ புலப்படுத்தியிருக்குமானால், அதுவே பயனுடையதாக இருந்திருக்கும். அது ஓரளவுக்கு புதிய சேதியாகவும் அவசியமான ஒன்றாகவும் தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்களுக்குப் பிரயோசனமாகவும் அமையும். அல்லது ஏழாம் அறிவை முன்வைத்து இந்த விசயங்களைப் பேசியிருந்தாலும் வரவேற்றிருக்கலாம். ஆனால், அப்படியெதுவும் நிகழவில்லை. அப்படி முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை எதிர் மனோபாவத்தோடு அணுகும்போக்கே தொடர்கிறது. இதுவே தமிழ்ச் சூழலில் நிலவும் வீழ்ச்சிக்கான கருவறைச் செயற்பாடாகும்.
ஆகவே இந்த அகப் புற நிலைமையில் ஏழாம் அறிவைக் குறித்து மேலும் பேசும்போது இது தொடர்பாக நாம் சில கேள்விகளை இங்கே முன்வைக்கலாம்.

1. இந்தப் படத்தைப் பார்க்கும் பிற மொழி பேசும் இந்தியர்களின் நிலைப்பாடு என்ன?

2. இந்தப் படத்தைப் பார்க்க நேரும் சீனர்கள் எத்தகைய மனநிலையைப் பெறுவர்?

3. தமிழர்கள், இந்தியர்கள், சீனர்கள் என்ற பரப்புக்கு வெளியே இந்தப் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையும் புரிதலும் எவ்வாறிருக்கும்?

இந்தப் படம் ஏனைய இந்தியச் சமூகத்தினரையும் விட தமிழர்கள் வீரம் பொருந்தியவர்கள், அறிவிற் சிறந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. சீனாவிற் பவியிருந்த கொள்ளை நோயினால் இந்தியாவுக்கே ஆபத்து வரும் என்று தெரிந்து, அதைக் கட்டுப்படுத்தவே போதி தர்மர் அங்கே செல்கிறார். ஆகவே, தமிழர்கள் அந்தக் காலத்திலேயே இந்தியாவை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கே வரலாற்றில் முதன்மைப் பாத்திரமுண்டு என்று கூறுவது.

அதேவேளை இப்போதும் சீனாவினால் இந்தியாவுக்கு வரவுள்ள ஆபத்தை தமிழர்களே இனங்கண்டு அதை முறியடிக்கிறார்கள். வரலாற்றின் நாயகனான போதி தர்மர் (சூர்யா) வரலாற்றை ஆய்வு செய்யும் தமிழ் மாணவியான ஸ்ருதி ஹாசன், தற்போது இந்த ஆபத்தை முறியடிக்கக்கூடிய நிலையில் போதி தர்மரின் வம்சத்தில் இருக்கும் இளைஞன் (சூர்யா). ஆகவே இந்தியாவைக் காப்பாற்றும் பிரதான பாத்திரத்தை எப்போதும் வகிப்பவர்கள் தமிழர்களே என்ற சித்திரத்தை உருவாக்க முனைதல்.

இது ஏனைய இந்தியர்களைக் கலவரப்படுத்தக் கூடியது. இந்தியப் பண்பாட்டிலும் பிராந்திய வாழ்க்கையிலும் அதனுடைய அரசியல் மற்றும் அறிவியலிலும் பிற சமூகங்களுக்கும் பங்களிப்புகள் உண்டு. ஆனால், தங்களுடைய அத்தகைய பங்களிப்புகளையும் ஆற்றலையும் இந்தப் படம் திட்டமிட்டு மறைப்பதாகவே அவர்கள் உணர்வர். இது அவர்களை நிச்சயமாக எதிர்நிலைக்குக் கொண்டு போகும்.

ஆகவே பிற இந்தியச் சமூகங்களுக்கிடையிலான விரிசல்களையும் முரண்களையும் ஏற்படுத்தக் கூடிய கூறுகளை ஏழாம் அறிவு கொண்டுள்ளது. ஒரு கலைப்படைப்பு கலகத்தை ஏற்படுத்த வல்லது. மனதில் ஏற்படுத்தும் கலகமே எழுச்சிக்கும் தூண்டலுக்கும் வழிசெய்யும். ஆனால், அது முரண்களை ஏற்படுத்தக் கூடாது. முரண்களையும் விரிசல்களையும் உருவாக்குவது கலைஞனுடைய செயற்பாடும் அல்ல. அநீதிக்கு எதிரான குரலும் பதிவும் வேறு. முரண்களை உருவாக்கும் அடிப்படை வேறு. இரண்டையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே முருகதாஸ் பிளஸ் ஏழாம் அறிவு ஆகிய இரண்டு பாத்திரங்களும் இந்தியச் சமூகங்களிடையேயும் முரண்களை உருவாக்குகின்றன. அதேபோல சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரண்களைப் பகை உணர்வுடன் நோக்குவதன் மூலமாக இருக்கும் முரண்கள் மேலும் கூர்மைப்படுத்தப்படுகின்றன.

எனவே ஒரு கலை ஊடகம் என்ற வகையில் ஏழாம் அறிவின் தூண்டல் தமிழர்களை அடிப்படை வாதத்தை நோக்கித் தள்ளும் அதேவேளை, பிற சமூகங்களை எதிர்நிலைக்குத் தள்ளுவதால், படைப்பின் அடிப்படையில் இருந்து வீழ்ச்சியடைகிறது.

இதற்கு மேலும் ஆதாரமாக நாம் முன்வைப்பது, இந்தப் படம் கூறும் பகுதிகளையே.
போதி தர்மன் காலத்தில் இருந்து இன்றுவரையிலும் சீனர்கள் அறிவிற் குறைந்தவர்கள் என்றும் சுயநலக்காரர்கள் என்றும் தங்களின் நலனுக்காக இந்தியாவை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள் என்றும் காட்டப்படுகிறது.

போதி தர்மர் சீனாவுக்குப் போகும்போது சீனக்கிராமமொன்றில் மக்களின் வாழ்க்கை மிக மோசமாக உள்ளது. அவர்கள் அங்கே நிலவும் ஒரு கொடிய நோய்க்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். அந்த நோயிலிருந்து மீள்வதற்கான வழியை சீனாவில் யாரும் காட்டவில்லை. அதேவேளை அங்கே செல்லும் போதி தர்மனின் வருகை சீனாவுக்கு ஆபத்தானது என்று அங்குள்ள ஞானிகளும் சோதிடர்களும் சொல்கின்றனர். இந்தக் கூற்றை நம்பிய சீன மக்கள் போதி தர்மரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டு அவரை வெறுக்கின்றனர்.

ஆனாலும் தன்னுடைய மருத்துவ அறிவினால் அந்த நோயைக் கட்டுப்படுத்துகிறார் போதி தர்மர். அதற்குப் பிறகும் அந்த மக்கள் போதி தர்மரைப்பற்றிப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் அந்த மக்களை விட்டு அவர் வெளியேறுகிறார். தான் வெளியேறும்போது அந்தக் கிராமத்துக்கு இன்னொரு ஆபத்து வரப்போகிறது என்பதை போதி தர்மர் சொல்கிறார். அது மனிதர்களால் வருகின்ற ஆபத்து. வேற்றாள்களின் படையெடுப்பால் வரும் ஆபத்து.
அந்த ஆபத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அந்தக் கிராமத்திற்கில்லை. அதனால் வேற்றாள்களினால் அந்தக் கிராமம் சிதைக்கப்படுகிறது. இந்த நிலையில் போதி தர்மரே தன்னுடைய வர்மக்கலையின் மூலமாக பெற்றுக்கொண்ட தற்காப்பு மற்றும் போரிடும் ஆற்றலின் மூலம் அந்த ஆபத்தைத் தனியொருவராக நின்று முறியடிக்கிறார். அதற்குப் பிறகே அந்த மக்களுக்கு போதி தர்மரைப் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. பிறகு அவர்கள் அவரை நேசிக்கின்றனர். அவரிடமிருந்து அவர்கள் மருத்துவத்தையும் வர்மக்கலையையும் கற்றுக்கொள்கின்றனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் போதி தர்மர் இந்தியாவுக்கு – காஞ்சிபுரத்துக்குத் திரும்ப வேண்டியேற்படுகிறது. அதற்கு அவர் ஆயத்தமாகிறார். ஆனால் போதி தர்மர் அங்கிருந்து வெளியேறினால் தமக்கு ஆபத்துகள் நேரிடும். நோயோ பிற நெருக்கடிகளோ வராமல் தடுக்கும் வல்லமையுள்ள அவரை எந்த நிலையிலும் வெளியேறுவதற்கு அனுமதிக்க முடியாது என்று அங்குள்ள முதியோர் சொல்கின்றனர். இதனையடுத்து போதி தர்மருக்கு விசம் கொடுத்து அவரைக் கொல்ல முயற்சி செய்கின்றனர். போதி தர்மர் இறந்தால், அவருடைய சடலத்தை தங்களுடைய மண்ணிலே புதைத்து விடலாம். அப்படி அந்தச் சடலம் புதைக்கப்பட்டால் தமக்கு எத்தகைய தீங்குகளும் நேராது என்ற நம்பிக்கை சீனர்களுக்கு.

ஆகவே போதி தர்மருக்கு நஞ்சூட்டப்படுகிறது. ஆனால், தனக்கு நஞ்சைத் தருகிறார்கள் என்பதைப் போதி தர்மர் அறிந்து விடுகிறார். ஆனாலும் அதைத் தெரிந்து கொண்டே அவர் அந்த நஞ்சினை அருந்தி இறந்து விடுகிறார். அவருடைய சடலம் அங்கே புதைக்கப்படுகிறது.
என்ன அபத்தம் இது?

சீனர்கள் மூடர்களாகவும் வஞ்சகக்காரர்களாகவும் இருக்கிறார்கள். தங்களுடைய சுய நன்மைக்காகத் தங்களைக் காப்பாற்றியவருக்கே நஞ்சூட்டும் காரியத்தைச் செய்யும் ஒரு மக்கட்கூட்டமே சீனச் சமுதாயம் என்று முருகதாஸ் சொல்கிறார். அதை ஏனைய தமிழ்ப் பெருங்குடி மக்கள் உளம் பூரித்து வரவேற்கிறார்கள். பொதுவாக அநேகமான இந்தியவர்களுக்கும் சீனாவைப் பற்றி இப்படிச் சித்திரிப்பதில் மகிழ்ச்சி ஏற்படலாம். ஏனெனில் பாகிஸ்தானையும் சீனாவையும் எதிர்ப்பதே இந்திய அரசியலின் பொது அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது.

அத்துடன் இன்று வளர்ச்சியடைந்து வரும் சீனப் பொருளாதாரமும் சீன விஸ்தரிப்பு நிலையும் இந்தியாவுக்கான அச்சுறுத்தல் என்ற வகையிலும் எதிர்காலத்தில் சீனாவும் இந்தியாவும் பொருதிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கருதப்படும் நிலையிலும் சீனாவைப் பற்றிய முருகதாஸின் சித்திரிப்பு விரும்பப்படும்.

இத்தகைய சித்திரிப்பு முறைகள் அல்லது காண்பித்தல்கள் அமெரிக்க ஹொலிவுட் படங்களிலும் தாராளமாக இருப்பதுண்டு. எல்லாவற்றிலும் எப்பொழுதும் வல்லவர்கள் - விண்ணர்கள், அமெரிக்கர்கள் என்ற மாதிரி அந்தப் படங்கள் இருக்கும். ஏறக்குறைய இதேபோன்ற படங்களை அர்ஜூனும் விஜயகாந்தும் தாராளமாகவே நடித்திருக்கிறார்கள். இந்தியாவைக் காட்டிக்கொடுக்கும் துரோகப் பாத்திரங்களில் நடிக்காத வில்லன் நடிகர்களே தமிழில் இல்லை எனலாம். இங்கும் அதே கதைதான்.

இதை விட தமிழ்ப் பொது வெளியில் நிலவும் அரசியற் புனைவுகளுக்கு நிகராக இந்திய, சீனப் பிராந்தியத்தில் மிகப் புத்திபூர்வமாகவும் வீரத்தோடும் இருந்தவர்கள் தமிழர்களே என்பதைப் படம் வலியுறுத்துகிறது.

அவ்வாறு வலியுறுத்துவதாயின் ஏனைய இனத்தவரையும் விடத் ‘தமிழர்கள் மேலோங்கிகள்’ என்ற பொருளை இது மறைமுகமாகச் சொல்கிறது. இது அடிப்படைவாதத்தின் மூலக்கூறாகும். பிற சமூகங்களைக் கீழிறக்கிச் சுருக்கியும் தம்மை மேல்நிலைப்படுத்தி விரித்தும் பேசும் எவரும் அடிப்படைவாதத்தின் கூறுகளையே கொண்டிருப்பர்.

தமிழ் அரசியலிலும் அதனுடைய பொதுச் சமூக உளவியலிலும் ஊடுருவிப் பரந்திருக்கும் கொடிய நோய் இது. இந்த நோயே தமிழர்களைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் தங்களை விட ஏனையவர்கள் கீழானவர்கள், சிறியர்கள் என்ற சொல்லும்போதெல்லாம் ஏனையவர்கள் அவர்களை விட்டுத் தூர விலகி நிற்கின்றனர். பல வேளைகளிலும் எதிர்நிலைக்குச் சென்று விடுகின்றனர்.

முருகதாஸ் சொல்ல வருவதைப் போல அல்லது படத்தில் சூர்யா சொல்வதைப் போல ஒன்பது நாடுகள் சேர்ந்து மட்டும் தமிழர்களைத் தோற்கடிக்கவில்லை. தமிழர்களிடம் உள்ள இந்தக் குறைபாடும் சேர்ந்தே அவர்களைத் தோற்கடிக்கிறது. தங்களைப் பற்றிய அதீதமான புனைவுகளும் மிகை எண்ணங்களு ம் சேர்ந்தே அவர்களைத் தோற்கடிக்கிறது. ஈழத்தில் நடந்த போராட்டத்தின் போதும் விடுதலைப் புலிகளின் மிக வலிமையான போராட்டத்தை அந்தப் போராட்டத்திலிருந்து பலவீனமான கூறுகளே தோற்கடித்தன. ஏனெனில் முரண்களை உருவாக்குவதன் மூலம் பகைமையைப் பெருக்கி, பகைவர்களையும் உருவாக்கும் ஒரு பொறிமுறை தமிழ்ச் சிந்தனையில் பதிந்துள்ளது. இதுவே இந்தப் படத்திலும் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. படத்தைப் பற்றிய பெரும்பாலான ஆதரவுக் கருத்துகளிலும் மையங்கொண்டுள்ளது.

ஆகவேதான் ஏழாம் அறிவைப் பார்க்கும் பிற இந்தியச் சமூகத்தினரும் சீனர்களும் தமிழர்களைப் பற்றி, தமிழர்களின் சிந்தனையைப் பற்றி நிச்சயமாக எதிர்நிலைப் புரிதலையே கொள்வர் என்று கூறுகிறேன்.

00

அடுத்தது இந்தப் படம் தமிழ்த் தேசிய எழுச்சியை ஒரு கோணத்திலும் இந்திய தேசிய எண்ணப்பாங்கை இன்னொரு கோணத்திலும் கொண்டுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். இதுவும் ஒரு வகையான வியாபாரத் தந்திரமாக இருக்கலாமா? என்று யோசிக்க வேண்டியுள்ளது.

போதி தர்மர், தமிழர் வீரம், தமிழரின் அறிவியல், அவர்களுடைய வரலாறு, தமிழரின் சமகால நிலைவரங்கள், அவர்களுடைய உணர்வுகள் போன்றவற்றைக் குவியப்படுத்திக் காண்பிப்பதன் வழியாக தமிழ்த் தேசிய சக்திகளைக் கவர்ந்திழுத்தல்.

இந்தியாவுக்கு வரும் எதிர்ப்புகளையும் ஆபத்துகளையும் முறியடிப்பதில் எப்பொழுதும் உள்ள அக்கறைகள் என்ற வகையில் இந்தியத் தேசிய சக்திகளையும் கவனப்படுத்துதல்.

ஆகவே, முருகதாஸ் ஏழாம் அறிவின் மூலமாக தான் மையப்படுத்திய இலக்கை அடைந்துள்ளார். ஆனால், ஏழாம் அறிவு என்ற சினிமா தமிழ்ச் சமூகத்துக்கு எதிர்நிலை அம்சங்களையே ஏற்படுத்தியுள்ளது. மற்றும்படி படத்தின் ஏனைய அம்சங்களான விசயங்களில் அவரவர் ரசனைக்கு ஏற்றவாறான கலவைகள் இருக்கின்றன. பாடல்கள், இசை, காதல், சண்டை, காட்சிப்படுத்தப்பட்ட புதிய களங்கள் மற்றும் படத்தொகுப்பு, கமெரா எனத் தொழில் நுட்ப அம்சங்கள் வரையில்.

00

Monday, November 7, 2011

கருணாகரனின் "எதுமல்ல எதுவும்..." - பூங்குழலி வீரன்





இலங்கைப் படைப்பாளிகளைப் பற்றிப் பேசும் இரண்டாவது தொடர் இது... கருணாகரனின் 'எதுமல்ல எதுவும்' என்ற கவிதைத் தொகுப்போடு சுவடுகளின் பயணம் தொடர்கின்றது.

கருணாகரன் இலங்கையின் வடக்கே உள்ள இயக்கச்சி என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கைப் போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து அகதியாகவே அலைந்ததாக அவரது கவிதைத் தொகுப்பிலுள்ள குறிப்பொன்றில் இருக்கின்றது. இதுவரையில் 'ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்', 'ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்', 'பலியாடு' என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

எதுமற்ற ஒரு எல்லையில் நின்று கொண்டுதான் மனிதன் சுவாசிக்கிறான். எல்லாம் இருப்பதாக அவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் தோற்றப்பாடுகளும், அந்த தோற்றப்பாடுகளுக்காக உறங்கி எழுந்து போராட்டங்களோடு அவன் வாழும் வாழ்வு எதுமில்லாத ஓர் புள்ளியில் ஒரு நாள் மரித்து போகின்றது. இறப்பு நிகழும் அந்த ஒரு நொடியில் மட்டும் எதுவுமற்றதை உணரும் மனிதன் மீண்டும் எல்லாவற்றையும் சுமந்தபடி வாழ்வைத் தொடர்கின்றான்.

எவ்வளவுதான் ஊரிலும்
நகரத்திலும் இருந்தாலும்
குரங்குகளைக் காட்டுப் பிராணியென்றே சொல்கிறார்கள்.
நகரத்துப் பழக்கங்களில்
குரங்குகளுக்கு ஈடுபாடிருந்தாலும்
அவை காட்டின் வாசனையோடேயே இருக்கின்றன.

இயல்புநிலை வாழ்வின் வாசம் இதுதான். எங்கு தோன்றியதோ அந்த இடத்தின் இயல்புநிலையை தன்னோடு சுமந்து வரும் வாழ்வியல் இயற்கை. தோட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து நகர்களில் நகர்களில் குடியமர்ந்தாலும் தோட்டத்தின் வாசனை மாறாத வாழ்தலின் பொருள். அகதியாய் அலைந்து, சிலவேளை புலம்பெயர்ந்த நாட்டில் சுகவாழ்வு வாழ்ந்தாலும் தாய்மண் என்றவுடன் எங்கிருந்தோ தோன்றும் வார்த்தைகளற்ற உணர்வு. பட்டணக்காரனாய் பகட்டாய் திரிந்தாலும் மிக முக்கிய தருணங்களில் எட்டிப்பார்க்கும் பழமை உணர்வு. இப்படி எண்ணற்ற உணர்வுகளில் இயல்புநிலை வாழ்வின் வாசத்தைக் காட்டிவிடலாம்.

இந்தப் பறவை எங்கு இறங்கக் கூடும்
தீர்மானங்களேதுமிருக்குமா அதற்கு
எந்தக் கணத்தில்
இங்கிருந்து
இனி
செல்லக்கூடும்
அது
பறத்தலில் சுவாரஸ்யம்
பறக்கவைத்திருக்குமா
இல்லை மிகுந்திருக்குமா
பறந்தே தீரவேணுமென்ற சலிப்பு

இந்த வாழ்வு எந்தப் புள்ளியில் முடியக் கூடும்? முடிகிற தருணத்தை நாம் உணர முடியுமா? என்று எந்த கணத்தில் நமது உடலிலிருந்து உயிர் பிரிந்து போகக் கூடும்? எப்படி எண்ணற்ற விடைகாண முடியா கேள்விகள் நம்மைச் சுற்றி மிதந்தபடியே இருக்கின்றன. பறக்கத் தொடங்கும் ஒரு பறவைக்குச் சென்று சேர வேண்டிய இடம் குறித்த தீர்மானம் பெரிதாய் இருக்கமுடியாது. அதன் தேடல் என்பது உணவாகவும் சிலவேளை துணை தேடுதலாகவும் இருக்கும் பட்சத்தில் அதன் தேடல் பரந்துபட்டதாக இருக்கும். இந்த இடத்தில் உணவு கிடைக்கலாம் என பறவை எண்ணும் இடத்தில் அது கீழிறங்கலாம். மனித வாழ்வும் இதற்கொப்பவே இருப்பதாக நாம் உணரலாம். ஒரு புள்ளியில் வாழ்வைத் தொடங்கும் நாம் நடக்கத் தொடங்குகிறோம். வழியில் ஏதும் வாய்ப்புகள் கிடைத்தால் அதைப் பற்றிக் கொள்கிறோம். அந்த வாய்ப்போடு பயணிக்கிறோம். வழியில் பல காரணங்களுக்காக பாதைகள் மாறிப் போகின்றன. தீர்மானங்களோடு வாழ்பவர்கள் மீண்டும் தங்களைச் சரிப்படுத்திக் கொண்டு பயணிக்கின்றனர். அப்படி இல்லாதவர்கள் காலம் வழியில் மறுப்பேதுமின்றி பயணித்தபடியே இருக்கின்றனர்.

வாசலில் தொங்கும் பூட்டு உறுத்துகிறது
யார் மீது நம்பிக்கை கொள்வதென
எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்
அதன் அடையாளத்தை மீறி
செல்ல முடியவில்லை
எந்த வீட்டிலும்
தாராளமாக.

காடுகளில் திரிந்து இதுதான் தன் நிலம் என்ற அடையாளம் ஏதுமின்றி சுதந்திரமாய் வாழ்ந்தவன் மனிதன். குகைகளின் கதவுகளில் பூட்டுகள் தொங்கியதாக நான் எங்கும் படித்ததில்லை. நாகரிக வளர்ச்சி மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றிற்கும் அச்சப்படும் ஒரு நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம். நடந்து செல்லும் போது பக்கத்தில் யாராவது நடந்து வந்தால் கூட திருடனாய் இருக்குமோ என்ற எண்ணமே முதலில் தலைதூக்கி பார்க்கின்றது. சில வேளை அந்த தொடர்பில் தொலைந்துபோன நமது உறவுகளாக கூட இருக்கலாம். ஆனால், இதற்காக யாரையும் குறைகூற முடியாது. நிகழ்கால வாழ்வின் உண்மை நிலை இப்படிதான் கசந்து கொண்டிருக்கிறது. பூட்டுகளின் மீது வைக்கும் நம்பிக்கையை நம்மால் எப்போதுமே சக மனிதனொருவனின் மீது வைக்க முடிவதில்லை.

போரின் விதி
தன் வலிமையை ஊன்றிய போதில்
துண்டிக்கப்பட்ட விரலுக்காக
இறுதி மரியாதையை எங்ஙனம் செய்தல் கூடும்?

இலங்கை எழுத்தாளர்களிடமிருந்து பிரித்தெடுக்க முடியாத அவர்கள் கடந்து வந்த போரின் வலி. அவர்களின் படைப்புகளில் தவறாமல் பதிவு செய்யப்பட்டுவிடும் இந்த காயத்தை நாம் எப்படி உணர்கிறோம்? போரின் கொடுமை உயிர்களைப் பலி எடுத்துவிடுகின்றது. சொந்த உறவுகள் கண்ணெதிரில் செத்து விழும்போது அந்த கொடுமை பிரித்தெடுக்க முடியாத ஒன்றாக நினைவேட்டின் பதிவுகள் இடம்பிடித்து விடுகின்றது. அந்த பதிவினை யாராலும் அழித்துவிட முடியாது. பல்வேறு வடிவங்களில் அந்த பதிவு இடம்பெற்றபடியே இருக்கும்.

இரவு
ஆழ்ந்து உறங்கிய குழந்தைகளைச் சுற்றி
கனவு முட்டைகள் மிதந்து கொண்டிருந்தன.
காலையில்
எழுந்த குழந்தை
பள்ளிப் பையில் அடைந்து கொண்டிருந்தான்
புத்தங்களுக்கிடையிலும் குறிப்பேடுகளிலும்
திணறிக்கொண்டிருக்கும்
பதற்றத்தையும் நெருக்கடியையும்.
கனவு முட்டைகள் நொறுங்கிக் கிடந்தன வெளியே.

குழந்தைத் தனம் மறுக்கப்பட்ட குழந்தைகள் குறித்த கவிதை இது. மிக அதிகாலையின் எழுப்பபட்டு புத்தகப்பையைச் சுமந்து கொண்டு பள்ளிக்குச் செல்லும் மூன்று வயது குழந்தைக்கு என்ன கற்பனைகள் தோன்றக்கூடும்? சிறு குழந்தைகளுக்கு வீடு சார்ந்த கல்வியே உகந்தது. மழலை மொழி மாறாமல் பேசும் அவர்களின் குரல் வீட்டுச் சுவர்களில் எதிரொலிக்க வேண்டும். ஆனால், அவர்களின் குரல்வளை நசுக்கப்பட்டு, ஒரு அந்நிய தேசத்தில் கண்களில் மருட்சியோடு இன்றைய குழந்தைகளின் வாழ்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. யாரிடமும் கேட்பதற்கும் சொல்வதற்கும் தைரியமின்றி குழந்தைகளுக்குள்ளாகவே அவர்களின் கற்பனைகளும் கனவுகளும் புதைக்கப்பட்டு விட்டன. வேலைக்குச் செல்லும் அவசரத்தில் உறக்கம் கலையாத குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச் செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. குழந்தைகளின் கதைகளையும் கேள்விகளையும் கேட்பதற்கும் பதில் சொல்வதற்கும் நமக்கு பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருப்பதில்லை. பேசாமல் இருக்கும்படி சொல்லிச் சொல்லியே குழந்தைகளை நாமே காயடித்துவிடுகிறோம்.

அவனுடைய பயணம்
அன்று
நிகழமறுத்து
எங்கோ தங்கிவிட்டது.

எல்லாரும் சொல்வதுதான். நாமும் சொல்கிறோம். எல்லோரும் செய்வதுதான். நாமும் செய்கிறோம். நிகழமறுக்கும் எல்லா நிகழ்வுகளையும் மறுக்க முடியாமல் அதனை மீண்டும் நிகழ வைக்க முயற்சித்தபடியே இருக்கிறோம்.

கருணாகரனின் கவிதைகள் ஒரு மெல்லிய சிலிர்ப்பை என்னுள் நிகழ்த்தி இருக்கின்றது. சொற்களின் கோர்வை, அழகு, அலங்காரம் என்பதைத் தாண்டியது ஒரு வீரியத்தோடு அவரின் கவிதைகள் வெளிப்படுகின்றது. புதிதாய் கவிதை எழுதத்தொடங்கும் படைப்பாளர்கள் அவரின் கவிதைப் பக்கங்களைச் சந்தேகமின்றி புரட்டிப் பார்க்கலாம்.

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்


காலையின் ஒலிகளை
கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போகும்
பறவைகளுக்குத் தெரிவதில்லை
மாலைச் சூரியனின் அந்திம ஒளியில்
எனது மாபெருங் கவிதைகளிலும்
குருதி படிந்து போவதை.’

(செத்தவனின் பிம்பமான நான்)

‘தெரு மரங்கள்
சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள்
நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன.’

(மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு)

‘ஒரு கத்தியிலோ
உடைந்த கண்ணாடித்துண்டுகளிலோ
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ
வெட்டியெறிந்த நகத்துண்டுகளிலோ
எல்லாவற்றிலும்
ஒட்டியிருக்கிறது மரணத்தின் நெடி’

(சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்)

‘மகா ஜனங்கள் அழுதார்கள்
ஆரசனின்
தூசி படர்ந்த சப்பாத்துக்களின் கீழே
ஆயிரமாயிரம் கபாலங்கள்’

(மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)

சித்தாந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘துரத்தும் நிழல்களின் யுகம்’ நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றில் உள்ள அடிகள் இவை. முப்பது கவிதைகளையுடைய இந்த நூலில் பெரும்பாலானவையும் யுத்தக் கவிதைகள் அல்லது யுத்தம் பற்றிய கவிதைகள். அல்லது சித்தாந்தனின் வாழ்க்கைக் கவிதைகளாகவேயுள்ளன. இந்தக் கவிதைகளிலுள்ள பெரும்பாலான அடிகளிலும் யுத்தத்தின் உக்கிரம், சனங்களின் அவலம், இரத்தத்தின் நெடில், வாழ்க்கையின் இழப்பு, அச்சத்தின் பயங்கரம், காலத்தின் துயர் ஆகியனவே இருக்கின்றன. ஆகவே இது ஒரு யுத்தக் கவிதைகளின் தொகுதியாகவே நமது மனதில் பதிவாகின்றது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழக்கவிதைகள் விடுதலை வேட்கையையும், அந்த வேட்கையுடனான போராட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் இப்போது எழுதப்படும் கவிதைகள் யுத்தத்தின் கொடுமையை, யுத்தத்தின்hல் பாதிகக்கப்பட்ட சனங்களின் அவலத்தை, யுத்தப் பிரபுக்களின் பயங்கர யுகத்தைப் பேசுபவனவாக உள்ளன. இது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம். குhலம் எப்படி உருத்திரிந்திருக்கிறது என்பதற்கான சாட்சியமாக இந்தக் கால வெளியின்; படைப்புகளே இருக்கின்றன. கடந்த முப்பதாண்டு கால ஈழ அரசியற் செயற்பாடுகளின் தீவிரம் தவிர்க்க முடியாமல், எல்லாத் தளங்களிலும் எல்லா அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அரசியல் சாதாரணமானதாக இருக்கவில்லை என்பதே இதன் பொருள்.

கடந்த முப்பதாண்டு கால அரசியல் என்பது (1980-2010 வரையுமானது) யுத்த அரசியல் அல்லது ஆயுதந்தாங்கிய அரசியல், பயங்கரவாத அரசியல் அல்லது ஜனநாயக மறுப்பு அரசியலாகவே இருந்துள்ளது. ஆனால் இதைச் சனங்கள் விரும்பவும் இல்லை: எதிர்பார்க்கவும் இல்லை: ஏற்கவுமில்லை. ஆனால் இதை எதிர்க்க முடியாமல் எதிர்க்க திராணியற்ற நிலையில் அவர்கள் திணறினர். ஆப்படி அவர்கள் ஆக்கப்பட்டிருந்தனர்.

சித்தாந்தனின் கவிதைகள் பெரும்பாலும் இந்தப் பின் புலத்தையே, இந்த உண்மைகளையே சொல்கின்றன. குறிப்பாக அதிகாரத்திற்கெதிரான குரலாக, அதிகாரச் சூழலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமலும் அதேவேளை அது தொடர்பான எச்சரிக்கையோடடும் உள்ள நிலைமையில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. எனவே இவை தவிர்க்க முடியாமல் தீவிர அரசியற் கவிதைகளாகவே இருக்கின்றன. இந்தத் தீவிரம் என்பது சீரியஸ் என்ற அர்த்தத்தையுடையது.

சித்ததாந்தனின் கவிதைகளிலுள்ள முக்கிய அம்சம் அல்லது சிறப் பென்பது அவரின் வெளிப்பாடாகும். வஸீகரமான மொழிதல், மொழியைக் கையாழ்வதிலுள்ள ஆற்றல், நுட்பமான சித்திப்புக்கள், தீவிரத் தன்மை கொள்ளும் கொந்தளிப்பு இந்த மாதிரியான வெளிப்பாட்டாற்றல் நமது சூழலில் இரண்டு கவிஞர்களிடம் இருக்கின்றன. ஒன்று சித்தாந்தனிடம் இன்னொன்று எஸ்போஸ் என்ற சந்திரபோஸ் சுதாகரிடம் இதைத் தவிர்த்து இன்னொருவரை அடையாளங் காணுவதெனில் அது தானா விஷ்ணு எனலாம் (தானா விஷ்ணுவின் அண்மைய கவிதைகள்)

முக்கியமாக இவர்கள் அதிகாரத்திற்கு ஏதிரானவர்கள். அதிகாரமே இவர்களுக்குப் பிரச்சினை. அதுவும் சகிக்க முடியாப் பிரச்சினை. எனவே அந்தப் பிரச்சினை உருவாக்கும் சினத்திலிருந்து அந்தச் சினம் உண்டாக்கும் கொந்தளிப்பிலிருந்தே இவர்களுடைய கவிதைகள் உருவாகின்றன.அவ்வாறு உருவாகும் கவிதைகளுக்கான மொழியும்கூட அந்தச் சூழலின், அந்த நிலைமைகளின் மொழிதான்.

நெருக்கடிக் காலத்தின் மொழிக்கு எப்போதும் கடும் வீச்சும் சூடும் இருக்கும். தமிழகத்தில் இதற்குச் சிறந்த உதாரணம் ஆத்மாநாம், சிரியாவில் நிஸாக் கப்பானி, பலஸ்தினத்தில் மஹ்முத் தர்வீஸ், றிஷீட் ஹுசைன், சமீஹ் அல்காசிம் போன்ற பலர் இன்னும் ஆபிரிக்காவில் கேபிரியேல் ஒகாரா, டேவிட் டியோப், கிறிஸ்தோபர் ஒகிக்போ, செங்கோர், க்வெஸிப்றூ, டெனிஸ்ப் நூற்றஸ் என்று பல அடையாளங்களுண்டு.

சித்தாந்தன் தன்னுடைய காலத்திலன் பயங்கரங்களையும் அவலங்களையும் அச்சுறுத்தல்களையும் சொல்கிறார். ஓன்று இவை குறித்த வெளிப்பாடு, அடுத்தது இவற்றுக்கான எதிர்வினை. ஆகவே பயங்கர நிலை, துயரம், அச்சுறுத்தல்கள் பற்றிய பதிவாகவும் இவற்றுக்கெதிரான எதிர்ப்புக் குரலாகவும் இந்தக் கவிதைகள் இருக்கின்றன.

‘எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக் கொண்டு
இராணுவ வாகனங்கள் செல்கின்றன’

(தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்)

இது ஒரு சூழ்நிலையின் பதிவு. உண்மை யதார்த்தம் இந்தக் கவிதை இந்தச் சூழலை

‘குழந்தைகளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத் தொடங்கிவிட்டன’

என மேலும் விவரித்துச் செல்லும் இந்தக் கவிதை சிறுவர்களின் உலகம் பறிக்கப்பட்டதை - சிதைக்கப்பட்டதை வெளிப்படுத்துகின்றது. எளிமையாக

‘சுண்டல்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
‘ஐஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத் திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை
……………………………….
இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய்ப் படிந்திருக்கின்றன’

என்கிறது இங்கே பெளிப்படையாக ஒரு முரண் தென்படுகின்றது. சிறுவர்கள் நடமாடுவதற்கு அச்சுறுத்தலாக இருக்கம் தெருவில் ஏனையவர்களினதும ஏனையவற்றினதும் நடமாட்டம் இருக்கிறது. வண்டிகள் ஓடுகின்றன, சுண்டல்க்காரன்,ஐஸ்பழ வியாபாரிகள் எல்லோரும் திரிகிறார்கள். ஆனால் சிறுவர்கள் இல்லை. இது முரண் அல்ல. இதுதான் உண்மை, யதார்த்தம் என்று சொன்னோமே அது.

‘விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்குக் காவு கொடுத்த
தாயின் ஒப்பாரி’

குழந்தைகள் தெருவுக்கு வர முடியாதபோது எப்படி நிகழும் தெருவில் இராணுவ வண்டியின் கீழ் நிகழும் மரணம்? துவிர இதற்கு முதல் அடிகள் இப்படி அமைகின்றன. ‘குழந்தைகளின் சுவடுகள் அழிந்த தெருக்களில் இராணுவத் தடங்கள் பெருகிக் கிடக்கின்றன’ என

ஆனாலும் சித்தாந்தனின் கவிதைகளின் வெளிப்பாட்டின் நவீனத்துவங்களைக் கொண்டு, நுண்ணம்சங்களையும் துலக்குகின்றன.

‘காலம்
ஒரு கனியாக வாய்க்கவில்லை நமக்கு
அழுகலின் மணம் எம் தூக்கத்தை விரட்டுகிறது
……………………………
ஒரு கனியை
எம்பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமானால்
ஆத்மார்த்தமான அந்தக் கணத்தில்
பறவைகளுக்கு மேலும் ஒரு சோடிச் சிறகுகளைப்
பரிசளித்த மகிழ்வில் திளைப்போம்’

(மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு)

இப்படிக் கவித்துவங்கள் கூடிவரும் இடங்கள் அதிகம். நம் காலத்தின் முக்கியமான கவிஞர்களில்_ கவியாளுமைகளில் சித்தாந்தன் முக்கியமானவர். அவர் இப்படி முதன்மை அடைவது அவருடைய வெளிப்பாட்டினாலும், அவர் கொண்டிருக்கும் கலக மனத்தினாலுமே. குறிப்பாக சனங்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதே சித்தாந்தனின் சிறப்பு. அதுவே அவருடைய அடையாளம். சனங்களில் ஒருவராக இருப்பதன் மூலம் இந்த அடையாளமும் இந்த அடையாளத்திற்குரிய மனநிலையும் அவரை வந்தடைகின்றன.

இல்லையென்றால்,

‘எல்லப் பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்’
(கடவுளரின் நகரங்களில் வாழுதல்)

என்று எப்படி எழுத முடியும்.

சித்தாந்தன் எந்தத் தரப்பையும் ஆதரிக்கவுமில்லை, நியாயப்படுத்தவுமில்லை. அவர் நம்பிக்கை கொள்வதற்கு எந்தச் சமிக்ஞைகளும் தெரியவுமில்லை. ஆனால் வாழ்க்கை நம்பிக்கையற்று இருக்கவும் முடியாது. அவருடைய நம்பிக்கைகள் சகமனிதர்களிடம் வரலாற்றிடமுமே இருக்கின்றன. இதே வேளை சனங்கள் தங்களுக்கு முன்னே எழுகின்ற விம்பங்களால் கவரப்படுவதையும் அந்தப் பிம்பங்களாலேயே மக்கள் பலியாவதையும் சுட்டி எச்சரிக்கின்றார்.

‘மகா ஜனங்கள்
வார்த்தைகளை நம்பப் பழகிவிட்டார்கள்
தெருக்களில் அலைகின்றன
எல்லா நாட்களிலும் நம்பிக்கையூட்டலுக்குரிய
வார்த்தைகள்
அனோஜ்
வார்த்தைகளை நம்பாதே’

(மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)

‘வேண்டாம்
கொடும் இரவுகளில் புனையப்பட்ட
பிணக்கதைகளில் இருந்து
ஒரு பூ பூக்குமென்றோ
அதன் நடனமிடும் விழிகளில்
சூரியன் உதிக்குமென்றோ
யாருமே நம்ப வேண்டாம்’

(புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்)

பொதுவாகச் சித்தாந்தனின் கவிதைகள் பொய்மைகள், புனைவுகள் குறித்த உலகத்தையிட்ட கசப்புடனும் அதையிட்ட எச்சரிக்கையுடனும் உள்ளதை உணர முடிகிறது. இதற்கு இந்தத் தொகுதியிலுள்ள முப்பது கவிதைகளில் எட்டு, ஒன்பது கவிதைகளின் தலைப்புக்கள் சாட்சி - கவிதைகளில் பெரும்பாலானவையும் ஆதாரம்.

கவிதைகளின் தலைப்புகள்...

1. பிடாரனின் திகைப்பூட்டும கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கின்றேன்.
2. இருளுக்குள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஓவியம்.
3. புனிதத்தின் உன்னத இசையை வேட்டையாடும் நாய்.
4. பாம்புகள் உட்புகும் கனவு.
5. மெய்யுறங்கும் நாட்களின் கோடை.
6. புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்
7. நாக்குகளில் ஏற்றப்பட்டிருக்கிறது தூண்டில்.
8. சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்.
9. மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு.

இதேவேளை இத்தகைய கவிதைகளுக்கு அப்பாலான பல நல்ல கவிதைகளும் இந்தத் தொகுதியிலுள்ளன.

பசியோடிருப்பவனின் அழைப்பு, தெய்வங்கள் எறிந்த கத்திகள். கை மறதியாய் எடுத்து வந்த மூக்குக் கண்ணாடி, நிகழ் கணத்தின் வலி, உரையாடலில் தவறிய சொற்கள், பாறைகளுக்கடியில் விழித்திருப்பவனின் இரவு போன்ற கவிதைகள் இந்த வகையில் சிறப்படைந்துள்ளன. குறிப்பாக உறவு, தன்னிலை உணர்தல் ஆகியவற்றில். இதில் ‘நிகழ்கணத்தின் வலி’ மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நினைவுபடுத்தும் தன்மையுடையது.

‘பொம்மையுடனான சினேகிதம்
எம்மையும் பொம்iமைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு
…………………………….
எமது அழுகையை
பொம்மைகளின் அழுகை என்றனர்
எமது இரத்தத்தை
பொம்மைகளின் இரத்தம் என்றனர்

கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்துபோனோம்’

சித்தாந்தனின் மொழியிலிருந்தும் வெளிப்பாட்டு முறையிலிருந்தும் வேறுபட்டிருக்கும் கவிதையிது. சுpத்தாந்தனின் கவிதைகள் அவருடைய மொழியமைப்பினாலும் வெளிப்பாட்டு முறையினாலும் எபபோதும் தனித்துத் தெரிபவை. கவித்துவம் கூடிய கணங்களை உள்ளம்சமாகக் கொண்டவை.

‘மறுதலிப்பின் மறுநாழிகையில்
உடைந்து கிடந்தது பூச்சாடி’

(குரோதத்தின் கத்தியோடு நாம் பகிர்ந்து கொண்ட இரவு)

‘நானொரு பறவையை வரைந்தேன்
அது போராயுதமாயிற்று
அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து
என்னைத் துரத்துகிறது
………………………………..
நிழல்களின் மௌனம் கொடியது
…………………………’

(துரத்தும் நிழல்களின் யுகம்)

‘திசைகளின் முரண்களிலிருந்து
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்
……………………………..’

இவையே சித்தாந்தனின் அடையாளத்தை காட்டும் மொழிதல், ஆனால் தன்னுடைய முதற் தொகுதிக் கவிதைகளுக்கும் இரண்டாம் தொகுதிக் கவிதைகளுக்குமிடையில் அவரிடம் முதிர்வு உருவாகியுள்ளது. இந்த கவிதைகள் நிகழ்காலத்தைப் பேசுவனவாக இருக்கின்றபோதும் பொது வெளிப் பிரக்ஞையை அதிகம் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

சுருக்கமாகச் சொன்னால் தனக்கான திசையினை அவர் கண்டுபிடித்துள்ளார் எனலாம். இந்தக் திசையில் இனித்தொடரும் பயணம் என்னவாக இருக்கும்? இந்தத் தொகுதியின் அட்டையினை றஸ்மி சிறப்பான முறையில் அமைத்துள்ளமை மேலும் நன்றாக உள்ளது.

Saturday, May 23, 2009

தூக்கு மேடையில் வைக்கப்பட்ட வாக்கு மூலம்



0 கருணாகரன்

எனக்கு
சாட்சியங்களில்லை
நிம்மியுமில்லை
இதோ
எனக்கான தூக்கு மேடை
இதோ எனக்கான சவுக்கு
நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
உண்மையைக்கண்டறியுங்கள்
தயவுசெய்து கண்டறியுங்கள்
அதன்பிறகு
என்னைப்பலியிடுங்கள்
அதற்காக நான் மகிழ்வேன்
உண்மைக்காக என்னைப்பலியிடத்தயாராக இருக்கிறேன்.

அதுவரையில் நான் சாட்சியாக
இருக்க விரும்புகிறேன்

நல்ல நம்பிக்கைகளை
உங்களிடம் சொல்வேன்
எதுவும் பெரியதில்லை
எதுவும் சிறியதுமில்லை

நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை
எந்த விசமும் படர்ந்ததில்லை
என் நிழலில்

உண்மையைக் கண்டவன்
அதைச் சொல்லாதிருப்பது
மாபெரும் பாவச் செயலாகுமல்லவா
தண்டனைகுரிய தல்லவா

எனவேதான் உண்மையைச் சொன்னேன்
பாவங்களும் தண்டனையும்சேராதிரக்கும்படியாக
அதையே நான் செய்தேன்
அதையே நான் செய்தேன்
இதில் உங்களுக்குண்டா பேதங்கள்

நான் உங்களில் ஒருவன்;
அன்பின் கூக்குரலை
நான் ஒலித்தேன்
நாம் தோற்கடிக்கப்படலாமா
என்னைக் கோவிக்காதே
என்னைக்கோவிக்காதே

நான் சொல்வதைக்கேளும்
நான் சொல்வதையும் கேளும்

உண்மைகளை நாம் ஒரு போதும்
அழியவிடலாமா
உண்மைக்குச் செய்யும் அவமானம்
நம்மைத் தூக்கு மரததில் நிறுத்தும்

நமது நாக்குக்கசக்கிறது
நமது கால்கள் வலிக்கின்றன
நமது வயிறு கொதிக்கிறது

என்ன செய்ய முடியம்
அவற்றுக்கு
மன்னிப்பா
ஆறுதலா
தண்டனையா

காலத்திடம் சொல்லு
இன்னும் இன்னுமாய்
-------------------------------------------

Sunday, June 8, 2008

பதுங்குகுழி நாட்கள்:பா.அகிலன் கவிதைகள்


எழுதியவர்___________________________
--------------------------கருணாகரன்

அப்போது யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளாகியிருந்தது. (இப்போதும் அதுமுற்றுகையிடப்பட்டேயிருக்கிறது). முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆட்கள் காணாமற் போனார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். காணாமற்போவோர் பற்றிய துயரம் சாதாரணமானதல்ல. ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று முடிவு தெரியாத நிலை அது. அது அவ்வளவு சாதாரணமானதல்ல. இந்த நிலையைப்பற்றிய பிறவி என்ற மலையாளப்படம் இப்போது உங்களின் ஞாபகத்துக்கு வரலாம். தினமும் காணாமற்போவோரின் செய்திகளோடுதான் யாழ்ப்பாணத்தின் காலைகள் விடிந்தன.

பயங்கரங்களின் ஆழ்கிடங்கில் தள்ளப்பட்டிருந்தது யாழ்ப்பாணம். எங்கும் பீதி. எப்போதும் பயங்கரம். எல்லோரும் அச்சத்தில் உறைந்திருந்தனர். நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் எவையும் இல்லை. சுற்றியிருக்கும் கடல் மிகவும் பயங்கரமாக இருந்தது. அது எந்த வழிகளையும் காட்ட மறுத்தது. ஒரு காலம் பாய்மரக்கப்பல்களில் அமெரிக்காவரை போய்வந்த யாழ்ப்பாணம் இப்பொழுது அருகிலிருக்கும் சிறு தீவுகளுக்கே பயணஞ்செய்ய விதியற்றுச் சிறைகிடந்தது. கடல் வலயச் சட்டத்தில் அது சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த உலகத்தில் கோடானுகோடி பாதைகளிருக்கின்றன. ஆனால் வரலாற்றுச் சிறப்புடைய இந்த நகரத்துக்கு இப்போது பாதையில்லை. முற்றுகையிடப்பட்ட நகரத்துக்கு எப்படிப் பாதைகள் இருக்கும். பாதையில்லாமல், பயணமில்லாமல் சிறைப்பட்டிருந்தார்கள் சனங்கள்.

அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து மிகப்பிந்தி எப்போதாவது ஒரு கடிதம் வரும். அப்படி வரும் கடிதத்திலும் எந்தச் சேதிகளும் தெளிவாக இருக்காது. அது தணிக்கைகளின் காலம். ஒவ்வொரு கடிதமும் படையினரால் மோப்பம் பிடிக்கப்படும் என்ற அச்சத்தில் சனங்கள் எல்லாவற்றையும் சுய தணிக்கைக்குட்படுத்தினார்கள்.

அவ்வாறிருந்த சூழலில் எதிர்பாராமல் சில கவிதைகள் யாழ்ப்பாணத்திலிருந்து எப்படியோ அந்த முற்றுகையின் தீராத வலிகளைச் சுமந்து, காயங்களோடு வந்தன. அவற்றில் பா.அகிலன், இயல்வாணன் ஆகியோருடைய கவிதைகள் முக்கியமானவை. இவ்வாறு வந்த சில நல்ல கவிதைகள் அந்த நாட்களில் கையெழுத்துப்பிரதியில் வாசிக்கப்பட்டன. அவற்றை உடனடியாகப் பிரசுரிக்கும் ஆர்வம் இருந்தபோதும் அவற்றை எழுதியோரின் பாதுகாப்புக் கருதி அது தவிர்க்கப்பட்டது. ஆனால் கையெழுத்துப்பிரதியாக இருந்த நிலையிலேயே அவை உள்ளக வாசிப்பில் மிகவும் அதிகமான அளவுக்கு வாசிக்கப்பட்டன.

நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்த அந்தக்கவிதைகளே அன்றைய யாழ்ப்பாணத்தின் ஆன்மா. ஏறக்குறைய பத்தாண்டுகள் கழிந்த பின்னர், இப்போதும் இதுதான் அங்கே நிலைமை. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் தொடர்ந்தும் இருக்கிறது. அந்த மக்கள் முன்னரை விடவும் மிக மோசமான அவலத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள். இது பொதுவாகவே ஈழத்தமிழர்களுக்கான தண்டனைக்காலமா என்று ஒருவர் கேட்டதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அகிலனின் கவிதைகளும் கடிதங்களும் நிலாந்தனுக்கு வந்தன. தமிழர்கள் ஒவ்வொரு பிரதேசமாக இராணுவ வலயங்களால் பிரித்துத் தடுக்கப்பட்டிருந்தார்கள். அதற்குள் பெரும் படையெடுப்புகள். தொடர் இராணுவ நடவடிக்கைகள். அப்போதுதான் நிலாந்தன் யாழ்ப்பாண முற்றுகையை மையமாக வைத்து, அந்த இருண்ட நாட்களை யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே என்ற நீண்ட கவிதையாக எழுதினார். அகிலனுடைய கடிதங்களும் கவிதைகளும் எழுப்பிய தூண்டல்தான் நிலாந்தனை அப்படி அந்த நெடுங்கவிதையை எழுதவைத்ததோ என்று தோன்றுகிறது.

நிலாந்தன் எழுதுகிறார்,

யாழ்ப்பாணம் அல்லது அமைதி நகரம்
1996 ஏப்ரில் மாதம் சனங்கள் வீடு திரும்பிய பிறகு யாழ்பாணத்திலிருந்து வந்த கடிதங்கள் சில-

1.24.06.996
யாழ்ப்பாணம்

இம்முறை மிக நீண்ட கோடை
ஒரே வெயில்
ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று
இரவு
ஊழையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட்ரக்குகளுக்குமுரியது
பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களுக்கு
இடையில் வரும் பொழுது
தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது
இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றி வளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு
...........
..........

2. 21.08.1996
யாழ்ப்பாணம்

மின்சாரம் வந்து விட்டது
பஸ் ஓடுகிறது
மினி சினிமா கொகோ கோலா
புளு பிலிம் எல்லாம் கிடைக்கிறது
...........
..........
காணாமற் போனவர்களைப் புதைத்த
வெளிகளில்
உப்பு விளைகிறது
ஊரி சேர்கிறது
3. 23.10.1996
யாழ்ப்பாணம்

உன்னுடைய பெரிய ஓவியங்கள் பத்திரமாயுள்ளன. ஆனால் திருநெல்வேலியில் வைக்கப்பட்டிருந்த சிறிய சைஸ் ஓவியங்களைக்காணவில்லை. மாற்குவின் ஓவியங்களும் அதிகம் தொநை;து போய் விட்டன. மிஞ்சியிருப்பவற்றைப் போய் எடுக்கலாமா என்று யோகன் கேட்டான். ஆனால் பயமாயிருக்கிறது. கைலாசநாதனுடைய ஓவியங்கள் முழுதும் தொலைந்து விட்டன. அ. இராசையாவின் ஓவியங்களும் அநேகமாக மிஞ்சவில்லை.

எல்லாவற்றையும் திரும்பவும் முதலிலிருந்தே வரைய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் முதலிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே...
யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே) என்று.

இதுதான் அங்கிருந்த நிலைமை. இப்போது அகிலனின் கவிதைகள் பற்றிய இந்தக்குறிப்பை எழுதும் இந்த இரவிலும் இதுதான் தொடரும் கதை. எனவே இந்தப்பின்னணியோடு நாம் இப்போது பா. அகிலனின் கவிதைகளைப் பார்க்கலாம்.

அகிலனின் கவிதைகள் தனியே யாழ்ப்பாண முற்றுகையோடு மட்டுப்பட்டவையல்ல. அல்லது அரசியலை மட்டும் பேசுவனவுமல்ல. சமகாலம் என்ற நிகழ்காலப் பரப்பிற்குள் அடைபடுவனவுமல்ல. காலம் இடம் என்ற எல்லைகளைக்கடந்து பிரபஞ்சத்தில் ஊடுருவி முன்னும் பின்னுமான வெளியில் சஞ்சரிப்பவை. எல்லைகளற்ற வெளிநோக்கியவை. தம் படைப்பின் அடிப்படைகளாலும் அவற்றின் தகுதிகளாலும் நிரந்தரத் தன்மையைக் கொண்டிருக்க எத்தனிப்பவை. அந்த எத்தனத்தில் வெற்றியடைந்தவையும் கூட.

2
போர்க்காலத்தின் மீது படிந்திருக்கும் பயங்கரம், துயரம், அவலம், அழிவின் ஓலம், குருதி, அதன் தீராத நெடி, தீ, புகை, இருள் பெருகிய நாட்களின் வாசனை எல்லாவற்றையும் அகிலன் கவிதைகள் தம்முள் நிரப்பி வைத்திருக்க்pன்றன. துயர் உருகிப் பரவும் வெளியாக இந்தக்கவிதைகள் உள்ளன.

போரை எந்த நிலையிலும் விரும்பாத போதும் போர் தொடர் வியூகங்களில் சிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. அதனிடமிருந்து தப்பவே வழியில்லை. அது முடிவில்லாமல் துரத்துகிறது. துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு பகல் என்ற கால பேதங்கள், ஓய்வொழிச்சல் இல்லாமல் போதை நிரம்பிய வன்மத்தோடு அது துரத்துகிறது. எதற்காக அவ்வாறு துரத்துகிறது என்று தெரியாது. யாருக்கும் அது தெரியாது. கேள்விகள் இல்லை. விளக்கங்கள் இல்லை. நியாயங்கள் இல்லை. எல்லாவற்றின் மீதும் அது முழு ஆதிக்கத்தோடு முழு வலிமையோடு தன் வன்முறையைக் பிரயோகிக்கிறது. அதற்கு எந்தத்தடையுமில்லை. எல்லாவற்றையும் அது தன் காலடியில் போட்டு நசிக்கிறது. போரை விரும்பாதபோதும் அதை நாம் விட்டு வில முனைகிறபோதும் அதற்கு அது இடமளிக்கவில்லை. இந்த வலியும் நீதியின்மையும் அதன் வன்முறையும் தாங்கமுடியாத அளவுக்கு உயிரை வதைக்கிறது. அகிலன் இவற்றை, இந்த நிலையை மிக நுட்பமான மொழியில், உக்கிரமான தொனியில் வலிமையாக மொழிகிறார். அவருடைய இந்த மொழிவுக்கு தமிழ் மரபும் பிற இலக்கியப் பரிச்சயங்களும் உதவுகின்றன. இவற்றின் வேர்களிலிருந்தே அகிலனின் கவிதைகள் பிறக்கின்றன.

வேகமும் அதிர்வும் தரும் மொழியில் இந்தக்கவிதைகளிருக்கின்றன. ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு வரியிலும் புதிய கணங்களையும் வௌ;வேறு நிலை அனுபவங்களையும் எழுப்பும் ஆற்றல் இங்கே குவிக்கப்பட்டுள்ளது. சில கவிதைகள் ஓவியத்தைப்போல காட்சியை விரிக்கிறது. சில நாடக அசைவை காட்டுகின்றன. பதுங்குகுழி நாட்கள்-3 என்ற கவிதையில் வரும் இறுதி அடிகள் இதற்கு நல்ல சான்று.

கரைக்கு வந்தோம்
அலை மட்டும் திரும்பிப் போயிற்று
சூரியன் கடலுள் வீழ்ந்த போது
மண்டியிட்டழுதோம்
ஒரு கரீய ஊழை எழுந்து
இரவென ஆயிற்று
தொலைவில்
மயான வெளியில் ஒற்றைப்பிணமென
எரிந்து கொண்டிருந்தது எங்க@ர்

பெரிய அரங்கொன்றில் நிகழும் காட்சி அவற்றுக்கான ஒளிமாற்றங்களோடு புலனேறுகிறது. ஆனால் இவ்வாறு வரும் கவிதையின் முடிவு வரி இந்தநிலையை மாற்றி வேறொரு நிலைக்கு கொண்டு போகிறது. இதனால் நமது மனதில் பல நேர்நிலை எதிர்நிலைச் சித்திரங்கள் உருவாகின்றன.

பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்

முதல் வரியிலேயே கவிதையை சடுதியாக வேகமெடுக்க வைக்கும் பண்பை அகிலன் கொண்டிருக்கிறார். அந்த வேகம் ஒரு போதும் தணிவதில்லை. கவிதை முடிந்த பிறகும் அதன் விசை குறைவதில்லை. எவ்விதம் கவிதை தொடங்கியதோ அதேபோல அதே வேகத்தோடு அது முடிகிறது. முடிவற்றுத் தொடந்து கொண்டேயிருக்கிறது அதிர்வு. பின்னரும் நான் வந்தேன்,எனக்குத் தெரியாது, வாவிகள் நிரம்பிவிட்டன, இங்கேதான் இவ்வாறு தொடங்கும் வரிகள் உடனடியாகவே ஏவு ஏவுகணையைப்போல வேகம் கொள்கின்றன.

3
தொண்ணூறுகளுக்குப்பின்னான ஈழக்கவிதைகள் பெரும்பாலும் போர் மயப்பட்டவையே. போரை அவை எந்த நிலையில் எந்தக்கோணத்தில் அணுகியிருந்தாலும் அவை போர் பற்றியவையாகவே இருந்தன. எண்பதுகளில் உருத்திரண்ட அரச பயங்கரவாதம் தொண்ணூறுகளில் பெரும் போராக விரிந்தது. உள்நாட்டுப் போராக இருந்த போதும் அது இரண்டு இராணுவங்கள் மோதிய பெரும் போர்.

அதனால் எண்பதுகளில் அரசபயங்கரவாதத்தை எதிர்த்தும் விமர்சித்தும் வந்த கவிதைப்போக்கு இப்போது போரை எதிர்ப்பதாகவும் விமர்சிப்பதாகவும் அல்லது அதை வெற்றியை நோக்கி திருப்புவதாகவும் அமைந்தது.

அகிலனுடைய கவிதைகள் போரை விமர்சிக்கின்றன. அதை உள்@ர எதிர்க்கின்றன. அதனால் ஏற்படும் வலிப்பெருக்கை நெகிழ்ந்து ததும்பும் மொழியில் சொல்பவை. போரின் வலி எப்படி பிற சமூகங்களின் ஆன்மாவையும் வாழ்வையும் பாதித்திருக்கின்றன என்று அவர் அறிந்திருக்கிறார். குறிப்பாக அவரே சொல்வதைப்போல ரஷ்யாவின் இருண்ட கால அனுபவங்களை அவர் அன்னா அக்மதோவாவினூடாக பெற்றிருக்கிறார். அதைப்போல இன்னும் எல்லாத் திசைகளிலிருந்தும் எல்லாக்காலங்களிலிருந்தும் போர் ஏற்படுத்திய அழிவுகளையும் அதன் வலியையும் காயங்களையும் தெரிந்திருக்கிறார். அவருடைய அறிதல் முறை இதைச் சாத்தியமாக்கியுள்ளது.

போர்க்காலத்தின் புலம்பல்களை மகா பாரதத்திலிருந்தும் ராமாயணத்திலிருந்தும் வேதாகமத்திலிருந்தும் அகிலன் கேட்கிறார். இப்போது தன்னிலத்திலிருந்து அவை குருதியொழுக ஒழுக அவருடைய புலன்களில் ஏறுகின்றன. அகிலன் பதற்றமடைகிறார். என்ன செய்ய முடியும். அவர் விரும்பாத போர். அவர் சம்மந்தப்படாத போர். ஆனால் அது அவரை உள்ளே இழுக்கிறது. இழுத்துப்புரட்டுகிறது. புரட்டிப்புரட்டி அது பழிவாங்குகிறது. என்ன செய்ய முடியும். கடவுளே... கடவுளே...

சனங்கள் எதுவுஞ்செய்ய முடியாமல், எங்கேயும் போக முடியாமல் அந்தரிக்கிறார்கள். உயிர் எல்லாவற்றையும் விடப்பாரமாகிவிட்டது. எதுவும் இப்போது பெரிதில்லை, உயிரைத்தவிர. உயிர்தான் இப்போது சுமையானது. அதுவும் பெருஞ்சுமையாக இருக்கிறது. சிலபோது உயிரும் பெரிதாக தோன்றாமற் போகிறது. நிலைமை அப்படி.

வீடு பாதுகாப்பற்ற வெளியாகிவிட்டது. வீட்டைவிடவும் பதுங்குழிதான் பாதுகாப்பானது என்ற நிலை. இதுவே யதார்த்தம். ஆனால் பதுங்குகுழியோ இருண்டது. உண்மையில் இருண்ட காலம் இது. நிலாந்தன் சொல்வதைப்போல இப்போது ஈழத்தமிழர்கள் ஈருடக வாசிகளாகி விட்டனர். பதுங்கு குழிக்கும் வீட்டுக்கும் இடையிலான வாழ்க்கையில் அவர்கள் கிடந்து அல்லாடுகின்றார்கள். தவளையைப்போல மனிதப்பிராணி ஆகிவிட்டது.

4
அகிலனின் குரல் சனங்களின் குரல். அது பொதுக்குரல்;. அதுவும் யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளான காலத்தின் குரல். அந்த முற்றுகைக்குள்தான் கிறிஸ்து பாலன் பிறக்கிறார். அந்த முற்றுகைக்குள்தான் தேவலயத்தின் மணிகள் ஒலிக்காமல் அடங்கிப்போயிருக்கின்றன. கூரையில்லாத தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனை முற்றுகைக்குள்ளான யாழ்ப்பாண நிலவரத்துக்கு அசலான படிமம்.

ஸ்தோத்திரம் சுவாமி
கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து
எனது இராக்காலப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும்
இவ்வருடம் நீர் பிறந்தபோது
அடைக்கப்பட்டிருந்தன தேவாலயங்கள்
கைது செய்யப்பட்டிருந்தது
நள்ளிவு மணியோசை
.........
.........
ஊரடங்கிய இரவில்
பிதாவே, நீர் பிறந்தபோது
அன்னியராய் இருந்தோம்
எங்கள் நகரில்,
மந்தைகளாக நடத்தப்பட்டோம்
எங்கள் முற்றங்களில்
........
........

பிதாவே,
சிதறிப் போனார்கள்
குரல்கள் கைப்பற்றப்பட்;ட சனங்களெல்லாம்
வெறிச்சோடியுள்ளன வீடுகள்
தேவாலயத்தின் வழிகளெல்லாம்
உதாசீனம் செய்யப்பட்ட அவர்களின் துயரங்கள்
.........
.........
யாழ்ப்பாணம் 1996-நத்தார்)

இந்தக்கவிதை வந்தபோது நான் வன்னியிலிருந்தேன். அப்போது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை அரசாங்கம் தன்னுடைய ஒடுக்கு முறைக்கேற்றமாதிரி துண்டு துண்டாகப் பிரித்து வைத்திருந்தது. அப்படிப் பிரித்துத் தனிமைப்படுத்தப்பட்டு முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் அகிலன் இருந்தார். நாங்கள் வன்னியில் போர் வியூகத்துள் சிக்கியிருந்தோம். வலியுமம் துயரமும் நம்மீது கவிந்திருந்த காலம் அது.

அகிலன் துயருற்ற யாழ்ப்பாணத்து மனிதனின் குரலாய்ப் பேசினார். இந்திரா காந்தியின் நெருக்கடிகாலத்தை ஆத்மாநாம் கவிதைகள் விமர்சிப்பதைப்N;பால. ஸ்டாலின் காலத்தின் இருண்ட நாட்களை அன்னா அக்மதோவாவின் கவிதைகளை இன்றைக்கும் நமக்குக் காட்டுவதைப்போல முற்றுகைக்கும் போருக்கும் உள்ளான யாழ்ப்பாணத்தை அகிலன் கவிதைகள் காட்டின.

வாழும் காலத்தின் நெருக்கடிகள் தவிர்க்க முடியாமல் ஏதோவகையில் எந்தக்கவிஞரையும் பேசவைக்கின்றன. ஒரு கவி அந்தக்காலத்தினது சாட்சி. கவிதையும் அந்தக்காலத்தின் சாட்சியே.

ஆனால், இதிலும் சில முரண்களிருக்கின்றன. வாழும் காலத்தில் நான்கு முக்கிய வகை இயல்புடைய கவிகளை வரலாறு எப்போதும் கொண்டிருக்கிறது. ஒன்று ஒடுக்குமுறை அல்லது அதிகாரத்துக்கு ஒத்துப் போகும் கவிகள். அல்லது அதனைச் சார்ந்திருக்கும் கவிகள். இரண்டாவது, ஒடுக்குமுறையையும் அதிகாரத்தையும் எதிர்ப்போர். இவர்களில் புரட்சிகரமான போராட்டத்துக்கு ஆதரவான கவிகளும் உண்டு. ஆனால் இந்தக்கவிகளும் சார்பு நிலைப்பட்டவர்களே. இவர்கள் விமர்சன ரீதியாகவும் அறச் சார்போடும் ஒரு எல்லைக்கப்பால் நகர்வதில்லை. மூன்றாவது வகையினர், என்ன நடந்தாலும் அவற்றில் எந்த நிலையிலும் எந்த வகையிலும் சம்மந்தப்படாது விலகியிருப்பவர்கள். தட்டாமல் முட்டாமல் நடந்து கொள்பவர்கள் இவர்கள் என்ற சொல்லலாம். அடுத்தது நான்காவது வகையினர். இவர்கள் அறத்தைப் பிரதானமாகக் கொண்டவர்கள். எந்த நிலையிலும் சனங்களின் துயரத்தையும் பாதிப்பையும் முதன்மையாகக் கொண்டவர்கள். இவர்கள் சாட்சிகள். அன்னா அக்மத்தோவா ஒரு சாட்சி. ஆத்மாநாம் ஒரு சாட்சி. அடோனிஷ் இன்னொரு சாட்சி. நமது சூழலிலும் இத்தகைய சாட்சிகள் உண்டு. அதில் ஒருவர் அகிலன்.

ஒரு கவியில் இரண்டு நிலை அம்சங்களைப்பிரதானமாக அவதானிக்கலாம். ஒன்று அவர் கொள்ளும் பொருட்பரப்பு. அதாவது அவருடைய புலன் கொள்ளும் கவனத்தின் பரப்பு. அடுத்தது அவர் தன் கவிதைகளை வெளிப்படுத்தும் இயல்பு. அவருடைய மொழிதல். அதற்குப்பயன்படுத்தும் மொழி. அதற்கான சொற்கள். அந்தச் சொற்களை இணைக்கும் அல்லது அமைக்கும் தன்மை.

இவை இரண்டிலுமே ஒரு கவியின் ஆளுமையும் தனித்துவமும் இருக்கின்றன. இவைதான் ஒரு கவியின் முக்கியமான அடையாளத்தைத்; தீர்மானிக்கும் பிரதான காரணிகள். இவையே அந்தக்கவியை காலத்தின் மீது ஊன்றுவதும் காலத்திலிருந்து விலக்குவதும்.

பொதுவாக நெருக்கடி காலக்கவிகள் எப்போதும் அந்த நெருக்கடியை சனங்களின் நிலையில் நின்று காலத்தின் முன்னும் பின்னுமாகச் சஞ்சரித்து நிகழ்காலத்தை மதிப்பிடுவர். ஆனால் அவர்கள் ஒரு போதும் நிகழ்காலத்தின் சலனங்களுக்குள் நிற்பதில்லை. உள்ளடங்கி விpடுவதுமில்லை. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அத்தகைய மதிப்பீடு என்பது கவியின் முக்காலத்தையும் ஊடுருவும் பார்வைத்திறனாகும். வரலாற்றின் அனுபவத்தொகுதியும் எதிர்காலம் குறித்த அறத்தோடிணைந்த கனவும் நிகழ்கால உண்மையும் கவியின் இந்தப் பார்வையை உருவாக்குகிறது.

இந்த அடிப்படையைக் கொண்டே யாழ்பாண முற்றுகை எப்படி இருந்தது என்பதை அகிலன் கவிதைகள் காட்டுகின்றன. இது சனங்களின் நிலை நின்று நோக்கப்படும் உணரப்படும் அடையாளம். இந்த முற்றுகையை ஒரு படைத்துறை ஆய்வாளர் வேறு விதமாகவே சித்திரிப்பார். முற்றுகையிடும் தரப்பின் ஊடகக்காரர் இன்னொரு விதமாக இதை நோக்குவார். முற்றுகையை எதிர்க்கும் அல்லது எதிர்த்துப் போரிடும் தரப்பைச் சேர்ந்த கவிஞர் இதை வேறொருவிதமாக வெளிப்படுத்துவார். ஒரு என். ஜீ. ஓ ஆள் இதை வேறுவிதமாக உணருவார். ஆக வௌ;வேறு நோக்குநிலைகள் கொண்ட ஒரு விவகாரம் அவையெல்லாவற்றையும் கடந்து பொதுத்தளத்தில் கவிப் பெறுமமானத்தை அடைகிறது என்றால் அது எவ்வாறு என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.

இந்தக்கேள்விக்கான பதிலை நாம் அகிலனின் கவிதைகளில் காணலாம். முற்றுகையின் நிலை மாறாலாம். அது நிச்சயம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாறிவிடும். அது தவிர்க்க முடியாத விதி. அப்போது அந்த முற்றுகையின் பெறமானமும் மாறிவிடும். வரலாற்றில் இதுமாதிரியான விசயங்களுக்கு எப்போதும் பெறுமதி இல்லை. நிகழ்காலத்தின் பெறுமதி மட்டுமே இவற்றுக்கு உண்டு. ஆக அப்போது சனங்களின் நிலைநின்று சாட்சி பூர்வமாக எழுதப்படும் கவிதைகளுக்கு மட்டுமே பெறுமதியிருக்கும். மற்றதெல்லாம் அந்தக்காலத்தோடு பெறுமதியற்றுப் போய்விடுகின்றன. தேவைகளுக்காக செய்யப்படும் காரியங்கள் எப்போதும் அந்தத் தேவைகள் முடிந்த கையோடு அவற்றின் பெறுமதியை இழக்கின்றன. ஆனால் அந்தத் தேவைகள் இருக்கும் போது அவற்றுக்கான பெறுமதி மிக அதிகமாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு தேவையும்தானே வரலாற்றை நிர்ணயிக்கும் காரணிகளாகின்றன என்று வாதிடுவோரையும் இங்கே நாம் கவனத்திற் கொள்ளுதல் அவசியம். ஆனால் அவற்றின் நிரந்தரத்தன்மை அவை கொண்டிருக்கும் உண்மையிலும் அதற்கான அறிவிலுமே தங்கியிருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மனித அடிப்படை விதிகளையும் தேவைகளையும் நலன்களையும் வைத்தே பொது விதிகள் உருவாகின்றன. அந்த விதிமுறைகளை பேணாத எந்த நோக்கமும் மனவெளிப்பாடும் நிரந்தரமானதல்ல. பொதுவானதுமல்ல. எனவே அவற்றுக்கான ஆயுட்காலமும் பெரிதாக இருக்க முடியாது.

5
ஒரு கவிதை எதன் அடிப்படையில் முக்கியத்துவமடைகிறது. எப்படி காலங்களைக் கடந்து செல்கிறது. எப்படி அது பிரதேசங்களைக்கடந்து, மொழியைக்கடந்து, பண்பாட்டைக்கடந்து, பிற சமூகங்களிலும் பிற காலங்களிலும் ஊடுருவுகிறது. எவ்வாறு அது மற்றச் சமூகங்களில் அறிமுகத்தையும் செல்வாக்கையும் செலுத்துகிறது. இந்தக் கேள்விகள் முக்கியமானவை.

இங்கே கவிதையின் பொருட்புலமும் வெளிப்பாட்டம்சமுமே இந்தப்பயணத்தை நிகழ்த்துகின்றன. இவை இரண்டும் இணைந்த நிலையில்தான் இந்தச் சாத்தியம் நிகழ்கிறது. தொன்மையான மொழியை அது நவீனப்படுத்துகிறது. நவீன வாழ்வை அது தொன்மை அம்சங்களோடு கலந்து நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமாக உருவாக்க எத்தனிக்கிறது. மனதின் எல்லா அறைகளிலும் கலாச்சாரத்தின் அத்தனை அடுக்குகளிலும் இருந்து அது தன் திரவியங்களைத் தேடிக்கொள்கிறது.

கவிதை கலாச்சார வெளியில் கொண்டிருக்கும் இடம் மிகப்பெரியது. பொறியாகக் கனலும் அதன் இயல்பு இன்னொரு நிலையில் ஒரு துளி நீராகவும் இருக்கிறது. பொறி பெருந்தீயை உருவாக்கக்கூடியது. நீரோ கடலை, சமுத்திரத்தைத் தன்னுள் கொண்டிருப்பது. இவ்வாறு அது பல நிலைகளில் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இந்தத்தன்மைகள் எல்லாம் கவிதைக்கு நிரந்தரத்தன்மையை அளிக்கின்றன.

எப்போதும் மொழியில் உருகிக் கொண்டிருக்கும் வடிவம் அது. உள்ளீடும் அதுதான். மொழியில் நிகழும் அசாத்தியங்கள் கவிதையைப் போல வேறு எந்த மொழிவழி அடைவுகளிலும் உருவாகுவதில்லை. எனவேதான் அது எப்போதும் எல்லாச் சமூகத்திலும் மிகச் சுலபமாகவே ஊடுருவுகிறது. தொன்மையும் அதி நவீனமும் இணைந்த இந்தக்கலவை இயற்கை அம்சத்தை உருவாக்குகிறது. இயற்கை எப்போதும் மிகப்பிரமாண்டமானது. வியப்பூட்டுவது. நிரந்தரமானது. கவிதையும் அப்படித்தான். இந்த அம்சங்களோடு, இந்த வகையில் தமிழ்;க்கவிதையிலும் பிற மொழிவழிக்கவிதைகள் பழக்கமாகியுள்ளன.

கடந்த முப்பதாண்டுகளில் பலஸ்தீனக் கவிதைகள், குர்திஸ் கவிதைகள், ஆபிரிக்கக்கவிதைகள், லத்தீன் அமெரிக்கக்கவிதைகள், வியட்நாமியக்கவிதைகள், கறுப்பினக்கவிதைகள், ரஷ்யக்கவிதைகள், மூன்றாமுலகக் கவிதைகள், சீனக்கவிதைகள் ஈழக்கவிதைப்பரப்பில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. இந்தளவுக்கு தமிழகக் கவிதைகள் கூட ஈழத்தில் அறிமுகத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவற்றைப்பற்றிய அவதானிப்பும் அறிமுகமும் இருந்தது. ஆனாலும் அந்த அறிமுகம் மேலே சொல்லப்பட்ட கவிதைகள் செலுத்திய செல்வாக்கை இவை பெறவில்லை. குறிப்பாக லாங்ஸ்டன் கியூஸ், மர்முட் தர்விஷ், அடோனிஷ், அன்னா அக்மதோவா, பெரோல்ட் பிரெக்ட், பெய்ஸ் அகமத் பெய்ஸ் போன்றோர் ஈழக்கவிதைப்பரப்பில் பெரும் செல்வாக்கைச் செலுத்தினர். ஈழக்கவிஞர்களைப்போலவே இவர்கள் உணரப்பட்டனர். இதற்கு பிரதான அடிப்படைக்காரணம் இந்தப் பரப்புகளின் கொந்தளிக்கும் வாழ்நிலையே. ஒத்த வாழ்க்கை நிலைமையும் அனுபவங்களும் இந்தப்பரஸ்பரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேவேளை தனியே இந்த நிலைமைகள் மட்டும் இந்த நெருக்கத்தைக் கொடுக்கவில்லை. அதற்கப்பால் அவை எட்டிய கவித்துவ எல்லைகள் ஏற்படுத்திய ஈர்ப்பும் முக்கிய காரணம்.

இதிலும் அவரவர் தத்தம் வழி நின்றும் அனுபவத்தின் வழியாகவும் அவரவர் பண்பாட்டு நிலைப்பட்டும் தங்கள் கவிதையை நிகழ்த்தியிருக்கின்றனர். இங்கே கவிதை இவர்களிடையே ஒரு நிகழ்வெளிப்பாடாகவே, உரையாடலாகவே அமைந்திருக்கின்றது. எதிர்ப்புக் குரலாகவும் விடுதலை வெளியாகவும் அமைந்த இந்தக்கவிதைகள் சமூக கலாச்சார இயக்கத்தில் பிரதான அசைவைக் கொண்டன.

அகிலனிடத்தில் அன்னா அக்மதோவாவின் பாதிப்பு அதிகமுண்டு. இதை அவரே சொல்கிறார். கூடவே சுகுமாரனின் பாதிப்பையும்.

என்னுள் வெடிகுண்டு போல வந்து மோதி வெடித்தவை சுகுமாரனின் கவிதைகள். அவரின் காயவார்த்தைகளும் அன்னா அக்மத்தோவாவின் மென்னுணர்வும், துயரமும் கவிந்த வார்த்தைகளும் பெரும் பாதிப்பை என்னிடம் உண்டாக்கின. என் கவிதைகளை உற்று நோக்கும் எவரும் அன்னாவின் நோவா நதியை, சுகுமாரனின் சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனையை அவற்றில் காணவே செய்வர்.

அநாதிப்புகையிரதம், கடதாசிப்படகின் மரணம்-2, யாத்திரை-1, யாத்திரை-2, தலைப்பிடாத காதல்கவிதை போன்றவை நேரடியாகவே சுகுமாரனின் பாதிப்பையுடையவை. ஆனால் இவர்;களைக் கடந்து அகிலன் தனக்கான திசையில் பயணிக்கிறார். அதுவே இந்தக்கவிதைகளை முதனிலைப்படுத்துகின்றன. ஐதீகங்கள், தொன்மங்களை அகிலன் புதிய நிலைகளில் இணைக்கிறார். அதிகம் எழுதாமல் மிகக் குறைவாகவே எழுதியுள்ள அகிலனின் இந்தக்கவிதைகளில் எதுவும் ஒன்றிலிருந்து ஒன்று இறங்கிக் கொள்ளவில்லை. ஒரு சீரான நிலையை குலையாமல் அகிலன் பேணுகிறார்.

தொண்ணூறுகளில் ஈழக்கவிதைப்பரப்புக்கு வந்த முக்கியமான கவிஞர்களில் அஸ்வகோஸையும் எஸ்போஸையும் பா.அகிலனையுமே நான் அதிக தடவைகள் வாசித்திருக்கிறேன். இன்னும் அந்தத்தவனம் தீரவில்லை.

இந்தத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை 1994,95 காலப்பகுதியில் நான் வெளிச்சம் இதழ்களில் பிரசுரித்திருக்கின்றேன். அவற்றை பிரசுரத்துக்கு முன்னர் பார்த்தபோது மலைகளின் ஆழ்மன ஓட்டத்தையும் கடலின் தீராத அசைவையும் உணர்ந்தேன். ஒரு தீவிர வஸீகரம் அவற்றில் இருந்தது. அந்த வஸீகரம் இப்போது இந்தக்கவிதைகளை வாசிக்கும்போதும் இருக்கிறது. எப்போதும் எந்த வாசகனுக்கும் அது இருக்கும். என்றும் அது தீர்ந்து விடாது.
---------------------------------------------------------------------------------