-------------------------------
எழுதியவர்-கருணாகரன்
----------------------------------------------
வானத்தை நான் பார்க்கவில்லை
நட்சத்திரங்களையும் காணவில்லை
பதுங்குகுழியின்
இருளுக்குள்
வீழ்ந்த வாழ்வின்
சருகு நான்
சூரியன்
வந்ததா சென்றதா
நானறியேன்
நிலவின் ஒளியும்
மறந்து போயிற்று
நிலம் அதிர்கிறது
குருதியின் மணத்தையும்
மரணத்தின்அருகாமையையும்
உணர்கிறேன்
கந்தக நெடில்
கபாலத்தைப் பிளக்கிறது
வீரர்கள்
முழங்கிக்கொண்டேயிருக்கிறார்கள்
அழியும் வாழ்வின் பிரகடனத்தை
ஒவ்வொரு துப்பாக்கியிலும்
ஒவ்வொரு பீரங்கியிலும்
பூக்கள் இனி
எப்படியிருக்கும்
மரங்கள் மிஞ்சியிருக்குமா
பறவைகளின்
சிறகுகளில் சாவு வந்து
குந்திக்கொண்டிருக்கும்காலம்
இதுவல்லவா
இந்தப் பதுங்கு குழிக்கு
நம்
எதிர்காலத்தைக்காப்பாற்றும்
கருணையும்
வலிமையுமிருக்கிறதா
அல்லது
எதிரியிடம் பலியிடும்
ஒற்றனைப்போலக் காத்திருக்கிறதா
--------------------------------------------------
1 comment:
தோழா,
உனது சிறந்த கவிதைகளில் ஒன்றை வாசித்த எளுச்சி. உனது மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான யக்கச்சி ஆனையிறவு கட்டுரையை இணையத்தில் வெளியிடவும்.
அன்புடன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
Post a Comment