
எழுதியவர்_____________________________
--------------------------கருணாகரன்
------------------------------------------------------------------
நான்கு தலைமுறையினரிடையே சமனிலை குறையாமல் செல்வாக்கோடு பயணிப்பதில் வெற்றி பெற்றவர் சுஜாதா. தமிழில் இதுவொரு அபூர்வ நிகழ்ச்சி. அதிலும் சீரியஸான விசயங்களையும் தன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டு இயங்கும் ஒருவர் இவ்வளவுக்கு அறிமுகத்தையும் செல்வாக்கையும் பெறுவதென்பது தமிழ்ச்சூழலில் மிக அதிசயமானது.
சுஜாதாவைப்பற்றிய அறிதல் பல நிலைப்பட்டது என்றபோதும் அவர் ஒரு எழுத்தாளராகவே அதிகமாக தெரியப்படுகிறார். கல்வி, தொழில் போன்றவற்றில் சுஜாதா ஒரு பொறியியாளர். ஆனால் அந்தத்துறையில் அவர் பெற்ற அறிமுகத்தையும் செல்வாக்கையும் விடவும் எழுத்துத்துறை மூலம் அவர்பெற்ற செல்வாக்கே அதிகம். அதுவே சுஜாதா என்ற அடையாளம்.
ரங்கராஜன் என்ற பெயரையும் விட சுஜாதா என்ற பெயர் பெற்றிருக்கும் அடையாளத்தில் அதிகம் விமர்சனங்களிருந்தாலும் அதுவே இப்பொழுது மிஞ்சியுள்ளது. அதுவே இப்போது இந்தக்குறிப்பை எழுதும்படியான தகுதியையும் நிலையையும் உருவாக்கியுள்ளது.
சுஜாதா ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து எழுதுவது, அதிகமாக எழுதுவது என்பது தமிழில் மிகக் குறைவு. ஒரு காலத்தில் அதிகமாக ஜெயகாந்தன் எழுதினார். ஆனால் அவர் பின்னாளில் எழுதுவதையே நிறுத்திக் கொண்டார். சுந்தர ராமசாமி போன்றோர் இநுதி வரையும் எழுதியிருந்தாலும் இடையில் குறிப்பிட்டகாலம் எழுதுவதை நிறுத்தியிருந்தவர்கள். நகுலன் போன்றோர் இதில் சற்று விதிவிலக்கு. ஆனால் அவர்கள் எப்போதும் வெகுசனத்தளத்துக்கு வராதவர்கள். அதில் அக்கறையுமற்றவர்கள். இவ்வாறான நிலையில் சுஜாதா முக்கியமானவர்.
சுஜாதாவின் எழுத்துகள் முற்றிலும் சீரியஸானவை என்று சொல்லிவிட முடியாது. பொதுவாக அவரை எந்தச்சிற்றிதழும் தங்களுடைய எழுத்தாளராக ஏற்றுக் கொண்டதில்லை. சிற்றிதழ்ப்பண்பாட்டிலுள்ள எதிர்ப்புக்குணம் இதற்குப்பிரதான காரணம் என்கிறார் ஜெயமோகன். ஆனால் சுஜாதாவின் கணிசமான கதைகளும் அவருடைய எழுத்தின் விளைவான பல விசயங்களும் தமிழ்ப்பரப்பில் முக்கியமான இடத்துக்குரியது.
மிகச் சிறந்த தமிழ்ச்சிறுகதைகளில் சுஜாதாவின் சிறுகதைகள் சிலவற்றுக்கு நிச்சயம் முக்கியமான இடமுண்டு. அதைப்போல அறிவியற் கதைகளிலும் சுஜாதாவே தமிழில் முன்னோடியாக உள்ளார். அவர் நூற்றுக்கணக்கான அறிவியற் கதைகளை எழுதியிருந்தாலும் அவற்றிற் பல அறிவியல் விதிகளுக்கு பொருந்தாத மிகு கற்பனைக்கதைகள் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னதான் இருந்தாலும் சுஜாதாவே தமிழில் அறிவியற் கதைகளின் முன்னோடியாக நமக்கு உள்ளார். அதைப்போல அறிவியல் விசயங்களை இலகு படுத்தி பெருவாரியான தமிழர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர் அவர்தான். இதற்கு அவர் எப்போதும் பெரும் ஊடகங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதுதான் காரணம். வணிக ஊடகங்களில் அதிகம் எழுதியதால் வியாபார ரீதியான குறியே எப்போதும் அவருடையது என்று ஆதாரப்படுத்துவோரும் உண்டு. இந்தக்குற்றச்சாட்டில் நியாயமுமுண்டு.
ஆனால் வணிக இதழ்களினூடாக அவர் பல விசயங்களையும் பெருவாரியான மக்களுக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார் என்பதையும் மறுத்து விட முடியாது. புதுமைப்பித்தன், அழகிரிசாமி, நகுலன், பிரமிள், அம்பை போன்ற தமிழின் முக்கிய படைப்பாளிகளைப்பற்றி பெருவாரியான சனங்கள் அறியக்கூடிய அறிமுகங்களை அவர் தன்னுடைய எழுத்தின் மூலம் செய்திருக்கிறார். அதைப்போல அவர் இலங்கை நிலவரங்களையும் ஈழப்படைப்புகளையும் தெரியப்படுத்தி வந்திருக்கிகறார்.
குறிப்பாக யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதையொட்டிய பதிவாக ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதையை எழுதி லட்சக்கணக்கான தமிழர்களிடம் அந்தக் கொடுமையான துன்பியல் நிகழ்வை தெரியப்படத்தினார். அவ்வாறு பின்னர் வெளிவந்து கொண்டிருந்த ஈழத்தின் முக்கிய மான புத்தகங்கள் படைப்புகளை எல்லாம் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் ஈழப்போராட்டம் பற்றிய எந்த விதமமான அபிப்பிராயத்தையும் அவர் எப்போதும் நெரடியாகச் சொன்னதில்லை என்ற வொல்வோரும் உண்டு.
ஈழப்போராட்டம் பற்றி மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய பிரச்சினைகள் எதனைப்பற்றியும் எந்தவிதமான முடிந்த முடிவுகளையும் சொல்லும் இயல்பை அவர் ஒரு போதும் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தின் தலித் விவகாரங்களைப்பற்றிய பார்வைகளையோ பெரியாரியம் பற்றிய கரத்துகளையோ தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்த பகுத்தறிவுவாதத்தைப்பற்றியோ சுஜாதா எப்போதுமே எதுவும் கூறியதில்லை.
அவர் தன்னுடைய பயணப்பாதையை வேறொரு வகையில் வைத்துக் கொண்டார். எல்லாவற்றைப்பற்றியும் பேசுவார். ஆனால் எதிலும் சிக்குப்படாமல் பேசும் ஒரு உத்தியை அவர் பின்பற்றினார். அவருடைய இந்தக்குணம் பற்றி பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தபோதும் அவர் அவற்றின் வலைகளில் வீழவில்லை.
தமிழகத்தின் அரசியலும் பண்பாட்டு நடவடிக்கைகளும் கேளிக்கை மயப்பட்டுக் கொண்டு போவதை தன்னுடைய எழுத்துகளில் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் தெரிவித்துவந்தாரே யொழிய அவற்றுக்கெதிரான விமர்சனங்களை அவர் வெளிப்படையாக வைத்ததில்லை. இதற்கான காரணம் அவர் வெகுசனத்தளத்திலான வணிக ஊடகங்களில் இயங்கியது. அடுத்தது அவர் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளின் உருவாக்கிகளான அதே ஊடகங்களில் சிறபை;பட்டிருந்தது. அல்லது அவற்றில் அவர் தங்கியிருந்தது.
குறிப்பாக சுஜாதா இயங்கிய சினிமா என்பது இதற்க நல்ல உதாரணம். 1977 காலப்பகுதியில் கமலஹாசன் ரஜனிகாந்த நடித்த கே.பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும் என்ற படத்திற்கு திரைக்கதை வசனத்தை எழுதியதிலிருந்து இதுவரையில் ஏறக்குறைய முப்பதுக்கு மேலான படங்களுக்கு திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார் சுஜாதா. இறுதியில் ரஜனிகாந்தின் சிவாஜி படத்திற்கான திரைக்கதையை எழுதியிருந்தார். இப்போது சங்கரின் ரோபோ என்ற புதிய படத்துக்கும் அவரே திiரைக்கதை வசனத்தை எழுதுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. தன்னுடைய திரைக்கதை வசனம் எழுதும் அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர் திரைக்கதை என்றால் என்ன என்ற ஒரு புத்தகத்தையே எழுதியுமிருந்தார்.
இதைப்போல சுஜாதா கைவைக்காத துறைகளே எழுத்தில் இல்லை. மாணவர்கள், இளைஞர்களை மையமாக வைத்து அவர் பல அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் பிரசுரமாக வெளிவந்த ஏன், எதற்கு எப்படி என்ற புத்தகம் இதில் முக்கியமானது. கேள்வி பதில் மூலம் அறிவியல் ரீதியாக பல விசயங்களை இதில் அவர் பேசியிருக்கிறார். அவருடைய பகுத்தறிவுப்பார்வை என்பது எதையும் அறிவியல் விளக்கத்துக்கு உட்படுத்தும் கல்வி சார்ந்த நடவடிக்கையாக அமைந்தது. இது தவிர பல நாவல்கள் துப்பறியும் நாவல்களாகவும் அறிவியல் கதைகளாகவும் நகைச்சுவைக்கதைகளாகவும் அமைந்தவை.
இந்த எழுத்துகள் அதிகம் ஆழமான வாசிப்புக்குரியவை இல்லை என்ற போதும் இவற்றில் சசில முக்கியமானவை. குறிப்பாக சிறிரங்கத்துக் கதைகள், சுஜாதாவின் தேர்ந்த சிறுகதைகள் மற்றும் அறிவியற் கதைகள் என்பவை இதில் உண்டு.
பொதுவாக சுஜாதா எப்போதும் தன்னை தமிழின் அதிகார, வெகுஜன, பிரபல சக்திகளுடன் தெளிவாக அடையாளம் காட்டிக் கொண்டதுதான் அவரை ஆழமான படைப்பாளியாக உணர முடியாமற் போய்விட்டதாக இன்னொரு இடத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். படைப்பாளிக்குரிய கலகத்தனத்துக்கு இந்த அதிகார வெகுஜன பிரபலத்தளம் ஒரு போதும் விட்டுக் கொடாது. சுஜாதா நல்ல எழுத்துகளை, நல்ல இசையை, தரமான ஓவியங்களை, நல்ல சினிமாவை, நல்ல இலக்கியத்தை அடையாளம் கண்டவர். அவற்றை தெரிந்தவர். அவற்றை நோக்கி தமிழ்ச்சமூகம் நகரவேண்டும் என்று விரும்பியவர். ஆனால் நடைமுறையில் முடிவில்லாத சமரசங்களுக்கு உட்பட்டவர். எல்லாவற்றுக்கும் ஏதொ வகையில் ஒத்தோடியவர்.
அவருடைய இந்த இயல்பு அவரை வணிகத்துக்கும் சீரியஸ_க்குமிடையில் முடிவில்லாத அளவில் அலைத்துக் கொண்டிருந்தது. அவர் இதிலா அதிலா என்று அடையாளம் காண்பது வரையில் இந்தநிலை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
சுஜாதா கணையாழியில் எழுதியிருக்கிறார். அவருடைய நூல்கள் உயிர்மை பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. அவர் கடந்த காலங்களில் நவீன இலக்கிய நூல் வெளியீடுகளில் பங்கேற்றிருக்கிறார். இளைய தலைமுறைப் படைப்பாளிகளிடத்தில் நட்பையும் அறிமுகத்தையும் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துநடை தமிழில் ஏற்படுத்திய தாக்கமே. எளிமையான புதிய சாதாரண சொற்கiயும் தெறித்துச் செல்லும் வேகமுடைய எழுத்து நடை சுஜாதாவினுடையது. இந்த நடை அவருக்குப்பின் வந்த பெரும்பாலான படைப்பாளிகளிடததில் அதிக செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது.
இது அவரை புதிய தலைமுறைப்படைப்பாளிகளுடன் இணைவு கொள்ள வைத்தது. அத்துடன் அவர் உலகின் எந்த விவகாரத்தையம் தமிழுக்கு உடனே கொண்டு வந்து விடும் விரைவைக் கொண்டிருந்ததும் இன்னொரு காரணம். சுஜாதாவுக்கு நவீன இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டளவக்கு சங்க இலக்கியத்திலும் பரிச்சயமும் ஈடுபாடும் இருந்தது. அவர் சிலப்பதிகாரம் திருக்குறள் சங்கப்பாடல்கள் எனப்பலவற்றை எளிமையாக விளங்கிக் கொள்வதற்கான உரைகளையும் மொழிதலையும் செய்திருக்கிறார்.
இவ்வாறு எல்லா நிலையிலும் ஒரு வினோதமான கலவையாக உருவாகியிருந்த சுஜாதா தன்னுடைய எழுபத்தோராவது வயதில் காலமாகிவிட்டார். அவருடைய மறைவுக்குப்பிறகு அவரைப்பற்றி எழுதாத பத்திரிகைகளோ செய்தி வெளியிடாத ஊடகங்களோ தமிழில் இருக்கவில்லை.
அவருடைய இறுதி நிகழ்வில் குழு, கட்சி பேதங்களில்லாமல் எல்லாத்தரப்பினரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்ததையும் சிவாஜி பட வெற்றி விழாவின்போது அவர் மேடையில் தனக்கு அந்த விழாவில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப்போல வெறித்தபடி இருந்த காட்சியும் இப்போதும் நினைவில் நிற்கின்றன. அவை சொல்லும் சேதிகளும் ஏராளம்.
-----------------------------------------------------------------