Tuesday, December 18, 2007

கருணாகரன் கவிதைகள்

எழுதியவர்: கருணாகரன்

01.கருணையில்லாத பிணம்

கருணையில்லாத பிணம்
எல்லோரையும்
கதறியழ வைக்கிறது
அன்பின்றி
சிறு நன்றியுமின்றி

சாவின் களை நிரம்பிய முற்றத்தில்
துக்கம் பூத்து
படர்கிறது வாசமாய்
பேரிசை கொண்டெழுகிறாள்
ஒப்பாரிப் பெண்
உயிரைத் தேடி
அசைவைத் தேடி

எந்தக்குரலுக்கும் பிரதிபலிப்பின்றி
கரையமுடியாதிருக்கிறது
மயானம்

முடிந்தது ஒரு பயணம்
விலகியது மந்தை
கூட்டத்தில் பெரும் பள்ளமாய்
துக்கத்தின் மறை பெருக்கி

மிஞ்சிய கனவில்
தீ மூழுமா
புல் முளைக்குமா
வெற்றிடத்தில் அமர்கிறது காகம்
பிதிர்ச் சோற்றுக்காய்
கரைந்து
பாடல் பாடியவாறு

போய்ச்சேர்ந்த பிறவிக்காய்
இறுதி நேரப்பரிசை
அழாது கொடுக்க யார் வருவீPர்
இறுதி விடை பெற்றபின்னும்
துக்கத்தோடா
வழிவிடுவது
ஒரு துளி சிரிப்பையொலிக்க
யாராலும் முடியவில்லை
தோற்றது போ
இவ்வுலகம்

துடிக்கும் மரக்கிளையில்
காற்றை விலக்கி
அமரும் குருவிகள்
யாதறிந்தன
இந்த மரணப்பொழுதைப்பற்றியும்
விடை பெற்ற பயணி குறித்தும்
-------------------------------------------------


02.இனிச் சொல்ல முடியாது


மேற்குச் சூரியன் மறைகிறது
இருள் மணக்கும் வனத்தில்
உதிர்ந்த சிறகுகளின் குவியல்.
மாமிச நெடில் வீசும்
மரங்களில் எழுதிய பெயர்கள்
வேட்டைக்காரனை ஞாகப்படுத்துகின்றன

கண்காணாத தேசத்து பரிவாரங்களின் பரிகாசத்தில்
செய்வதற் கெதுவுமின்றி
முழந்தாள்களில் தலையை வைத்து
மண்டியிட்டழுதாள் தேவி
பெருந்தேவி

கொக்குகள் பறந்து திசை பெயர்ந்த
மாலையில்
வயற் கொட்டிலில்
புகை மெல்லக் கிழம்பி வர
மூள்கிறது நெருப்பு

உடுக்கொலி நிரம்பும் வயல் வெளியில்
முன் பனிக் குளிர் வாட்;ட
கொடுகிக்கிடக்கும் கிழவனின் காதுகளில்
தேள் கொட்டியது

வடக்கே பெரும் பீரங்கி முழக்கம்

ஆயிரம் தலைகொண்ட நாகம்
படமெடுத்தாடும் சந்நதத்தை
காட்டின் நாயகி கண்டு துணுக்குற்றாள்

கொல்லைப்புறத்தில்
மருத மரங்களில்
கூடிய பறவைகள் சிதறித் தெறிக்க
இருள் விழுங்கிய
தாமரைக் குளத்தில்
மருத மரங்கள் பாறி வீழ்ந்தன

சனங்களின் குரலால்
நிறைந்த வானத்தில்
எந்த நட்சத்திரமுமில்லை
கண்ணறிய.

புயல் கொண்டு போகிறது
கையிலேந்திய
ஒரு சொட்டு நீரையும்
---------------------------------------


03.இரவுக்கரை

இன்றிரவு
பெயர்ந்து
ஒரு பகலிடம் போய்ச்சேர்ந்தபோது
நானிறங்கினேன்
அதிலிருந்து பதற்றத்தோடு


நகரம்
நாய்களால் நிரம்பியிருந்தது
ஒரேயொரு நாயினால்

படைத்தளபதிகள்
பீரங்கிகளோடு சம்பாஷித்துக் கொண்டிருக்கையில்
இரகசியமாக
பனைகளின் மறைவில்
நகர்ந்து கொண்டிருந்த சூரியனுக்கு
ஒரு சிப்பாய் குறிவைத்தான்

சிதறித் தெறித்தன பல்லாயிரம் பனைகள்

நகரத்தில்
புழுக்களுக்கு வணக்கம் சொல்லி
வரவேற்றான் படைத்தளபதி
ஒரு விருந்துக்காக
துளிரும் இலைகளின் மேல்
புழுக்கள் கூடுகட்டின

யாரும் கவனிக்கவில்லை
பீரங்கிகளிலிருந்து இரத்தம் வடிவதையும்
கண்ணீர் பெருகுவதையும்

அப்போது
அலறியபடி வந்த சிப்பாய்
தளபதியின் காலடியில்
மண்டியிட்டழுதான்
அந்தப்பீரங்கிகளில் ஒன்றையேனும்
தந்ததால்
நீர் பெய்து தன்வம்சம் பெருக்கும்
திறன் பெறுவெனென்று

கூடிய தளபதிகள்
சிப்பாயை
முறிந்த பனைகளின் கீழே
புழுக்களிடம் பரிசளித்தனர்
முற்றிய பகலில்
திணறிக் கொண்டிருந்தன
முந்தைய இரவும் வரத்தயங்கும் இரவும்

என்னை எங்கும் காணவேயில்லை
-----------------------------------------------



04.பீரங்கியின் குழல் வாய் மொழி

அடங்க மறுக்கும் சிறு குரலை
மறைத்து வைத்திருந்தேன்
பதுங்கு குழியின் இடுக்கினுள்
பீரங்கியிடம் அது சொல்லவிருந்த
சில வார்தைகளையும்
கேட்கவிருந்த சில கேள்விகளையும்
நான் களவாடினேன்
நிகழக்கூடிய அபாயம் கருதி

ஐயாஇ ஒரு போதும் எதற்கும்
அடங்கியதில்லை
நெஞ்சறிந்த உண்மையை யன்றி

நானோ
ஒரு பல்லியாகிச் சுவரில் ஒட்டினேன்

அது பகல்
தீரா விடாய் கொண்ட பகல்
தேவாலயங்கள் இடிந்து வீழ்ந்த
அப்போதில்
இடிபாடுகளில் புறாக்களும்
பிரார்த்தனைகளும் சிக்கிய வேளை
பீரங்கிகளின் குழல் வாய் மொழியைக் கேட்டேன்
அருகில்
மிக அருகில்

யம சேனை
என்னை மிதித்துச் சென்றது
போதையுடன.
பெருகிய குருதியில்
தாகம் தீPர்த்த பகல்
கள்வனைப்போல் இரவிடம் பதுங்கியது

இதோ சிதறிக்கிடக்கிறது
கோவில் மணியோசை
இறுதி நேரப்பிரார்த்தனையின்
கடைசிச் சொற்கள்

இனித் தேவனைப்பாட
சொற்களிருக்குமா
பிரார்த்தனைகளிருக்குமா

ஆயிரமாயிரம் சுடர் கொண்ட விழிகளோடு
வானத்தை வெறித்தபடியிருக்கும்
சிறுமியின் அருகில்
பெயர்ந்து கொண்டிருந்தது
மிஞ்சிய நம்பிக்கையும்
அவள் சேகரித்து வைத்திருந்த எதிர்காலமும்.

பிளந்து கொண்டு போகிறது
பூமி
என்னிடமில்லை
அடங்க மறுத்துத் திணறிய அக்குரல்
இப்போது
---------------------------------------------------


05.சூடிய போதில் மாலை

ஒரு மாலை கொண்டு வா
பீரங்கியின் கழுத்தில் சூடலாம்
சாவின் தீரப்பசியுடைய
பெருந்தேவன் இதுவல்லவா

இந்தப்பகலை
கொய்து
சுவரில் அறையுங்கள்
ஒரு பகலில் எதுதான் தோற்கும்
எதுதான் வெல்லும்
வாழ்வைத் தோற்கடித்த
மரணத்தின் முன்னே இரவென்ன பகலென்ன
சிலுவைக்கருகில் சாவின் பிணமும்
சேகரித்த சிரிப்பும்
தனிமையில்

மரங்கள் பைத்தியமாகி
நடந்து திரிகையில்
இதோ வசந்தம்
கண்களிலிலிருந்தும் மரங்கள் பூக்களிலிருந்தும்
பெயர்க்கப்பட்டு வருகிறது

மனதை விழுங்கி
வேண்டப்படாத மௌனத்தை
பரப்பி இருக்கும்
அந்தச் சனங்களிடம்
ஒரு வார்த்தைஇ ஒரேயொரு வார்த்தை
பெற்றுக் கொண்ட பிறகு
மெல்ல வாருங்கள் இந்தப் பீரங்கிக்கருகில்

அவனுடைய தோலில்
முழங்கப்படும் பேரிசைக்காக
காத்திருக்கும் வேதனையுடைய காலையே
நடுங்கும் கரங்களோடு
அலைகிற காற்றுக்கருகிலே
மூர்ச்சையற்றுக் கிடக்கிறாள்
அவனுடைய தாய்
ஒரு தகர்ந்து போன பாலமாய்

எங்கே பாண்காரன்
இலையான்களை விட்டுச் சென்றது
கருணையில்லாத பிணம்

பசியின் கூடாரத்துள் வெற்றிக்கொடிகளை
களவாடிச் சென்ற
வெளியாட்களை தேடப்பொனது யார்

காட்டு வழியில் சூடிய மாலைகளோடு நின்ற
பீரங்கிகளில்
மோதி வீழ்ந்தவர் யார்
சருகுகளில் வேர் கொண்டெழுகிறது
காடு
இந்த வேதனைகளில் பற்றியெரியும்
என்னுடலை தீயுடன் தருகிறேன்
யாராவது கொண்டு செல்லுங்கள்இ எங்காவது

படையாட்களிடம்
பூக்களையும் பொம்மைகளையும்
கடந்த காலத்தையம் கொடுத்து
ஒரு படைவிருத்தியைச் செய்வோம் என்ற
வழிப்போக்கனை தேடுகிறேன் விருந்துக்காக
காலம் அவனைப் பணிக


நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும்
ஓட்;டை போடும்
நுட்பத்துக்காக
பரிசளித்துக் கொண்டிருக்க முடியுமா எப்போதும்
படைக் கென்றாள்
பாலகி

யாருமில்லை இந்த வெளியிலும் இருட்டிலும்

தனித்தேயிருக்கிறது
வழி
ஒளியுமின்றி இருளுமின்றி
ஒரு சிதறிய கண்ணாய் …
------------------------------------------

Sunday, December 16, 2007

கருணாகரன் கவிதைகள்

எழுதியவர்: கருணாகரன்
--------------------------------------------------

பரிசு

மணல்வெளிக் கோயிலில்
பாடுகளைச் சொல்லி
மன்றாடும் பெண்ணிடம்
வழிபாட்டின் ரகசியம் என்னவென்று
கடவுள் கேட்டார்

அந்த அதிகாலையில்
கடவுளின் குரல்
அவளுடைய செவிகளை அண்ட விடாது
பெருகிய போரொலி
கடவுளைத் தொடர்ந்து பேசவிடவில்லை
கடவுள் ஏதேதா சொல்வதை
அவதானித்த அவள்
அவரை நெருங்கிப்போய்
அருகிருந்து விவரம் கேட்க முனைகையில்
பார்த்தாள்
பதுங்கு குழிக்கருகில்
கடவுளின் அங்க வஸ்திரம் தனியே கிடந்தது
அவளதை தீண்டிட முன்னே
அவளைச்சுற்றி
ஒரு பாம்பாக வளைந்த தது
பிறகு
மேலெழுந்து போனது
எங்கோ

அவள்
தேவாலயத்தின் சுவர்களில்
தன்னுடைய தலையை மோதி அழுதாள்
தனக்கும் கடவுளுக்கு மிடையிலான
பந்தத்ததை சாட்சியாக வைத்து

பிறகு
மணல்வெளித் தேவாலயத்தில்
கடவுள்
நீண்ட நாட்களாக வர முடியாதிருந்தார்
அவளுடைய குரலும் வேதனையும்
அங்கிருக்கென்று

தேவாலயத்தில் நிரம்பிய
அவளுடைய குரல்
மணல்வெளியில் சுவறிக் கொண்டிருக்கிறது
-------------------------------------------


சிலுவை, இறுதி முத்தம், உண்மை, தண்டனை
என்றவாறானவற்றுக்கான முகாந்திரம்


மாம்பூக்கள் நிரம்பிய முற்றத்தில்
இன்று கோலமில்லை
கண்ணீர்த்துளிகளைப் பெருக்கிய காலையில்
ஒரு
மூடப்பட்ட சவப்பெட்டி
கடக்க முடியாத நிழலாய்
சாட்சியாய் வைக்கப்பட்டிருக்கிறது
எனக்கும் உங்களுக்குமிடையில்

ஓலங்கள்
அழுகை
கோபம்
வசைகள்
மன்னிப்பில்லை
மகிமையில்லை
பெருந்துக்கத்தின் முன்னே
எல்லா வேஷங்களும் களையப்படுகின்றன
அவர்களை
அழவிடுங்கள்
அவர்கள் வசைபாடட்டும்
அவர்கள் அப்படித்தான்
உண்மையைப்பேச விரும்புகிறார்கள்.
உண்மையைப் பேசுவதற்காக
ஒரு உயிரைக் கொடுத்தே ஆகவேண்டியிருக்கிறது
அதுவும் இந்தக்கணத்தில் மட்டுமே
அவர்களால் அப்படிப் பேசமுடியும்

திறக்கப்படாத சவப்பெட்டியில்
ஒரு சாவியுண்டு
அதுதான் இப்போது
உண்மையைத்திறக்கிறது
-------------------------------------------

தூக்கு மேடையில் வைக்கப்பட்ட
வாக்கு மூலம்


எனக்கு
சாட்சியங்களில்லை
நிம்மியுமில்லை
இதோ
எனக்கான தூக்கு மேடை
இதோ எனக்கான சவுக்கு
நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
உண்மையைக்கண்டறியுங்கள்
தயவுசெய்து கண்டறியுங்கள்
அதன்பிறகு
என்னைப்பலியிடுங்கள்
அதற்காக நான் மகிழ்வேன்
உண்மைக்காக என்னைப்பலியிடத்தயாராக இருக்கிறேன்.

அதுவரையில் நான் சாட்சியாக
இருக்க விரும்புகிறேன்

நல்ல நம்பிக்கைகளை
உங்களிடம் சொல்வேன்
எதுவும் பெரியதில்லை
எதுவும் சிறியதுமில்லை

நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை
எந்த விசமும் படர்ந்ததில்லை
என் நிழலில்

உண்மையைக் கண்டவன்
அதைச் சொல்லாதிருப்பது
மாபெரும் பாவச் செயலாகுமல்லவா
தண்டனை;குரிய தல்லவா

எனவேதான் உண்மையைச் சொன்னேன்
பாவங்களும் தண்டனையும்சேராதிரக்கும்படியாக
அதையே நான் செய்தேன்
அதையே நான் செய்தேன்
இதில் உங்களுக்குண்டா பேதங்கள்

நான் உங்களில் ஒருவன்;
அன்பின் கூக்குரலை
நான் ஒலித்தேன்
நாம் தோற்கடிக்கப்படலாமா
என்னைக் கோவிக்காதே
என்னைக்கோவிக்காதே

நான் சொல்வதைக்கேளும்
நான் சொல்வதையும் கேளும்

உண்மைகளை நாம் ஒரு போதும்
அழியவிடலாமா
உண்மைக்குச் செய்யும் அவமானம்
நம்மைத் தூக்கு மரததில் நிறுத்தும்

நமது நாக்குக்கசக்கிறது
நமது கால்கள் வலிக்கின்றன
நமது வயிறு கொதிக்கிறது

என்ன செய்ய முடியம்
அவற்றுக்கு
மன்னிப்பா
ஆறுதலா
தண்டனையா

காலத்திடம் சொல்லு
இன்னும் இன்னுமாய்
-------------------------------------------

கடுங்கோடை


தேனெடுக்கத் தவிக்கும் ஊரில்
கோடை விளைந்த வயலிடைக்கண்டேன்
பசியுமிழும் கண்களோடு
இரண்டு சிறுவர்களை

கன்னங்களில்
இருள்குவிந்த போதிலும்
நெருப்பாயிருந்த கண்களில்
தகித்தது
தீரா வெக்கை

பெருகிய கோடையை
மேயும் மாடுகள்

முலுட்டுப் பூவரசம் மரங்களில்
எல்லா மகிழ்ச்சியோடும்
எல்லாத் துக்கத்தோடும் புலுனிகள்

காற்றள்ளி வந்த கோடையின் குரலை
வாங்கியதா வெளி
ஏந்தியதா பனை
இரைச்சல்
கோடையின் பேயிரைச்சல்

வெக்கையில் அனுங்கும்
வயல்வெளியில் பெருவிசமாய்
அனல்மேயும்
அப்பொழுதில்
வடலிகளில் தாவும்
அணில்களும்
அந்தச்சிறுவர்களும்
வானத்தின் கீழே
பிரமாண்டமாயினர்
புலுனிச்சத்தத்தின் பின்னணியில்
-------------------------------------------

தாமரைக்குளத்தில் இறந்த மனிதனும்
பூத்த தாமரைகளும்


தாமப்பா குளிக்கப்போனபோதும்
தாமரைக்குளம்
பூத்திருந்தது
மருத மரநிழலில்
தண்ணீரும்; படு குளிராக இருந்தது
பகல் முழுதும்
தாங்கொணாச் சூரியன்
நெருப்பையவிழ்;த்தபோதும்
தாமரைக்குளத்தில்
தண்ணீர் குளிராகத்தானிருந்தது.

தாமப்பாவுக்கும்
தாமரைக்குளத்துக்கும்
கோடி சம்மந்தம்

எந்த ரகசியங்களையும்
தாமரைக்குளத்திடம்
மறைத்ததில்லை
அவர்
முப்பது வருசமாய்

காலைக்குளியல்
மாலை நீராடல்
கண்ணன் கோயில் தீர்த்தத்தில்
கரையெல்லாம் தாமரைகள்
பூக்களும் மொட்டுகளுமாய்
தாமப்பாவோடு

ஒரு பின்னேரம்
தாமப்பா மட்டும்
தாமரைக்குளத்தில்

குளம் அவரைக் கொன்று விட்டதா
தாமப்பா குளத்தில் மூழ்கி இறந்தாரா
-------------------------------------------


யாரும் யாருக்காகவும் இல்லை

யாரும் யாருக்காகவும் இல்லை என்றபோது
இந்தப்பூமியில் இல்லை
பாதாளமும்
கோபுரமும்

நான் தேடினேன்
பாற்கடலை
அவன் தேடினான்
விசமலையை
கலசங்கள் உடைந்து வீழ்கின்றன

இருக்கட்டும் வான் வெளியில் பறக்கும்
நமது கனவுகளும்
பொய்யும்

கண்ணீரில் பிரதிபலித்த
முகங்களை
கடக்க முடியாமல் திணறிய
ஒரு காலம்
பழி நிரம்பி உறைந்தது


வழியற்ற வெள்ளாடுகளை
வேட்டையாடுகிறது
காடு

நான் நெருப்பைத்தின்கிறேன்
பாழும்
சேற்றில் நாற்றமெடுக்கும்
புழுக்களோடென்னை
பழகவைக்கிறேன்

இசை ஒரு நொருங்கிய
பாத்திரமாக சிதறிக்கிடக்கிறது
காற்றில் பரவுகின்றன
நெருப்புத்துகள்கள்

நாயெங்கே பூனையெங்கே
என் காலை இழுத்துக் கொண்டு போகின்றன
கரப்பான் பூச்சிகள்
பங்கருக்குள் இருள்
இருளுக்குள் இருக்கிறது பாம்பு
பங்கருக்கு மேலேயும் சுற்றுகிறது பாம்பு
சிறகோடு
-------------------------------------------

திரும்ப முடியாத திசை

ஒரு நூலில் ஆடுகிறது
நாடகம்
கலக்கத்தின் முனை
இன்னும் கூர்மையடைகிறது

இரத்தத்தை ஊற்றிவிட்டு
பாத்திரத்தைக்கழுவுகிறான் கடைக்காரன்
இலையான்கள் தூங்கப்போய்விட்டன
நான் முழித்திருக்கிறேன்
நினைவில் வருகிறாள் லோத்தின் மனைவி
அழமுடியாமலிருக்கும் அக்மதோவா
யாரிடமும் பேசவில்லை
ரஞ்சகுமாரின் கோசலை
இன்னும் விம்மலை நிறுத்தவில்லை.

திரும்ப முடியாத திசையில்
சென்றுவிட்டது படகு
மலையுச்சிக்கு வா
கல்லிலும் மரம் நிற்கும் அதிசயத்தை
சொல்லும் உன் கண்கள்

கடலின் ஆழத்தில்
தேங்கி நிற்கிறது இரத்தத்துளிகளும் கண்ணீரும்
கரைய முடியாததுயரமும்
அவர்கள் திட்டிய
வசையும்

சாம்பல் மேட்டில்
காத்திருக்கிறான்
புலவன்
இரவு
அவனிடம் விடை பெற மறுக்கிறது
காலையைச்சந்திக்க அதனிடம்
எந்த வலிமையும் இல்லை
இன்;னும் வீசிக்கொண்டிருக்கிறது
பிணத்தின் வாடை

எங்கே அந்தக்காகங்கள்
கடற்கரையில்
பாடமறுத்த தேவனை
அவர்கள் சிலுவையிலறைந்தபோது
எழுந்த குரல்
அந்த மண்ணில் சுவறிவிட்டதாக
அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள்.

திடுமுட்டாக வந்த விருந்தாளியை
அழைத்துப்போய்
மாப்பிளையாக்கினாள் காதலி
பள்ளிக்குப் போக மறுத்த பிள்ளைகளை
கூட்டிச் செல்கிறான்
ஊராடி
-------------------------------------------



எதிர் முகம் நேர் முகம்

தாகத்தின் ஒளியும் நிழலுமாய்
என்னிடம் வந்தாய் அன்று
நிழலுமில்லாத
வெயிலுமில்லாத
ஒரு பின்னேரம்
ஒழுங்கையில் நாம் சந்தித்தோம்

யாருக்கும் தெரியாமல்
நினைவுகளையும் ரகசியங்களையும்
எடுத்துவந்திருந்தாய்
என்னிடமிருக்கவில்லை
துக்கத்துக்கும் மகிழ்ச்சிக்கு மிடையிலான பாலம்
நம்பிக்கைக்கும்
நம்பிக்கையின்மைக்கு மிடையிலான
தொடுப்புகள்.

பூவரசம் மரங்கள் காற்றில் அசைந்தன
தூரத்தில்
பனைகளின் பின்னே
நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது
மாலைச் சூரியன்

நான் இன்னும் சிறுவனா
இல்லை
நீதான் இன்னும் சிறுமியாக இருக்கிறாயா
அல்லது
இருவருமே சின்னஞ்சிறுசுகளாகத் தானிருக்கிறோமா
காலம் எங்கே
மறைந்தது.

காற்றுக் குதூகலித்து முத்தமிடுகிறது
பூரசமரங்களை
நீ தவிக்கிறாய்
பனைகளின் பின்னே
வானத்தை நிறம் மாற்றுகிறது
சூரியன்

இந்த ஒழுங்கையில்
மணலின் மேலே
இரண்டு குருவிகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன
அந்த மாலையில்

தாகத்தின் ஒளியும் நிழலுமாய்
நீ வந்தாய்

ஒரு மைம்மற் பின்னேரம்
என் தலையைச் சீவியெறிந்தது
எதற்கான பரிசாக
எதற்கான தண்டனையாக
-------------------------------------------