பவுணுக்கு வேட்டையையும் வெள்ளாமையையும் தவிர, வேறு எதுவுமே தெரியாது. இந்த நாற்பத்தியாறு வயசில் அவன் வேறு எதையும் பழகவேயில்லை. அதுக்கு அவசியமும் இருக்கேல்லை.
வெள்ளாமை செய்யிறதுக்கு அப்புவின் காணிகள் இருந்தன. தண்ணீருற்றில் மூன்று போகமும் விளையும் வயல். கற்பூரப்புல் வெளியில் ஒரு இரண்டு ஏக்கர் நிலம். குழமுனையில் அம்மாவழி உரித்தான வெட்டைக்காட்டு வயல். அதில் ஆண்டுக்கு ஒரு போகம்தான் விளைவிக்கலாம். என்றாலும் ஏக்கருக்கு இருபது மூடை அடிக்கும். அங்கே அவனுக்கான நிலமும் ஒரு ஏக்கருக்குக் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருந்தது.
போதாதென்று பிறகு அவனும் ஒட்டுசுட்டானுக்கு அருகே கருவேலங்கண்டல் பக்கமாக அவன் கூட்டாளிகளுடன் ஒரு நாலு ஏக்கர் அளவில் காடு வெட்டிப் புலவாக்கியிருந்தான்.
பவுண் பெரிய கமக்காரன் இல்லைத்தான். ஆனால், ஒரு ஏழு எட்டு ஏக்கர் விதைப்பான். சில காலம் நிலைமையை, வசதியைப் பொறுத்து, ஆற்றையும் காணிகள் வசதியாக அமைஞ்சால் இன்னுமொரு இரண்டோ மூன்று கூடுதலாக விதைப்பான். அதுக்கு மேல அவன் ஆசைப்படுவது கிடையாது.
வயல் விதைப்பைத் தவிர பவுணுக்குப் பிடித்தமான தொழில் அல்லது பொழுது போக்கு வேட்டை. ஆறு ஏழு வயதிலேயே பழகிய தொழில் அது. அதில் அவன் பக்காக் கெட்டிக்காரனாகவும் இருந்தான்.
பவுணின் வீட்டில் காட்டிறைச்சி இருக்காத நாட்களே இல்லை. வெள்ளி, செவ்வாய் எல்லாம் அவனுக்குக் கிடையாது. ஆனால், பொங்கல், திருவிழாக்காலங்களில் அவன் துவக்கே தூக்கமாட்டான். அவனிடம் பெல்ஜியம் 304 – 10 ஆம் நம்பர் சொட்கண் இருந்தது. அது அவனுடைய விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றியது. ஊருக்குள் அவனுக்கென்றொரு பேரையும் பெற்றுக் கொடுத்திருந்தது.
இவ்வளவும் போதும் அவனுக்கு. உலகத்தின் பெருங்கோடீஸ்வரர்களில் ஒருவராக தான் வரவேணுமென்று ஒரு போதும் எண்ணியதுமில்லை. விரும்பியதுமில்லை.
வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கலுக்கு, காட்டா விநாயகர் கோவில், ஒட்டுசுட்டான் சிவன் கோவில், தண்ணீரூற்றுப் பிள்ளையார் கோவில், முள்ளியவளைக் கல்யாண வேலவர் கோவில் திருவிழாக்களுக்கு செலவழிக்கக் காசிருக்க வேணும். குமுழமுனையிலோ முள்ளியவளையிலோ வற்றாப்பளையிலோ ஆண்டு தோறும் ஆடுகின்ற கூத்துகளுக்கு என்று கொடுக்கவும் செலவழிக்கவும் கூடிய மாதிரியும் இருக்கோணும். ஊருக்குள்ளும் சொந்த பந்தங்களுக்குள்ளும் வருகிற நன்மை தீமைகளுக்குப் போகக் கூடியமாதிரியும் கொடுத்து மாறக்கூடிய மாதிரியும் கையில ஏதாவது இருக்க வேணும்.
இதைத்தவிர, பிள்ளைகளுக்கும் மனுசிக்கும் உடுபிடவைகள். கழுத்திலையோ கையிலையோ போடக்கூடிய அளவுக்கு நகை. அவர்களின் விருப்பம் எப்படியோ ஆண்டுக்கு ஆண்டு வேறுபட்டுக் கொண்டே இருக்கும். அதுவும் பொங்கல், திருவிழாக்காலங்களில்தான் இந்த விருப்பமும் தெரிவுகளும் இன்னும் கூடும்.
சாப்பாட்டுக்குக் குறைவில்லை. வீட்டில் நெல் தாராளமாக இருக்கும். பாலுக்கும் தயிருக்குமாக மாடுகள் நின்றன. வயல் வேலைக்கு முதலில் மாடுகளையும் வண்டிலையும் வைத்திருந்தான். பிறகு அவனுக்கு அவை தோதாக இல்லை என்று கொஞ்சக் காலம் அதையெல்லாம் விற்றுப் போட்டு, பெத்தப்பாவின் மெசினை (உழவு இயந்திரத்தைப்) பிடிச்சு வயல் வேலைகளைச் செய்தான்.
ஆனால், வன்னியில் போர் பெருத்து, எண்ணை, தண்ணி எல்லாத்தையும் அரசாங்கம் தடுக்கத் தொடங்கியபோது மீண்டும் பட்டிமாடுகளையே பழக்கினான். அவனுக்கு எப்போது நிலாக்காலம் என்று தெரியும். எப்ப அமாவாசை, அட்டமி, நவமி எல்லாம் வரும் என்றும் அவனுக்குத் தெரியும். பனிக்காலம் தெரியும். மழையையும் வெயிலையும் அவனுடைய உடம்பு நல்லாகவே அறியும்.
காட்டுப் பூக்களின் வாசம் அவனுக்கு அத்துபடி. இன்ன போகத்துக்கு இன்ன வாசனை. இந்தப் போகத்தில் இந்த மரங்கள் பழுக்கும். இந்தக் காலத்தில் இன்ன பறவைகள்தான் சிறகடிக்கும். காட்டிலும் வயலிலும் இருக்கும் மண்ணின் இதமும் தகிப்பும் தண்மையும் எல்லாம் அவனறிந்தவை.
போர் வந்தபோதும் அவன் சுதந்திரமாகவே இருந்தான். இந்தியன் ஆமிக்காலத்தில் கொஞ்சம் கூடுதலாகக் கஸ்ரப்பட்டதைத்தவிர பிறகெல்லாம் அந்தளவுக்கு கஸ்ரங்களிருக்கவில்லை. ஆனால், போர்க்காலத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. எல்லாமே விலை. பொருட்கள் உள்ளுக்குள் வருவது தடைப்பட்டால் விலைஏறுமல்லவா. அதனால், அதற்காக கடுமையாக உழைக்கவேணும். அப்படி உழைத்தால்தான் சமாளிக்கலாம்.
பவுண் இரவு பகல் என்று பாராமல் உழைத்தான். ஊரோடு ஒத்து, இயக்கத்துக்கும் உதவினான். பிறகு அவனுடைய மூத்த பிள்ளையும் இயக்கத்துக்கே போனான். அது பவுணுக்கு முதலில் கொஞ்சம் கவலையாகவே இருந்தது. மூத்தபிள்ளை. அவனுக்கு உதவியாக இருக்கும் என்று அதிகம் நம்பியிருந்தவன். இப்பிடித் திடீரென்று போராடப் போய்விட்டால் அவன் எப்படி அதைத் தாங்கிக் கொள்ள முடியும்.
ஏற்கனவே பவுணின் தம்பி ஒருத்தன் இயக்கத்துக்குப் போய், இந்தியன் ஆமிக்காலத்தில காலில காயப்பட்டு செத்தவன். அதை விட மனிசியின்ர தங்கைச்சி ஒருத்தி இயக்கத்திலையே இருக்கும் போது தன்னுடைய மகனும் போயிருக்கிறான் என்று அவனுக்குக் கவலையாகவே இருந்தது.
சில குடும்பத்தில ஆருமே இயக்கத்தில இல்லாமல் எப்பிடியோ சுழிச்சுக் கொண்டு தங்கட காரியத்தைப் பாத்துக் கொண்டு போறாங்கள்.
இயக்கத்தோடiயும் அவங்கள் பரவாயில்லாமல்தான் இருக்கிறாங்கள்;. வேளியில வவுனியாவுக்கோ கொழும்புக்கோ கூட அவங்களாலைதான் சுகமாகப் போய் வரக்கூடியதாக இருக்கு. ஆனால், பவுண் வவுனியாவுக்குப் போகவே பல சந்தர்ப்பங்களில தயங்கினான்.
ஏன் சும்மா தேவையில்லாத வம்பென்று அவன் ஆரையும் தனக்குத் தோதான ஆக்களைப் பாத்து வவுனியாவுக்கு அனுப்பினான். இல்லை என்றால், அங்க போய் வாற ஆக்களிட்ட சாமானுக்குச் சொல்லி விட்டான்.
வயல்க்காணி சில காலங்களில் கொஞ்சம் சறுக்கினாலும் அவனை ஒரேயடியாய்க் கைவிட்டதில்லை. எப்படியோ சமாளித்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு ஒண்டில்லை எண்டால் இன்னொண்டு எண்டமாதிரி மாடுகள், வேட்டை, வயல் என்று இருந்தன.
ஆனால், பவுண் தன்ரை இந்த வயதுக் காலத்தில் ஆடிப்போனது 2007, 2008 க் காலப்பகுதியில்தான். சண்டை முற்றி அது தொண்டையை இறுக்கியது. அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவன் மட்டுமா அப்படித் தவித்தான்? அங்கேயிருந்த எல்லாருந்தான் தவித்தார்கள்.
பவுணுக்கு எல்லாமாக ஆறு பிள்ளைகள். இயக்கத்துக்குப் போனவனைத் தவிர இன்னும் ஐந்து பிள்ளைகள் அவனோடிருந்தன. அதை விட மனிசி, அவனுடைய அம்மா, மனைவியின் தாயார் என்று மொத்தமாக ஒன்பது பேர். போர்க்காலத்தில் அளவுக்கதிகமான எல்லாமே சுமைதான். இந்தச் சுமையைக் குறைப்பதாகவோ அல்லது இன்னும் அவனுக்குச் சுமையைக் கூட்டுவதாகவோ இரண்டாவது பிள்ளையையும் (பெண்) போருக்கு என்று சேர்த்துக் கொண்டார்கள்.
போர் முற்றி, விரிந்து கொண்டிருந்தது. சனங்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள். அவனுடைய குமுழமுனை வயல் பறிபோனது. பிறகு கருவேலங்கண்டல் புலவு. அவர்கள் முள்ளியவளையில் இருந்து வெளியேறினார்கள். அதுவொரு வெள்ளிக் கிழமை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இனி முடியாது என்ற நிலையில் அன்று காலை வீட்டை விட்டுக் கிளம்பினார்கள்.
வெள்ளிக் கிழமையில் வீட்டைவிட்டு, ஊரை விட்டுப் போகக் கூடாது என்று பவுணின் அம்மா சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டே வெளியேறினா. அவனுக்கு அப்படிக் கிளம்புவது என்ன விருப்பமா? அல்லது அந்த ஊர்ச்சனங்களுக்குத்தான் அது விருப்பமா? அங்கே இருக்க முடியாதென்றால் வேறு என்னதான் செய்ய முடியும்?
வற்றாப்பளை அம்மனைக் கும்பிட்டுக் கொண்டு, காட்டா விநாயகரை, தண்ணீரூற்றுப் பிள்ளையாரை எல்லாம் நினைத்துக் கொண்டு அவர்கள் வெளியேறினார்கள். கேப்பாப்பிலவுப் பக்கமாகப் போய் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தார்கள்.
வீட்டில் ஏராளம் பொருட்கள் விடப்பட்டிருந்தன. சாப்பாட்டுக்குத் தேவை என்று நெல், இன்னும் முக்கியமான பொருட்கள், உடுபிடவைகள் என்று அத்தியாவசியமானவற்றை மட்டும்தான் பவுண் எடுத்துக் கொண்டான். எல்லாப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு போய் ஆற்றையும் வீட்டை வைக்கேலாது. அதையெல்லாம் அங்கையும் வைக்கேலாமல், வீட்டிலையும் வைக்காமல் போற வாற இடமெல்லாம் தொலைக்க முடியாதென்று விட்டான்.
ஆனால், வேறு கனபேர், வாகனங்களில் லோர்ட் லோர்ட்டாகச் சாமான்களை ஏற்றிப் பறித்தார்கள். அப்படிப் பொருட்களைக் கொண்டு போனவர்கள் அதையெல்லாம் கொண்டு போன இடங்களில் வைக்க முடியாமல் தவித்ததைப் பவுண் கண்டான். சிலர் இந்தச் சாமான்களை ஏற்றவும் பாதுகாக்கவும் என்று போயே ஷெல் விழுந்து செத்திருக்கிறார்கள்.
பவுண் புதுக்குடியிருப்பிலிருந்தபோது ஏதோ அவனையே தேடிக் கொண்டு வருவைதப்போல ஒட்டுசுட்டான், கேப்பாப்பிலவுப் பக்கங்களால் படையினர் வந்தார்கள். அவன் அங்கிருந்து சனங்களோடு சனமாக குடும்பத்தோடு உடையார் கட்டுக்குப் போனார்.
அங்கே போய் ஒரு கிழமை இருந்திருப்பார்கள். அங்கே முதலில் ஷெல் வந்தது. ஒண்டல்ல, இரண்டல்ல. ஓராயிரம் இரண்டாயிரமல்ல. மழைத்துளியை எண்ண முடியுமா? இரத்த வெள்ளமும் ஓலக்குரலும் பவுண் குடும்பத்தை மட்டுமா அலைக்கழித்தது. தேடித்தேடி மரணப்பொறிக்குள்ளேயா வந்திருக்கிறோம் என்று அவன் யோசித்தான். அப்படி அப்போது அங்கே நின்று ஆறுதலாக யோசிக்கத்தான் முடியுமா என்பதைப்போல சனங்கள் தாறுமாறக ஓடினார்கள்.
ஒருவருக்கும் எங்கே போவதென்று வழிகள் தெரியவில்லை. எல்லா வழிழகளிலும் மரணமே சிரித்துக் கொண்டிருப்பதாகப் பவுணுக்குப் பட்டது. ஆனால், அதற்காக இப்படி, இந்த மழைக்குள் நிற்க முடியுமா?
அவன் குடும்பத்தோடு ஓடத்தொடங்கினான். அது மரண ஓட்டம். நிற்கவே முடியாத ஓட்டம். தன்னோடிருக்கும் பிள்ளைகளைப் பற்றிய கவலை.
போர்க்களத்தில் நிற்கும் பிள்ளைகளைப் பற்றிய கவலை. வுயதான காலத்தில் போகிற இடங்களில் சமாளிக்க முடியாமல் திணறுகிற தாயைப் பற்றிய கவலை. கையிலிருக்கும் காசு கரைந்து, இன்னும் இப்படி எத்தனை நாளைக்குச் சாமாளிக்க முடியும் என்ற கவலை. இனி எங்கே போவதென்று தெரியாத கவலை.
முதலில் தெரிந்தவர்களின் வீடுகளுக்குப் போனார்கள். பிறகு, பிறகு யாரும் யாரையும் தேடிப்போக முடியாது. அப்படிப் போயும் எந்தப் பிரயோசனமும் இல்லை. எங்கும் சனம் நிறைந்து விட்டது. எங்கே இருந்தாலும் எல்லாமும் ஒன்றுதான். ஒரு பிளாஸ்ரிக் தறப்பாளுக்னுகு மாறிய வாழ்க்கையில், வள்ளிபுனம், தேவிபுரம், இரணைப்பாலை (திரும்பவும் புதுக்குடியிருப்புக்கு அண்மையில் என்ற விசித்திர நிலை), மாத்தளன், பொக்கணை, வலைப்பாடு, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் என்று எல்லாத்தையும் கண்டு, களைத்து விட்டான் பவுண்.
இடையில் அவனுடைய இரண்டாவது பிள்ளை போர்க்களத்தில் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். கடைசியாக அவர்களின் முன்னிலையில் முள்ளியவளையில், அவர்கள் வீட்டில் அந்தப் பிள்ளை அழுது குழறியபடி போனகாட்சி பவுணை அலைக்கழித்தது. அவனுடைய மனிசி பைத்தியக்காரி போலாகி விட்டாள்.
மூத்தமகனை அவர்கள் காணவேயில்லை. அங்கே நிற்கிறான், இங்கே நிற்கிறான் என்ற மாதிரிச்சொன்னார்கள். கடைசியாக அவனைப் பவுண், தேவிபுரத்தில் கண்டிருந்தான். அதற்குப் பிறகு தகவலே இல்லை. ஆனால், அவன் பவுணுக்குத் தெரிந்த ஆரோ ஒருவரிடம் தன்னைப் பார்க்காமல் எங்காவது தப்பிப் போகச் சொல்லி அனுப்பியிருந்தான்.
அவன் சொன்னதைப் போல அங்கிருந்து எங்காவது தப்பிப் போகத்தான் வேணும். ஆனால், பெத்த பிள்ளையை விட்டுவிட்டு அப்படித் தப்பிப் போகமுடியுமா? அங்கிருந்து தப்பவில்லை என்றால் மிச்சம் மிகுதியாக இருக்கிற ஆக்களையும் இழக்கவேண்டி வரலாம். இதற்குள் பவுணுடைய மாமியார் வயிற்றுப் போக்கால் துவண்டு விட்டா. கடைசியில் அந்த மனுசி, வலைப்பாட்டுக் கடற்கரையில் புதைக்கப்பட்டது.
இரண்டு வேளைச் சாப்பாடு ஒரு வேளை ஆகியது. உடுப்புகள் மண்மூடைகளுக்காக மாற்றப்பட்டன. பவுண் பைத்தியக்காரர்களில் ஒருவனாகினான். போக்கிடமும் வழியுமில்லாத லட்சக்கணக்கான சனங்களில் அவன் எம்மாத்திரம்?
அவனுடைய மைத்துனி இறந்து போனதாகச் சொன்னார்கள். சாவுச் செய்திகள் எந்தப் பாதிப்பையும் எவருக்கும் பெரிதாக ஏற்படுத்த முடியாத நிலை. ஆனாலும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? இழப்பின் வலியை மனதால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாதல்லவா.
பவுண் முள்ளிவாய்க்காலினால் வெளியேறியபோது.... அவனுடைய இன்னொரு பிள்ளைக்கு இரண்டு கைகளையும் ஷெல் தின்றது. காயப்பட்ட பிள்ளையோடு வவுனியா, அனுராதபுரம், பொலநறுவை என்று அலைந்தான்.
முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறியபோது அவனுக்கு ஒரு சுமை குறைந்திருந்தது. ஆனால், இன்னும் பல சுமைகள் கூடின.
இப்போது அவன் அகதிமுகாம்களில் இருந்து வவுனியாவிலிருந்த சொந்தக்காரர் வீடுகளுக்கு மாறி, பிறகு அங்கேயிருந்து கனகராயன் குளத்துக்கு வந்திருக்கிறான்;. கனகராயன்குளத்தில் அவனுடைய அண்ணாவின் காணி இருக்கு. அங்கே பதிந்து வந்திருக்கிறான்.
வவுனியாவிலிருந்து கொண்டு அவனால் எதுவும் செய்ய முடியாது. வேறு தொழில்களும் அவனுக்குத் தெரியாது. வேறு தொழில்களைச் செய்யக் கூடிய நிலையில் வசதிகளும் இல்லை.
கனகராயன் குளத்தில் வயல் விதைக்கலாம். வேட்டைக்குப் போக முடியாது. துவக்கில்லை. மட்டுமல்ல படையினர் அனுமதிக்கவும் மாட்டார்கள். அது விண்வம்பாகியும் விடும். பன்றி வந்து முன்னால் நின்று விளையாடுது. அவனைப் பொறுத்தவரை இப்போது இரண்டு ஏக்கர் வயல் விதைத்தாலே போதும்.
அதனால், கனகராயன்குளத்துக்கு வந்திருக்கிறான். அவனுடைய சொந்த வீட்டுக்குப் போவதற்கு இப்போதைக்குப் படையினர் அனுமதிப்பார்கள் போல் தெரியவில்லை. கனகராயன்குளத்தில் 12 கூரைத்தகடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குத் தோதாக வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
போதாதென்றால் இரண்டு தறப்பாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றை நிலத்துக்கு விரித்துக் கொள்ளலாம். இன்னொன்றை கூரையாக்கிக் கொள்ளலாம். முள்ளிவாய்;க்காலில் விட்டு விர மனமேயில்லாமல் இருந்த மகன் இப்போது ஓமந்தைத் தடுப்பு முகாமில் இருக்கிறான். பவுணின் குடும்பம் மாதத்துக்கு இரண்டு தடவை அவனைப் போய்ப்பார்க்கிறது.
கேதியா விட்டிடுவாங்கள் போலக் கிடக்கு என்று ஒவ்வொரு முறையும் அவன் பவுணுக்கும் தாய்க்கும் சொல்லுவான். ஆனால், ஓமந்தையிலிருந்த சிலரை இப்பொழுது பூஸாவுக்கும் கொண்டு போயிருக்கிறார்கள். இந்தச் செய்தி பவுணுக்கு நெஞ்சிலடித்தது. தன்னுடைய மகனையும் பூஸாவுக்குத்தான் கொண்டு போவார்களோ! என்று.
இதற்கிடையில் போனகிழமை அவனுக்குத் தெரிந்த ஒருவர், வவுனியாவில் அவனையும் அவனுடைய இரண்டு கைகளும் இல்லாத பிள்ளையையும் கண்டபோது சொன்னார், ‘இந்த மாதிரிப் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தன்னுடைய நண்பர் ஒருவர் உதவிசெய்கிறார். ஆனால், நீங்கள் இந்தப் பிள்ளையின்ர பெயரில ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க வேணும்’ என.
அதுக்காக அந்தப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு பவுண் வங்கிக்குப் போயிருக்கிறான். 18 வயதான பிள்ளையின் பெயரில் கணக்கைத் திறக்கும் போது அந்தப் பிள்ளையின் கையொப்பம் வேண்டும். அப்போதுதான் வந்தது பிரச்சினை. கையெழுதிடுவதற்கு அந்தப் பிள்ளையிடம் கைகளில்லை. விரல் அடையாளத்தை வைப்பதற்கு விரல்களுமில்லை. வங்கி மனேஜருக்கு எதுவுமே விளங்கவில்லை. அதைக் கண்டு ஊழியர்கள் திகைத்துப் போய் ஒரு கணம் நின்றனர்.
அந்தப் பிள்ளை என்ன நினைத்தாளோ தெரியாது எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
பவுண் குலுங்கிக் குலுங்கி அழுதான்.
00